Published : 24 Feb 2020 02:14 PM
Last Updated : 24 Feb 2020 02:14 PM
வாய்ப்பு கிடைத்தால் நானும் புர்கா அணிந்திருப்பேன் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபல எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின் தனது ட்விட்டர் பதிவில் ஏ.ஆ.ரஹ்மானின் மகள் கதிஜா ஹிஜாப் அணிந்துள்ள புகைப்படத்தைப் பகிர்ந்து, "எனக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மிகவும் பிடிக்கும். ஆனால், அவரது அன்பு மகளைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவது போல் உணர்கிறேன். பாரம்பரியம் மிக்க ஒரு குடும்பத்தில் உள்ள படித்த பெண்கள் கூட எளிதாக மூளைச்சலவை செய்யப்படுவது உண்மையில் வேதனையளிக்கிறது” என்று பதிவிட்டு இருந்தார்.
இந்தப் பதிவு பலராலும் பகிரப்பட்டது. தற்போது இந்தப் பதிவுக்குப் பதிலடி கொடுத்துள்ளார் கதிஜா.
எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் ட்வீட்டின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த கதிஜா, ''அன்புள்ள தஸ்லிமா, என்னுடைய ஆடையால் உங்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தயவுசெய்து உங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் எனக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதில்லை. உண்மையான பெண்ணியம் என்றால் என்ன என்று கூகுள் செய்து பார்க்கவும். ஏனென்றால் அது மற்ற பெண்களைத் தரக்குறைவாகச் சாடுவதும் இந்த விவகாரத்தில் அவர்களது தந்தையை இழுத்துப் பேசுவதும் அல்ல. மேலும் உங்களுடைய ஆய்வுக்காக என்னுடைய எந்த புகைப்படத்தையும் நான் அனுப்பியதாக எனக்கு நினைவில்லை'' என்று கடுமையான முறையில் சாடியிருந்தார்.
இந்நிலையில் ஏ.ஆர். ரஹ்மான் அளித்துள்ள ஒரு பேட்டியில் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்திருப்பதாவது:
''ஒரு ஆண் புர்கா அணிய அனுமதி கிடையாது. இல்லையென்றால் நானும் ஒரு புர்காவை அணிந்திருப்பேன். வெளியே செல்வதற்கும், ஷாப்பிங் செய்வதற்கும், நிலையான வாழ்வுக்கும் அது எளிதாக இருக்கும். கதிஜா தன்னுடைய சுதந்திரத்தைக் கண்டுகொண்டார் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர் வீட்டுப் பணிப்பெண்ணின் தாயாருக்கு அஞ்சலி செலுத்த செல்லக்கூடியவர். அவருடைய எளிமையும் அவருடைய சமூகத்துடன் அவர் இயங்கும் விதமும் என்னை ஆச்சரியப்படுத்துகின்றன’’.
இவ்வாறு ஏ.ஆர். ரஹ்மான் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT