Published : 22 Feb 2020 10:26 AM
Last Updated : 22 Feb 2020 10:26 AM
மஹா
ஜீ தமிழ் சேனலில் ‘சூப்பர் மாம்’ நிகழ்ச்சி நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், புதுயுகம் சேனலின் ‘ருசிக்கலாம் வாங்க’ நிகழ்ச்சிக்குள் அடி எடுத்து வைக்கிறார் தொகுப்பாளினி ஆர்த்தி. இல்லற வாழ்க்கை, மகன் தியோடனின் வளர்ப்பு என குடும்ப பொறுப்பாளினியாக சுற்றித் திரிந்த ஆர்த்தி சிறு இடைவெளிக்குப் பிறகு இப்போது சேனலில் வட்டமடிக்க திரும்பியிருக்கிறார். அவருடன் ஒரு நேர்காணல்..
மீண்டும் குக்கரி நிகழ்ச்சியைக் கையில் எடுத்துள்ளீர்களே?
ஆமாம். குக்கரி நிகழ்ச்சிக்கு வயதே ஆகாது. எல்லா கால கட்டத்துலயும் கலக்கலாம். மக்கள் தொலைக்காட்சியில் ‘பாரம் பரிய சமையல்’, ‘அடுக்குமாடி சமையல்’ என குக்கரி நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கினேன். இப்போ நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரும்பவும் ஒரு சமையல் நிகழ்ச்சி. நினைக்கவும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவும் ஆனந்தமாக உள்ளது.
இதில் என்ன மாதிரியான புதுமை இருக்கும்?
புதுயுகம் சேனலில் 800 அத்தியாயங்களுக்கு மேல் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி. இப்போ புது அவதாரத்துடன் என் கைக்கு வருகிறது. நான் எப்படி சேனலுக்கு ‘சீசன் - 2’ அவதாரம் எடுத்து தொகுப்பாளினியாக உள்ளே வந்திருக்கிறேனோ, அதேபோல கிட்டத்தட்ட இந்த சமையல் நிகழ்ச்சியும் ‘சீசன் - 2’ மாதிரிதான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செஃப் ஸ்பெஷலிஸ்ட். பாரம்பரியம் முதல் மாடர்ன் வரைக்கும் எல்லா வகையான சமையலும் அத்துப்படி. கல்லூரிப் பெண்கள்கூட சமையல் கலைஞர்களாக வந்து அசத்தப் போறாங்க. என் மகன் தியோடனுக்கு இனி நிறைய வெரைட்டியில் சமைத்துத் தந்து அசத்த லாம். எனக்கும் இது சரியான நேரத்தில் அமைந்த நிகழ்ச்சியாக உள்ளது.
மகனுடன் கலந்துகொண்ட ஜீ தமிழ் ‘சூப்பர் மாம்’ நிகழ்ச்சியின் அனுபவம் எப்படி?
சரியான நேரத்தில் அவனுக்கு சேனலில் ஒரு அடையாளம் ஏற்படுத்த இருந்தேன். அது ஸ்கூல் லைஃப் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே அமைந்தது. ‘சூப்பர் மாம்’ நிகழ்ச்சியில் உள்ளவர்களிடம் அறிமுகம் செய்தது மட்டும்தான் என் வேலை. அவன் ஒரு ரவுண்ட் ஆடிப்பாடி கலக்கிட்டு வந்துட்டான். எல்லோரும் அவங்க வீட்டுப் பிள்ளையாகவே அவனைப் பார்த்தாங்க. 4 வயது பையனுக்கு கிடைத்த அன்பையும், நட்பையும் பெரிய ஆசீர்வாதமாக நினைக்கிறேன்.
நீங்கள் சின்னத்திரைக்கு வந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருக்குமே? நடிப்பின் மீது காதலே மலராமல் போனது ஏன்?
15 வருஷமாச்சு. தொகுப்பாளினி யாகவே இங்கு சாதிக்க நிறைய வழிகள் உள்ளன. சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கு இடையே இப்போ குடும்ப விழாக்கள், புத்தக வெளியீட்டு விழாக்கள் என கலந்துகொண்டு தொகுப்புரை நிகழ்த்துகிறேன். அதே போல இந்த துறையில் சாதிக்கவே நிறைய வாய்ப்புகள் இருப்பதால், மற்ற எதிலும் கவனம் செலுத்தும் எண்ணம் வந்ததே இல்லை.
விரைவில் வானொலி வர்ணனையாள ராகவும் பங்களிக்கப் போகிறீர்கள் என கேள்விப்பட்டோமே?
‘ரெயின்போ எஃப்.எம்’ சேனலில் பயிற்சி வர்ணனையாளராக உள் ளேன். மத்திய அரசின் தூர்தர்ஷன் துறையைச் சேர்ந்த எஃப்.எம் அது. நிறைய தேர்வு எல்லாம் உண்டு. எல்லாவற்றையும் எழுதி தேர்ச்சி பெற்று, இப்போது பயிற்சி வகுப்பில் உள்ளேன். விரைவில் வானொலியில் வர்ணனையாள ராகவும் என் குரலை கேட்கலாம். இனி குரல் உள்ளவரைக்கும் அந்த பணியும் தொடரும்.
கணவர் விவேக்கின் திரைப்பட இயக்கப் பணிகள் எப்படி நகர்கின்றன?
அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பாக்ஸர்’ திரைப்பட பணிகளில் தீவிரம் செலுத்தி வருகிறார். இதற்கிடையே மற்றொரு படத்துக்கான கதை விவாதமும் நடந்து வருகிறது. நடிகை மீனா நடிப்பில் ‘ஜீ பைவ்’ சேனலுக்கு இயக்கிய ‘கரோலின் காமாட்சி’ வெப் சீரீஸ் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது. சினிமாதான் அவரது கனவு. அதை நோக்கிய பயணம் அற்புதமாக அமைந்து உள்ளது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT