Published : 21 Feb 2020 06:56 AM
Last Updated : 21 Feb 2020 06:56 AM
பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையை அடுத்துள்ள செம்பரம்பாக்கத்தில் தற்போது செயல்பட்டு வரும் ‘ஈவிபி’ பிலிம் சிட்டி 2012-ம் ஆண்டு ஈவிபி வேர்ல்டு பொழுது போக்கு பூங்காவாக திறக்கப்பட்டது. தற்போது அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. 2012- ம் ஆண்டு அக்டோபர் மாதம் தனியார் விமான நிறுவனத்தின் பணிப் பெண்ணான, நாகாலாந்தைச் சேர்ந்த அபிலா மேக் (24), ஆக்டோபஸ் ராட்டினத்தில் சுற்றும்போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து மூடப்பட்ட பொழுதுபோக்கு பூங்கா, ஈவிபி பிலிம் சிட்டியாக உருவெடுத்து செயல்பட்டு வருகிறது. அவ்வாறு செயல்பட்டு வரும் ஈவிபி பிலிம் சிட்டி அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, இந்த பிலிம்சிட்டியில் தனியார் தொலைக்காட்சி நடத்திய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற மதுமிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக போலீஸார் விசாரணை நடத்தினர்.
மேலும், ரஜினிகாந்த் நடித்த காலா படப்பிடிப்பின்போது செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மற்றொருவர் அங்கு இருந்த கட்டிடத்தின் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். கடந்த ஆண்டு விஜய் நடித்த பிகில் படத்துக்காக அமைக்கப்பட்ட கால்பந்தாட்ட மைதான அரங்கில் ராட்சத கிரேன் மூலம் மின்விளக்கு பொருத்தப்பட்டது. அப்போது கிரேன் அறுந்து விழுந்து செல்வராஜ் என்ற தொழிலாளி உயிரிழந்தார். தற்போது இந்தியன்- 2 படப்பிடிப்பின்போது நடந்துள்ள விபத்தில் 3 உயிரிழப்புகள் உட்பட 7 உயிரிழப்புகளை சந்திந்துள்ளது முந்தைய ஈவிபி வேர்ல்டு பொழுதுபோக்கு பூங்கா மற்றும் தற்போதைய ஈவிபி பிலிம் சிட்டி என போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT