Published : 12 Dec 2019 04:19 PM
Last Updated : 12 Dec 2019 04:19 PM
ரஷ்ய கலாச்சார மையம் | மதியம் 6:00 மணி
ஊரில் வெட்டியாக ஊர் சுற்றித் திரியும் வெற்றி பெற்றோரின் வற்புறுத்தலால் வேலை தேடி சென்னை வருகிறார். செக்யூரிட்டி வேலை உள்ளிட்ட சில பல வேலைகளைச் செய்த பிறகு ஜூஸ் போட்டுக் கொடுக்கும் வேலையில் தன்னை தக்கவைத்துக் கொள்கிறார். அதே கடையில் டீ போடும் கருணாகரனும் வெற்றியும் நண்பர்கள். இருவரும் ஒரே அறையில் தங்குகிறார்கள். எதிர்க்கடையில் வேலை செய்யும் பெண் வெற்றியின் காதலை நிராகரித்துவிட்டு இன்னொரு ஆணுடன் திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கிறார். இதனால் விரக்தியின் விளிம்புக்குச் செல்கிறார் வெற்றி.
குடும்ப பாரம் அழுத்த, பொருளாதாரப் பிரச்சினையில் தவிக்கும் வெற்றி ஹவுஸ் ஓனர் ரோகிணி வைத்திருக்கும் நகைகளைத் திருடத் திட்டம் தீட்டுகிறார். அந்த நேரத்தில் வெற்றியின் அக்கா வீட்டை விட்டு ஓடிப்போகிறார். இதனால் வெற்றியின் தந்தைக்கு நெஞ்சு வலி ஏற்பட, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார். இந்த சூழலில் வெற்றி என்ன செய்கிறார், தந்தையைக் காப்பாற்றினாரா, அக்கா என்ன ஆனார், அவரின் காதல் என்ன ஆனது, திருடும் முடிவு என்ன ஆனது போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.
யூகிக்க முடியாத அளவில் திரைக்கதையை நகர்த்தி சபாஷ் பெறுகிறார் இயக்குநர் கோபிநாத். அவரின் முயற்சிக்கும் மூளைக்கும் கதாசிரியரின் உழைப்புக்கும் தமிழ் சினிமா வாழ்த்து மழை பொழியும். 'எட்டு தோட்டாக்கள்' படத்தில் நடித்த வெற்றிக்கு இது இரண்டாவது படம். மிகச் சிறந்த கதைகளைத் தேர்வு செய்யும் அவருக்கு வாழ்த்துகள். நகைச்சுவை கலந்த உறுதுணைக் கதாபாத்திரம் என்றால் கருணாகரன் தான் பெஸ்ட் என்ற அளவுக்கு மனிதர் அட்டகாசமாகப் பொருந்தியுள்ளார்.
தொடர்பியல் என்பது ஒரு சயின்ஸ் விதி என்று முக்கோண ரீதியில் கதை பின்னியிருக்கிறார் பாபு தமிழ். ஒரே மாதிரியான சம்பவங்கள் வெவ்வேறு குடும்பத்தோட சந்ததியை ஆக்கிரமிக்கும். அது தொடராம இருக்கணும்னா ஒரு மையப்புள்ளியில் முழுமை பெறணும் என்பதை தர்க்க ரீதியாக இயக்குநர் கோபிநாத் நிறுவும் விதம் படத்துக்கு வலு சேர்க்கிறது.
''போலீஸை போலீஸுக்கான எல்லா வேலையும் செய்ய விட்ரணும். அவன் புத்திசாலித்தனத்தைக் காட்ட கேள்விகளை நாமே கொடுத்து அதுக்கான பதிலையும் சரியா தந்தோம்னு வெச்சுக்க நம்மைத் தொடக்கூட முடியாது'', ''ஒவ்வொருத்தருக்கும் பின்னாடி ஒரு ரகசியம் இருக்கு'', ''நாம எல்லாம் இந்த சொசைட்டிக்கு பொம்மைதான் மணி. உருவபொம்மை ஆகணும்னா நாம பணக்காரன் ஆகணும்'', ''பொண்ணுங்க வாழ்க்கை அடுத்தடுத்த கட்டத்துக்குப் போய்ட்டே இருக்கும். அவங்க விருப்பப்பட்டாலும் படலைன்னாலும்'' போன்ற வசனங்கள் மூலம் பாபு தமிழ் ரசிக்க வைக்கிறார்.
படத்தின் ஆகச் சிறந்த பலம் திரைக்கதைதான். அதில் சிறு புள்ளியைக் கூட இயக்குநர் கோபிநாத்தும் பாபு தமிழும் தவறவிடவில்லை. தேவைப்பட்டா சாதி, மதத்தை ஆயுதமா எடுத்துப்பாங்க என்று சிறுபான்மை சமூகத்தை நோக்கி கேள்வி எழுப்புகிறார் இயக்குநர். அதே தருணத்தில் இப்ராஹிம் என்ற பெயருடைய நபரைக் குற்றவாளியாகச் சித்தரிப்பதும் பின்பு அவர் குற்றவாளி இல்லை என்று நிரூபிப்பதுமாக பொதுப்புத்தியின் மீது கல்லெறிகிறார். ஒரு சமரசமற்ற படைப்பாளியாக கோபிநாத் சமூக அக்கறையையும் சேர்த்தே வெளிப்படுத்துகிறார். காதலைக் கை கழுவிய பெண் திரும்ப வந்ததும் வெற்றி அதை எதிர்கொள்ளும் விதம், மைம் கோபியை தொலைபேசி உரையாடலில் ஆஃப் பண்ணும் விதம் ஆகியவற்றில் புத்திசாலித்தனமான காட்சி மொழியைக் கையாள்கிறார்.
படத்தில் இத்தனை ஆச்சர்யங்களா என்று நினைத்தால் அதற்கப்பாலும் சுவாரஸ்யங்களால் நம்மைக் கட்டிப் போடுகிறார் இயக்குநர். மொத்தத்தில் 'ஜீவி' தவறவிடக்கூடாத தரமான தமிழ் சினிமாவாக ஜொலிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT