Published : 29 Oct 2019 12:39 PM
Last Updated : 29 Oct 2019 12:39 PM

’’எம்.எஸ்.வி.யைப் பார்ப்பதற்கு முன் சோறு திங்க வக்கில்லை; பிறகு சோறு திங்கவே நேரமில்லை!’’ - கவிஞர் வாலியின் பிறந்தநாள் இன்று

வி.ராம்ஜி

ஒரு படத்தை, நமக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருப்பது... நினைவுபடுத்திக் கொண்டே இருப்பவர்கள்... படத்தின் இயக்குநர். கதையின் நாயகன் அல்லது நாயகி. படத்தின் இசையமைப்பாளர். படத்தின் பாடல்களை எழுதிய கவிஞர். இந்தப் பட்டியலில், சாகாவரம் பெற்ற பாடல்களை கிடைக்கின்ற தருணங்களிலெல்லாம் கேட்டு ரசித்துக்கொண்டே இருக்கிறோம். அப்படி ரசிக்கின்ற எண்ணற்ற பாடல்களைத் தந்தவர்களில் கவிஞர் வாலியும் ஒருவர்.


ஸ்ரீதரின் காலத்தில்தான் பாலசந்தர் வந்தார். பாலசந்தர் கோலோச்சிக் கொண்டிருந்தபோதுதான் பாரதிராஜா வந்தார். பாரதிராஜா ராஜாங்கம் பண்ணிய காலகட்டத்தில்தான் அவரிடமிருந்தே பாக்யராஜ் வந்தார் என்பார்கள். அதேபோல்தான் கவிஞர் வாலியும். கண்ணதாசனின் பாட்டுக் கொடி பட்டொளி வீசிப் பறந்துகொண்டிருந்த காலகட்டத்தில், வாலி வந்தார். தனக்கென தனியிடம் பிடித்தார். ஒருகட்டத்தில், ‘இது கண்ணதாசன் பாட்டுதானே?’ என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிற நூற்றுக் கணக்கான பாடல்களை, வாலிதான் எழுதியிருந்தார். இப்படி, ‘கண்ணதாசன் பாட்டுதானே இது?’ என்று நாம் கேட்டு, சொன்னதுதான் வாலியின் வெற்றி.


1963ம் ஆண்டு, நவம்பர் 15ம் தேதி எம்ஜிஆரின் ‘பரிசு’ திரைப்படம் வெளியானது. இதில் எம்ஜிஆர், சாவித்திரி முதலானோர் நடித்திருந்தார்கள். கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்தார். இதேநாள்... இதே வருடம்... சிவாஜியின் ‘அன்னை இல்லம்’ வெளியானது. சிவாஜியுடன், தேவிகா, நாகேஷ், நம்பியார் முதலானோர் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்கும் கே.வி.மகாதேவன் இசை. இந்தப் படத்தின் இரண்டு படங்களுக்கும் கண்ணதாசன் பாடல்களை எழுதியிருந்தார்.


இந்த வருடத்தில்... எம்ஜிஆர் படமும் சிவாஜி படமும் வெளியான அதே நாளில், ஜெமினி கணேசன், சாவித்திரி, கே.ஆர்.விஜயா நடித்த படமும் வெளியானது. இயக்குநர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார். ‘மன்னவனே அழலாமா’, ‘அத்தை மடி மெத்தையடி’ முதலான எல்லாப் பாடல்களும் செம ஹிட்டு. மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். ஒரேயொரு பாடல் எழுதச் சென்ற வாலிக்கு அடித்தது ஜாக்பாட். எல்லாப் பாடல்களையும் அவர்தான் எழுதினார். எம்ஜிஆர், சிவாஜி படங்களைத் தாண்டி, இந்தப் படம் பேசப்பட்டது. இந்தப் படத்தின் பாடல்கள் முணுமுணுக்கப்பட்டன. வாலியை எல்லோருக்கும் தெரிந்தது. எல்லோருக்கும் பிடித்தவராகவும் ஆகிப்போனார் வாலி.
‘எம்.எஸ்.வி. அண்ணனைப் பாக்கறதுக்கு முன்னாடி வரைக்கும் சோறு தின்ன எனக்கு வக்கில்ல. அவரைப் பாத்த பிறகு எனக்கு சோறு திங்கவே நேரமில்ல’ என்று தனக்கே உரிய பாணியில், கவிஞர் வாலியே சொல்லியிருக்கிறார்.


அடுத்த வருடம். அதாவது 1964ம் வருடம். அந்தப் படத்தில் ஒரேயொரு பாடலை எழுதுவதற்கு வாலியை அழைத்திருந்தனர். கதையையும் பாட்டுக்கான சூழலையும் கேட்டார் வாலி. மளமளவென பாட்டெழுதிக் கொடுத்தார். அந்தப் பாடல் ரிகார்டிங் செய்யப்பட்டது. ‘இது யார் எழுதினது?’ என்று கேட்டார் எம்ஜிஆர். படத்தின் நாயகன் அவர்தான். ‘இது வாலி எழுதினது’ என்றார்கள். ‘நல்லாருக்கே பாட்டு. அப்படீன்னா அவரையே எல்லாப் பாடலையும் எழுதச் சொல்லிருங்க’ என்றார் எம்ஜிஆர்.


பிறகென்ன... மூன்றெழுத்து எம்ஜிஆருக்கு ரெண்டெழுத்துக் கவிஞர் வாலி, ஆஸ்தானக் கவியானது இப்படித்தான்.


எம்ஜிஆருக்கு மட்டுமா... சிவாஜிக்கும்தான் ஏராளமாக எழுதினார். ‘இதோ... எந்தன் தெய்வம் முன்னாலே’ முதலான பாடல்களையெல்லாம் கண்ணதாசன் எழுதியது என்றுதான் ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.


அப்படித் தொடங்கிய பாட்டுப் பயணம்... ஜெமினி, ஜெய்சங்கர், முத்துராமன், கமல், ரஜினி, அஜித், விஜய், சூர்யா வரை நீண்டது.
’கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்’ என்று முருகனை உருகி உருகிப் பாடுவார். ‘காதல் வெப்சைட் ஒன்று’ என்று ஹைடெக்காகவும் பாட்டு எழுதுவார். ‘இந்தியநாடு என் வீடு, இந்தியன் என்பது என் பேரு’ என்று தேசப் பக்தியையும் ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே’ என்று அம்மாவின் உயர்வையும் கொண்டாடுவார். ‘முக்காலா முக்காபுலா’ என்றும் பட்டையைக் கிளப்புவார். அதனால்தான் வாலியை ‘வாலிபக் கவிஞர்’ என்று கொண்டாடியது திரையுலகம்.


கே.பாலசந்தரின் ‘பொய்க்கால் குதிரைகள்’ படத்திலும் ’பார்த்தாலே பரவசம்’ படத்திலும் கமலின் ‘சத்யா’, ‘ஹேராம்’ முதலான படங்களிலும் நடிக்கவும் செய்தார்.


‘ஊக்கு விற்பவனை ஊக்குவித்தால்
ஊக்கு விற்பவன் கூட
தேக்கு விற்பான்’


என்று பாராட்டி, தன்னம்பிக்கையூட்டும் வரிகளை எழுதிய வாலி, தனக்கு அடுத்து வந்த தலைமுறைக் கவிஞர்களை உச்சிமுகர்ந்து பாராட்டவும் ஆசி வழங்கவும் தவறவில்லை. அதுதான் வாலியின் விஸ்வரூப மனசு!


1931ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் தேதி, திருச்சி காவிரிக்கரைக்கும் கொள்ளிடக் கரைக்கும் நடுவே பிறந்தார் வாலி. இவரின் பாடல்களுக்கு கரையுமில்லை; எல்லைகளுமில்லை!


இன்று கவிஞர் வாலியின் 88வது பிறந்தநாள். அவரின் பாடல்களாலேயே, அவரைப் போற்றுவோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x