Published : 23 Jul 2019 10:25 AM
Last Updated : 23 Jul 2019 10:25 AM

'ஆடை' திரைப்படம் பேசும் அரசியல்

'ஆடை' திரைப்படம்

ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடிப்பில் வெளியான 'ஆடை' திரைப்படத்தைப் பார்த்தோம்.

கேரள திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தாழ்த்தப்பட்ட பெண்கள் தங்கள் மார்பகங்களை மறைக்க மேல் ஆடை அணிவதற்கு 'மார்பக வரி' செலுத்த வேண்டும் என்ற கொடூரமான சட்டத்தை நீக்க, நங்கேலி என்ற பெண் போராடி, உயிர் துறந்த வரலாற்றுடன் ஆரம்பிக்கிறது 'ஆடை'. பெண்கள் இக்காலத்தில் அனுபவிக்கும் ஒவ்வொரு சுதந்திரமும், பல பெண்களின் உயிர்த் தியாகத்தாலும், ரத்தக் கறையாலுமே சாத்தியமாகியிருக்கிறது என்பதை நங்கேலியின் கதை உணர்த்துகிறது. இப்படிப்பட்ட போற்றுதலுக்குரிய வரலாற்றுடன் ஆரம்பிக்கும் திரைப்படம், ஆரம்பத்திலேயே மிகுந்த எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது. இந்த எதிர்பார்ப்பும் சுவாரஸ்யமும் படத்தின் இறுதி வரை பார்வையாளர்களிடம் அகலாமல் இருக்கிறது.

இருப்பினும், பலரின் உயிர்த் தியாகத்தால் கிடைத்திருக்கும் சுதந்திரத்தைப் பெண்கள் எப்படி பயன்படுத்துகின்றனர், குறிப்பாக சுதந்திரமாக உலாவும், பெண்ணியம் பேசும் பெண் எப்படிப் பயன்படுத்துகிறார் என சொல்ல முயன்றதில், நிறைய முரண்களும்,  சில குறைகளும் தென்படுகின்றன.

'ஆடை' நாயகி காமினி (அமலாபால்),  "கம்யூனிஸத்திற்கும் பெண்ணியத்திற்கும் வித்தியாசம் தெரியவில்லை" என தன் அம்மாவைக் கிண்டல் செய்கிறார். தன்னை ஒரு பெண்ணியவாதியாகக் காட்டிக்கொள்கிறார். பெரும்பாலான தமிழ்த் திரைப்படங்களில் பெண்ணியம் பேசும் பெண்களை எப்படி 'தைரியமான' பெண்களாக காண்பித்தார்களோ அதே கதாபாத்திர வார்ப்பின் தொடர்ச்சிதான் அமலாபாலின் காமினி கதாபாத்திரம்.

புடவை கட்டி கோயிலுக்குச் செல்வதை கனவாகக் கண்டதற்கே அலறுதல், மது அருந்துதல், இரட்டை அர்த்த வசனங்கள், காண்டம், பாலின உறவு குறித்து 'சுதந்திரமாக' பேசுதல், பைக் ஓட்டுதல், இரவில் நண்பர்களுடன் வெளியே செல்லுதல் என இவற்றையே பெண்ணியம் பேசும் காமினி செய்கிறாள்.

சுதந்திரக்கொடி என்ற தனது பெயரை காமினி என மாற்றிக்கொண்ட அமலாபால், தனியார் தொலைக்காட்சியில் 'தொப்பி தொப்பி' என்ற பிராங்க் (Prank)நிகழ்ச்சியை நடத்துகிறார். "லட்சணமாக புடவை கட்டிக்கொண்டு செய்தி வாசிக்கும் வேலை பார்க்க வேண்டும்" என தன் அம்மா கூறியதற்காக, செய்தி வாசிக்கும் தோழியான ரம்யாவை கழிவறையில் பூட்டிவிட்டு அன்றைய நாள் செய்தி வாசித்து சவாலை சாதாரணமாக நிகழ்த்திக் காட்டுகிறார் காமினி. பந்தயத்தில் வெற்றி பெறுவதற்காக எதையும் செய்யத் துணியும் காமினி, தன் தோழியிடம் நிர்வாணமாக செய்தி வாசிப்பதாக சவால் விடுகிறார். அன்றைய நாள் இரவு, பிரம்மாண்டமான உயர்ந்த தன் அலுவலகக் கட்டிடத்தில், நண்பர்களுடன் இணைந்து மது அருந்தும் காமினி, மறுநாள் காலை நிர்வாணமாக எழுகிறார்.

தான் எவ்வாறு நிர்வாணமாக்கப்பட்டோம் என்று குழம்பிய நிலையில் உள்ள காமினி தன் நண்பர்களைத் தேடுகிறார். அந்தக் கட்டிடத்தில் யாரும் இல்லை. பேப்பர் உட்பட உடலை மறைக்க ஏதும் இல்லாததால் தான் வெளியே செல்ல முடியாமல் உடைந்து அழுகிறார். இதிலிருந்துதான் 'ஆடை' திரைப்படம் பயணிக்கிறது. காமினி யாரால் நிர்வாணமாக்கப்பட்டார்?அவர்  நண்பர்கள் எங்கே?  எப்படி வெளியே வருகிறார்? என்பதை த்ரில்லிங்காகப் பதிவு செய்துள்ளார் இயக்குநர் ரத்னகுமார்.

முழுக்க முழுக்க அமலாபால் மீதே கதை நகர்கிறது. 'மைனா'வுக்குப் பிறகு சிறந்த  நடிப்பை வெளிக்காட்ட நல்ல வாய்ப்பாக அவருக்கு இந்தப் படம் அமைந்திருக்கிறது. அதனைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்.
இந்தக் கதையை ஏற்று, நடிக்கச் சம்மதித்ததற்கே அமலாபாலைப் பாராட்டலாம். அமலாபாலின் அம்மாவாக வரும் ஸ்ரீரஞ்சனி, நண்பர்கள் ரம்யா, விவேக் பிரசன்னா, சரித்திரன், போலீஸாக வரும் பிஜிலி ரமேஷ், என எல்லோருமே தன் பங்கைச் சிறப்பாகச் செய்திருப்பதன் மூலம் கவனம் பெறுகின்றனர். ஊர்கா டீமில் பிரதீப் குமாரின் பின்னணி இசை படத்திற்கு வலு சேர்க்கிறது.

ஆடையின்றி அமலாபால் அந்தக் கட்டிடத்தைச் சுற்றிவரும் காட்சிகளில் சற்றும் விரசம் இல்லாமல் அமலாபாலின் தவிப்பைக் காட்சிகள் மூலம் பார்வையாளர்களுக்கு கடத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய். படத்தைத் தாங்கிப் பிடித்திருப்பதில் ஒளிப்பதிவுக்கு முக்கியப் பங்குண்டு. அவரது கேமராவின் கோணம் கொஞ்சம் மாறியிருந்தாலும், 'ஆடை'  இத்தகைய கவனம் பெற்றிருக்காது என்பது உறுதி.

அவ்வளவு தைரியமான, நிர்வாணமாக செய்தி வாசிப்பதாக சவால் விடுத்த காமினி, நிர்வாணம் ஆக்கப்பட்டவுடன் கூனிக் குறுகுகிறார். காமினி நிர்வாணமாக இருப்பதை எதிர் கட்டிடத்தில் உள்ள ஒரு நபர் பார்த்துவிடுகிறார். அவர் காமினி இருக்கும் கட்டிடத்திற்கு தீயநோக்குடன் வருகிறார். பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை, இச்சமூகம் எப்படி அணுகுகிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

உணவு டெலிவரி செய்ய வருபவர், போலீஸ் என அனைவரிடமும் உதவி கோருவதற்குத் தயங்குகிறார் காமினி. தன் நிர்வாணத்துடன் ஓடி ஒளிகிறார். வெளிச்சத்திற்குப் பயந்து இருட்டுக்குள் தஞ்சம் அடைகிறார். ஆண்களை உதவிக்கு அழைக்க அச்சப்படுகிறார். எல்லா ஆண்களிடமும், அவர் உதவி கோருவதற்குத் தயங்குவது, ஆண்கள் அனைவருமே மோசமானவர்கள் என்ற பொதுப்புத்தியாகவே வெளிப்படுவது நெருடல்.

காமினியை நிர்வாணப்படுத்தியது யார், எதற்காக என்ற முடிச்சு அவிழும் இடம் சுவாரஸ்யம். ஆனால், காமினி நடத்திய பிராங்க் ஷோவால் பாதிக்கப்பட்ட பெண் இப்படிச் செய்கிறார் என்பதை இயல்பாக ஏற்க முடியவில்லை. அக்கதாபாத்திரத்துக்கு நங்கேலி என்று பெயர் வைத்துள்ளனர். மார்பக வரிச் சட்டத்தை எதிர்த்து உயிர் துறந்த நங்கேலியின் நினைவாக அப்பெயர் வைக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

பழிவாங்குவதற்காக காமினியை நிர்வாணமாக்கிய நங்கேலிப் பெண் பழங்குடியினத்தைச் சார்ந்தவராக சித்தரிக்கப்படுகிறார். காமினியை நிர்வாணமாக்கிய அந்தப் பெண்ணை ஒழுக்கம் நிறைந்த பாவப்பட்ட கிராமத்துப் பெண்ணாகவும், அவரால் பாதிக்கப்பட்டு, சமூகத்தின் முன் குற்றம்சாட்டப்பட்ட பெண்ணை பெண்ணியம் பேசுபவராக காட்டியிருப்பதன் மூலம் இயக்குநர் ரத்னகுமார் கதாபாத்திரங்களைக் கட்டமைத்ததில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம் எனத் தோன்றுகிறது.

ஏன் பெண்ணியம் பேசும் பெண்களை தவறாகச் சித்தரித்துவிட்டு, அவரே ஏதாவது பிரச்சினையில் சிக்கிக்கொள்வதாக காட்ட வேண்டும்? அதிலும் புரட்சி பேசுவதாகவோ, தீவிரப் பெண்ணியச் செயற்பாட்டாளராகவோ காமினியைக் கதாபாத்திரத்தைப் பதிவு செய்யாமல், விளையாட்டுத்தனமான பந்தயங்களில் ஈடுபடும் ஜாலி கேலிப் பெண்ணாகவே காட்சிப்படுத்தியிருப்பதன் மூலம் இயக்குநர் பெண்ணியத்திலிருந்து தப்பிக்கவும் தனக்குத் தானே வழி செய்துள்ளதையும் மறுக்க முடியாது.

இப்படி கதாபாத்திரங்கள், திரைக்கதையில் சில சறுக்கல்கள் இருந்தாலும், கதை முழுவதையும் சுவாரஸ்யமாக நகர்த்தியிருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் ரத்னகுமார். இன்னும் தான் சொல்ல வருவதை தெளிவுடன் சொல்லியிருக்கலாம். பெண் உடல் மீதான அரசியலை நாம் பேச வேண்டிய மிக முக்கியமான காலகட்டத்தில், அதே அரசியலை மீண்டும் 'காமினி'யிடம் திணித்திருக்கிறது 'ஆடை'. அதனால் தான் காமினி தன் நிர்வாணத்தைக் கண்டு அச்சப்படுகிறார். பேப்பரில் காமினி உடலை மறைத்து வெளியில் வருவதை, அவரை நிர்வாணமாக்கிய பெண் பாராட்டுகிறார்.

இரட்டை அர்த்த வசனங்களைத் தவிர்த்துவிட்டு, சில நகைச்சுவை வசனங்கள் நமக்கு சிரிப்பை வரவழைக்கின்றன. சினிமாவில் காப்புரிமை, மீடு விவகாரம் உள்ளிட்ட சமகால அரசியல் சிலவற்றையும் இப்படம் எள்ளி நகையாடுகிறது.

தமிழ்த் திரைப்படங்களில் பெண்களின் ஆடை சுதந்திரத்தை கதாநாயகர்கள் கேலி செய்யும் விதத்திலேயே இருந்ததை மாற்றி, அதுகுறித்து வேறு ரீதியிலான விவாதத்தை முன்வைத்திருக்கிறது 'ஆடை'. அந்த வகையில் இப்படத்தை வாழ்த்தி வரவேற்கலாம்.

-  நந்தினி வெள்ளைச்சாமி / இந்து குணசேகர்

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x