Published : 19 Jul 2019 03:16 PM
Last Updated : 19 Jul 2019 03:16 PM
போலீஸிடமிருந்தும், தப்பான கும்பலிடமிருந்தும் காதல் தம்பதியுடன் தன்னையும் சேர்த்து காப்பாற்றப் போராடும் டபுள் ஏஜெண்ட்டின் கதையே 'கடாரம் கொண்டான்'.
அபிஹசனும் அவரது கர்ப்பிணி மனைவி அக்ஷரா ஹாசனும் மலேசியாவில் வசிக்கிறார்கள். 10 நாட்களுக்கு முன்புதான் கோலாலம்பூர் வந்திருப்பதால் அபிஹசன் தன் காதல் மனைவியை தனியாக வீட்டில் விட்டுவிட்டு தனியார் மருத்துவமனையில் ஆண் செவிலியர் வேலைக்குச் செல்கிறார். அங்கு விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் விக்ரம் சிகிச்சை பெற்று வருகிறார். அவரைக் கொல்ல நடக்கும் சதியை உணர்ந்து விக்ரமின் உயிரைக் காப்பாற்றுகிறார். போலீஸுக்குத் தகவல் கொடுக்கிறார். இந்நிலையில் வீடு திரும்பியதும் மனைவியிடம் நடந்ததைச் சொல்லி ஹீரோயிசத்தை நிறுவ முயற்சிக்கும் போது அடையாளம் தெரியாத நபர் அபிஹசனை அடித்துப் போட்டுவிட்டு, அக்ஷரா ஹாசனை கடத்திச் செல்கிறார். மனைவியை உயிரோடு விட வேண்டுமென்றால் விக்ரமை மருத்துவமனையிலிருந்து வெளியே வர வைக்க வேண்டும் என்று கடத்தல்காரன் அபிஹசனுக்கு நிபந்தனை விதிக்கிறான்.
புது இடம், யாரும் உதவ முடியாத சூழல் என்றிருக்கும் நிலையில் அபிஹசன் என்ன செய்கிறார், ட்வின் டவரிலிருந்து காயங்களுடன் விக்ரம் ஏன் தப்பியோடுகிறார், விக்ரம் யார், குற்றப் புலனாய்வுத் துறையில் உள்ள இரு வேறு காவல் அதிகாரி தலைமையிலான குழுக்கள் ஏன் அடிக்கடி மல்லுக்கட்டுகின்றன, அக்ஷரா ஹாசனை மீட்க முடிந்ததா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.
2010-ல் வெளியான 'பாயின்ட் ப்ளாங்க்' என்கிற பிரெஞ்சுப் படத்தைத் தழுவி 'கடாரம் கொண்டான்' திரைப்படத்தை இயக்கியுள்ளார் ராஜேஷ் எம்.செல்வா. மேக்கிங்கில் தரமான படத்தைக் கொடுத்துள்ளார். ஆனால், அது மட்டும் படத்துக்குப் போதாதே.
புதிதாக வேலைக்குச் சேர்ந்த இடம் என்பதால் அடக்கி வாசிப்பது, காதல் மனைவி மீதான அன்பைப் பொழிவது, நோயாளியின் பிரச்சினை உணர்ந்து சமயோசிதமாகச் செயல்படுவது, நெருக்கடி நிலை காரணமாக தவறு செய்வது, புத்திசாலித்தனம் இல்லாவிட்டாலும் மனைவியை மீட்க வேண்டி எதையும் செய்யத் துணிவது, மெட்ரோ ரயிலில் இளம்பெண்ணை மிரட்டி பின் மன்னிப்பு கேட்பது என அப்பாவித்தனமான முகத்தை வைத்துக்கொண்டு நடிப்பில் ஸ்கோர் செய்கிறார் அபிஹசன். கதைப் படங்களில் இனி அவரைக் காணலாம்.
தனிமை, பயம், தவிப்பு, பதற்றம் என்று ஆபத்தின் எல்லை அறிந்து இயல்பு மீறாமல் நடித்துள்ளார் அக்ஷரா ஹாசன்.
விக்ரம் படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில்தான் வருகிறார். சொல்லப்போனால் உறுதுணை நாயகன் என்று சொல்லிக்கொள்ளும்படியான கேரக்டர்தான். அலட்டிக்கொள்ளாமல் சண்டைக் காட்சிகளில் மிரட்டுகிறார். கேகே எனும் கதாபாத்திரத்துக்கு ஏற்ற கம்பீரத்தை நடையில் காட்டுகிறார். பன்ச் எல்லாம் பேசாமல் அவசியம் கருதி மிகவும் குறைவாகவே பேசுகிறார். அநாயசாமாக எல்லோரையும் டீல் செய்கிறார். ஆனால், அவர் யார், எதற்காக அவரை போலீஸே சிக்க வைக்கிறது, உடன் இருந்த நபரே ஏன் விக்ரமைப் போட்டுக் கொடுக்கிறார் என அவரது கதாபாத்திரக் கட்டமைப்பில் குழப்பமும் சிக்கலுமே உள்ளது.
விகாஸ், லேனா, செர்ரி மார்டியா, சித்தார்த்தா ஆகியோர் உறுதுணைக் கதாபாத்திரங்களில் சிறந்து விளங்குகிறார்கள்.
ஸ்ரீனிவாஸ் குத்தா கோலாம்பூரின் அழகை கேமராவுக்குள் கடத்தியுள்ளார். ஜிப்ரானின் இசையில் கடாரம் கொண்டான், வேறெதுவும் தேவையில்லை பாடல்கள் மனதில் நிற்கின்றன. பின்னணி இசையில் கதையோட்டதுக்குத் தேவையான த்ரில்லரைக் கடத்தி ஈர்க்கிறார் ஜிப்ரான்.
அக்ஷரா ஹாசன் - அபிஹாசன் தம்பதியின் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையைப் பதிவு செய்த விதத்தில் இயக்குநர் ராஜேஷ் எம். செல்வாவின் உழைப்பு பளிச்சிடுகிறது. விக்ரமுக்கு நேரும் விபத்துக்குப் பிறகு நடக்கும் காட்சிகள் அடுத்தகட்ட பரபரப்பான திரைக்கதைக்கு உத்தரவாதம் தருகிறது. குற்றப் புலனாய்வு செய்யும் இரு வேறு காவல் அதிகாரிகளுக்குள் நிகழும் சண்டைகளும் படத்துக்கு சுவாரஸ்யம் சேர்க்கின்றன.
ஆனால், இவை எல்லாம் முழுமை பெறவில்லை என்பதுதான் பலவீனம்.
விக்ரம் பின்னணியை ஒரு வாய்ஸ் ஓவரில் அல்லது மான்டேஜ் பாடலிலாவது சொல்லியிருக்கலாம். வில்லன் குழு, போலீஸ் குழு என இரண்டுமே விக்ரமை ஏன் குறிவைக்கிறார்கள் என்பதற்கான பதில் படத்தில் இல்லை.
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு விகாஸை விக்ரம் காத்திருந்துப் பழி வாங்க வேண்டியதன் அவசியம் என்ன என்பதும் தெரியவில்லை.
இசை, ஒலிக்கலவை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என்று தொழில்நுட்ப ரீதியில் பலம் வாய்ந்த 'கடாரம் கொண்டான்' திரைக்கதையில் சொதப்பி இருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT