Published : 23 Dec 2014 11:51 AM
Last Updated : 23 Dec 2014 11:51 AM
பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பாராட்டைப் பெற்று, தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்திருக்கும் திரைப்படம் 'குற்றம் கடிதல்'. 12-வது சர்வதேசத் திரைப்பட விழாவில் ஞாயிற்றுக்கிழமை ரஷ்ய கலாச்சார மையத்தில் மாலை 5 மணிக்கு திரையிடப்பட்டது.
கோவா திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு வரவேற்பை பெற்றிருப்பதால் படம் தொடங்கும் முன்பே கடுமையாக கூட்டம் இருந்தது. கூட்டம் அதிகமாக இருந்ததால், "இவ்வளவு கூட்டத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆகையால் மீண்டும் ஒரு முறை 'குற்றம் கடிதல்' திரையிடப்படும்" என்று சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து படக்குழுவிற்கு பூங்கொத்து கொடுத்து அறிமுகப்படுத்தினார்கள். ரஷ்ய கலாச்சார மையத்தில் க்யூப் சிஸ்டம் இல்லாததால் டி.வி.டியில் திரையிடுகிறோம் என்று படக்குழுவினர் தெரிவித்தார்கள்.
"இவ்வளவு கூட்டத்தைப் பார்க்கும்போது பயமாக இருக்கிறது. நீங்கள் விசிலடித்து சந்தோஷப்படும் படம் அல்ல 'குற்றம் கடிதல்'" என்ற இயக்குநர் பிரம்மாவின் அறிமுகத்தை தொடர்ந்து பெரும் அமைதிக்கு இடையே படம் திரையிடப்பட்டது.
கார் மோதிய உடன் பாவல் பேசும் வசனம், 'ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டணும் நீங்க நினைக்கலாம், நாங்க அப்படி அல்ல' என்பன போன்ற வசனங்களும், பல நெகிழவைக்கும் காட்சிகள் கைத்தட்டல்களை அள்ளியது. அது மட்டுமன்றி படம் முடிவடையும் போது அனைவருமே கைத்தட்டல்களை இயக்குநர் பிரம்மாவிற்கு உரித்தாக்கினார்கள்.
இயக்குநர் பாலாஜி சக்திவேல், பிரம்மாவை கட்டித்தழுவி, படம் பற்றிய தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து பலரும் பிரம்மாவிற்கு கை கொடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
ஏமாற்றம் ஏன்?
அதேவேளையில், திரையிரடல் மற்றும் திரையிடலுக்குப் பின் பார்வையாளர்களிடம் படத்தின் இயக்குநர் பிரம்மா முன்வைத்த ஒரு கோரிக்கை ஏமாற்றத்தை ஏற்படுத்தியதுடன் புதிய விவாதத்தைக் கிளப்பியது.
"இந்தப் படம் இன்னும் வெளியாகாததால், படம் குறித்த விமர்சனங்களை எழுத விரும்புவோர், படத்தின் கதைக் களம், கதையின் ஒன்லைன் முதலானவற்றை முற்றிலும் தவிர்த்திடுங்கள்" என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இது, சினிமா விமர்சனம், பார்வையை தங்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் வலைப்பதிவுகளில் பதிவு செய்யும் சினிமா ஆர்வலர்களை ஏமாற்றம் அடையச் செய்தது.
இதுபற்றி பிரபல வலைப்பதிவர் ஒருவரிடம் பேசியபோது, "இந்தப் படம் அற்புதமாக வந்திருக்கிறது. இந்தப் படத்தின் கதையை முழுமையாக எவரேனும் எழுதி வெளியிட்டால்கூட, இப்படம் எடுத்திருக்கும் விதம் மற்றும் முயற்சிகள் நிச்சயம் ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்கும்.
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இப்படத்தின் மையக் கதைக் கருவைச் சொல்லிவிட்டு, அது தந்த தாக்கத்தை எழுதுவதும், பாசிட்டிவ் விமர்சனங்கள் பரவுவதும் இப்படத்துக்கு வணிக ரீதியில் பலன் அளிக்கும் அம்சம்தான் என்பதை புதுமுக இயக்குநர் உணர வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT