Last Updated : 25 Feb, 2017 02:16 PM

 

Published : 25 Feb 2017 02:16 PM
Last Updated : 25 Feb 2017 02:16 PM

கபாலி நஷ்டமா?- திருப்பூர் சுப்ரமணியம் குற்றச்சாட்டுக்கு தாணு பதிலடி

'கபாலி' நஷ்டம் என தெரிவித்துள்ள திருப்பூர் சுப்ரமணியம் குற்றச்சாட்டுக்கு தயாரிப்பாளர் தாணு பதிலடிக் கொடுத்துள்ளார்.

கடந்த 10 ஆண்டு காலமாக, திரைப்பட விநியோகத் துறை மரணப் படுக்கையில் கிடப்பதாகவும், அதற்கு நட்சத்திர நடிகர்களே காரணம் என்றும் பிரபல திரைப்பட விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் அடுக்கடுக்காக புலம்பியிருக்கிறார்.

இது தொடர்பாக திருப்பூர் சுப்ரமணியம் வெளியிட்ட ஆடியோ பதிவில் 'கபாலி' குறித்து, "கடந்த 6-7 மாத காலமாக, 'கபாலி' வெளியீட்டிலிருந்து கணக்கிடுங்கள். 'கபாலி', தீபாவளிக்கு வந்த 'கொடி', 'காஷ்மோரா', பிறகு வந்த 'தொடரி', 'பைரவா', 'போகன்', 'சிங்கம் 3' என முன்னணி நட்சத்திரங்கள் நடித்த இந்த படங்கள் பற்றி தயாரிப்பாளர்கள் பரபரப்பாக மாபெரும் வெற்றி, இமயம் தாண்டும் வெற்றி என்றெல்லாம் விளம்பரப்படுத்தியுள்ளார்கள். 'கபாலி' படத்துக்கு, தாணு, மகிழ்ச்சி மகிழ்ச்சி என 200 நாள் வரை விளம்பரம் செய்துள்ளார். உங்கள் மனசாட்சிப்படி விளம்பரம் செய்யுங்கள்.

உண்மையிலேயே அந்தப் படம் 200 நாள் ஓடிய படமா? பொதுமக்களை வேண்டுமானால் இதன் மூலம் ஏமாற்றலாம். ஆனால் திரைத்துறையில் இருப்பவர்களுக்கு எல்லா உண்மைகளும் தெரியும். நான் சொன்ன இந்தப் படங்களில் ஒரு விநியோகஸ்தர் கூட சம்பாதிக்கவில்லை. அப்படி இருக்கும்போது எதை வைத்து வெற்றி என்று சொல்லுகிறீர்கள்?" என்று திருப்பூர் சுப்ரமணியம் கடுமையாக சாடியிருந்தார்.

திருப்பூர் சுப்ரமணியம் குற்றச்சாட்டுக்கு 'கபாலி' தயாரிப்பாளர் தாணு, "கபாலியின் வெற்றி குறித்து ஏற்கனவே நிறைய பேசிவிட்டேன். உங்களுக்கு சந்தேகம் என்றால், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் விவரங்களைத் தருகிறேன், அவர்களிடம் கேட்டறிந்து உண்மையைத் தெரிந்து கொள்ளலாம். முதலில் திருப்பூர் சுப்பிரமணியம் அவருக்கெதிரான சில குற்றச்சாட்டுகள் பற்றி விளக்கம் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். ஒரு விநியோகஸ்தராக, திரையரங்க உரிமையாளராக இருந்து அவர் மீதே நிறைய குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.

அவர் திரையரங்கு உரிமையாளர்களை மூளைச் சலவை செய்து, அவர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, தயாரிப்பாளருக்கு 40-50 சதவித லாபத்தை மட்டுமே தந்து, மீதியை அவரே வைத்துக் கொள்கிறர் என சிலர் எங்களுக்கு சொன்னார்கள். மேலும், தான் விநியோகிக்கும் படங்களை திரையிடும் திரையரங்கிலிருந்து உணவு, முன்பதி கட்டணம், க்யூப் விளம்பரக் கட்டணம் என அனைத்து லாபத்திலிருந்தும் பங்கு எடுத்துக் கொள்கிறார்.

அடுத்து, கபாலியைப் பொருத்த வரை, திருச்சி, செங்கல்பட்டு, மதுரை, திருநெல்வேலி என எங்கிருந்தும் யாரும் பிரச்சினையை எழுப்பவில்லை. திருப்பூர் சுப்பிரமணியம் மட்டுமே இப்படி பேசி வருகிறார். ஏன்? அவருக்கு நான் கோவை பகுதி வெளியீட்டு உரிமையை தரவில்லை. அதனால்தான் எனக்கெதிராக தவறான விஷயங்களைப் பேசி வருகிறார்.

அவர்தான் முதலில் ’கபாலி’ கோவை உரிமையை கேட்டு வந்தவர். 5 கோடிக்கு கேட்டார். ஆனால் வேறொருவர் 10 கோடிக்கு கேட்டதால் அவரிடம் கொடுத்துவிட்டேன். அப்போது கூட, உரிமையாளர்களிடம் ’கபாலி’யைத் திரையிட வேண்டாம் என்றும், அதிக விலைக்கு விற்றுவிட்டேன் என்றும் நிர்பந்தித்துள்ளார்.

என்னிடம் அவர் செய்த மலிவான செயல்களுக்கான ஆடியோ ஆதாரம் உள்ளன. கபாலி உரிமை கிடைக்காததால் வேண்டுமென்றே இந்த பிரச்சினையை கிளப்புகிறாரா என அவரிடம் கேளுங்கள்" என்று தெரிவித்துள்ளார் தாணு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x