Published : 18 Mar 2025 06:50 PM
Last Updated : 18 Mar 2025 06:50 PM
எம்.ஜி.ஆர் நடிப்பில் பா.நீலகண்டன் இயக்கிய முதல் படம், ‘சக்கரவர்த்தித் திருமகள்’. இந்தப் படத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து 17 படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள். இந்தக் கூட்டணியின் கடைசிப் படம், ‘நீதிக்குத் தலைவணங்கு’.
தஸ்தாயெவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ நாவல் பாதிப்பில் தெலுங்கு நடிகர் எம்.பாலையா, ‘நேரமு சிக்ஷா’ என்ற பெயரில் எழுதிய கதை இது. கே.விஸ்வநாத் இயக்கத்தில், கிருஷ்ணா, பாரதி, எம்.பாலையா என பலர் நடித்த இந்த தெலுங்கு படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து அதைத் தமிழில் ரீமேக் செய்தார்கள். அதுதான் ‘நீதிக்குத் தலைவணங்கு’.
எம்.ஜி.ஆர், லதா, எஸ்.வரலட்சுமி, நம்பியார், வி.கே.ராமசாமி, தேங்காய் சீனிவாசன், புஷ்பலதா, வி.எஸ்.ராகவன், வி.கோபால கிருஷ்ணன், எஸ்.வி.ராமதாஸ், ஐசரி வேலன் என ஏகப்பட்ட நடிகர்கள். இதன் கதையை எழுதி தெலுங்கில் நடித்த எம்.பாலையா இந்தப் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தம்பு ஒளிப்பதிவு செய்ய, ஆர்.கே.சண்முகம் வசனம் எழுதினார். உமையாம்பிகை புரொடக் ஷன்ஸ் சார்பில் கே.டி. சுப்பையா, தயாரித்த இந்தப் படத்துக்கு எம்.எஸ். விஸ்வநாதன் இசை அமைத்தார். பாடல்கள் அனைத்தும் ஹிட்.
எத்தனையோ தாலாட்டுப் பாடல்கள் வந்திருந்தாலும் இந்தப் படத்தில் இடம்பெறும் ‘இந்தப் பச்சைக்கிளிக்கொரு...’ பாடலுக்கு அவ்வளவு வரவேற்பு. ‘பார்க்க பார்க்கச் சிரிப்பு வருது’ பாடல் சமையல் கட்டில் நடந்தாலும் அதிலும் அரசியல் விஷயங்களில் விளையாடி இருப்பார் கவிஞர் வாலி. ‘நான் பார்த்தா பைத்தியக்காரன்’ பாடலில் நிறைய தத்துவங்களைப் பேசியிருப்பார், புலமைபித்தன். ‘காலம் நெருங்குது கதை முடிய இந்தக் காட்டுநரி கூட்டத்துக்கு விதி முடிய’ என்ற வரிகளை அப்போதைய அரசியல் சூழலுடன் பொருத்திப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டார்கள் ரசிகர்கள்.
படத்தின் தொடக்கத்தில் ஸ்டைலாக தோன்றும் எம்.ஜி.ஆர், கதைப்படி வீட்டை விட்டு வெளியேறியதும் சாதாரண உடைகளில்தான் வருவார். திடீரென கனவில் வருவது போலான ‘கனவுகளே ஆயிரம் கனவுகளே’ பாடலில் ஸ்டைலாக கோர்ட் சூட் அணிந்து வந்ததும் ரசிகர்கள் உற்சாகமடைந்து, விசில் அடித்துக் கொண்டாடியதை இப்போதும் சிலிர்ப்புடன் சொல்கிறார்கள், அக்கால ‘ஃபேன்ஸ்’.
எம்.ஜி.ஆர் படங்களில் அவருக்கு ராமு, இளங்கோ என்பது போலதான் பெயர் வைத்திருப்பார்கள். இதில் மாடர்னாக விஜய் என்று வைத்திருந்தார்கள். எமர்ஜென்சி நேரத்தில் வெளியான படம் என்பதால் படத்தின் முக்கிய சண்டைக் காட்சிகளுக்குக் கட் கொடுத்தது தணிக்கை. அதனால் அக்காட்சிகள் அதிக ஆக்ரோஷமாக இருக்காது.
இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி, ஒகேனக்கல், வலமுரி ஷேத்ரா ஆகிய மூன்று இடங்களில் படமாக்கினார்கள். இந்த லொகேஷனை தேர்வு செய்ததே எம்.ஜி.ஆர்.தான். ‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்துக்கு அங்கு படப்பிடிப்பு நடத்தப்பட்டதால் அதை ஞாபகப்படுத்தி அதே லொகேஷனில் படமாக்கி இருக்கிறார்கள். அதிக ரிஸ்க் எடுத்து உருவாக்கப்பட்ட இந்த கிளைமாக்ஸ் காட்சி அப்போது அதிகம் பேசப்பட்டது.
பல திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடிய இந்தப் படத்தை வேறொரு சென்டிமென்டுடன் ஒப்பிடுகிறார்கள் எம்.ஜி.ஆர். ரசிகர்கள். அதாவது இயக்குநர் பா.நீலகண்டனும் எம்.ஜி.ஆரும் இணைந்த முதல் படமான ‘சக்கரவர்த்தித் திருமகள்’ 1957-ம் ஆண்டு ஜனவரி 18-ம் தேதி வெளியானது. இருவரின் கடைசிப்படமான ‘நீதிக்குத் தலைவணங்கு’ வெளியான தேதி, மார்ச் 18. இதனால் இந்த ‘18’-ஐ சென்டிமென்டாக பார்க்கிறார்கள் அவர்கள்.
முந்தைய பகுதி > முல்லைவனம்: ஸ்ரீராம் - குமாரி ருக்மணி ஜோடியின் கெமிஸ்ட்ரி | அரி(றி)ய சினிமா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...