Published : 17 Mar 2025 09:59 AM
Last Updated : 17 Mar 2025 09:59 AM
‘காதலில் சொதப்புவது எப்படி?’, ‘காவிய தலைவன்’, ‘இறுதிச்சுற்று’, ‘விக்ரம் வேதா’ என பல படங்களை, தனது ஒய் நாட் ஸ்டூடியோ சார்பில் தயாரித்தவர் எஸ். சஷிகாந்த். இவர் ‘டெஸ்ட்’ என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் இணைந்து நடித்துள்ள இந்தப் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஏப்.4-ல் நேரடியாக வெளியாகிறது. இந்தப் படம் குறித்து சஷிகாந்திடம் பேசினோம்.
இந்தப் படத்துல பெரிய நட்சத்திரங்கள் இருந்தும் ஓடிடி ரிலீஸ் ஏன்?
ஒரு அறிமுக இயக்குநரோட படம், பல்வேறு நாடுகள்ல ஏராளமான பார்வையாளர்களை வச்சிருக்கிற நெட்பிளிக்ஸ் தளத்துல வெளியாறதை எனக்கு கிடைச்ச பெரிய வாய்ப்பா பார்க்கிறேன். இந்தப் படம் ஒரே நாள்ல உலகம் முழுவதுமான பார்வையாளர்களுக்கு போய் சேரணும்னு நினைச்சேன். அதுக்கு நெட்ப்ளிக்ஸ் ரிலீஸ், சரியாக இருக்கும்னு தோணுனதால அதுல பண்றோம்.
இயக்குநர் ஆசை எப்படி வந்தது?
அதுக்கு பெரிய கதை இருக்கு. நான் முதல்ல கட்டிட கலை நிபுணர். எனக்கு சினிமாவுல கதை சொல்லணும்னு ஆசை உண்டு. எல்லாத்தையும் முறையா கத்துக்கணும் இல்லையா? அதனால தயாரிப்பாளரா உள்ள வந்தேன். அதாவது டைரக்டர் ஆகணுங்கறதுக்காகத்தான், தயாரிப்பாளர் ஆனேன். ஒவ்வொரு படம் முடிச்சதும் அடுத்து படம் இயக்கலாம்னு நினைப்பேன். ஆனா, அது தள்ளி போயிட்டே இருந்தது. இதுக்கு இடையில 12 வருஷத்துக்கு முன்னாலயே ‘டெஸ்ட்’ கதையை எழுதினாலும் கரோனா பொதுமுடக்கக் காலத்துல அதை தூசித் தட்டி எடுத்து, நிறைய மாற்றினேன். அப்படித்தான் இயக்குநர் ஆனேன்.
இது கிரிக்கெட் பற்றிய படமா?
இல்லை. ஆனா, கிரிக்கெட்டும் இருக்கு. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ‘டெஸ்டிங்’ நேரம் வரும். இந்தப் படத்துல ஒரு மூணு கேரக்டருக்கும் அப்படியொரு இக்கட்டான நேரம் வருது. அந்த ‘டெஸ்டை’ அவங்க எப்படி எதிர்கொள்றாங்க அப்படிங்கறது கதை. இதுல டெஸ்ட் கிரிக்கெட் பற்றிய விஷயங்களும் வரும். இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மாதிரி ஒரு காட்சி இருக்கு. அதுல சித்தார்த் தவிர மற்ற 22 பேருமே கிரிக்கெட் வீரர்கள்தான் நடிச்சிருக்காங்க. அந்த பாடி லேங்குவேஜ்ல இருந்து எல்லாமே நம்பகத்தன்மையோட இருக்கணும்னு ரஞ்சி போட்டிகள்ல விளையாடினவங்களை நடிக்க வச்சிருக்கோம்.
கிரிக்கெட் காட்சிகளை எங்க படமாக்குனீங்க?
சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்துல எடுக்க அனுமதி கேட்டோம். அங்க உடனே போய் எடுக்க முடியாது. ஐபிஎல் தொடங்குறதுக்கு 10 நாளுக்கு முன்னால பிட்ச்-களை மாத்துறதுக்காக கொஞ்சம் டைம் கிடைக்கும். அந்த நேரத்துலதான் ஷூட் பண்ண முடிஞ்சது. அதுக்கு மட்டும் 9 மாசம் காத்திருந்தோம். அது மட்டுமில்லாம, சினிமா ஷூட்டிங்குக்கு பயன்படுத்தற நம்ம கேமராவை வச்சு அதை ஷூட் பண்ண முடியாது. அதை ஷூட் பண்ண ஒரு இலக்கணம் இருக்கு. எப்படின்னா, ஒரு கேமரா, பந்து வீச்சாளரை ஒரு ஆங்கிள்ல இருந்து பின்பற்றும். இன்னொரு கேமரா, பேட்ஸ்மேனை கண்காணிக்கும். இன்னொன்னு பந்து எங்க போகுதுன்னு பார்க்கும். அப்படித்தான் கிரிக்கெட் மேட்ச்-சை ஷூட் பண்றாங்க. அதே எபெக்ட்ல இருந்தாதான் நல்லா இருக்கும்னு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் யூனிட்கிட்ட கேட்டு தெரிஞ்சுகிட்டு பண்ணினோம். அதுவே எனக்கு ஒரு டெஸ்ட்-தான்.
நயன்தாரா இதுல எப்படி வந்தாங்க?
இந்தப் படத்துக்குள்ள முதல்ல வந்தது சித்தார்த். இந்த கதையை எழுதும்போதே அர்ஜுன்ங்கற கேரக்டர்ல அவர்தான் நடிக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். அப்படித்தான் அவர் முதல்ல வந்தார். பிறகு ஒரு பெண் கேரக்டரை எழுதும்போது நயன்தாரா பெயரை போட்டுதான் எழுத ஆரம்பிச்சேன். அவங்களை எனக்குத் தெரியும் அப்படிங்கறதால, இந்த கதையில வர்ற குமுதா கேரக்டர் பற்றி ஃபோன்ல சொன்னேன். அவங்களோட நிஜ கேரக்டருக்கும் இந்தப் படத்தோட கேரக்டருக்கும் சில விஷயங்கள் ஒத்துபோனதால, நடிக்கிறேன்னு சொல்லிட்டாங்க. அப்புறம் மாதவன், அவரை சமாதானப்படுத்தத்தான் நிறைய நாளாச்சு. இந்த ஸ்கிரிப்டை இன்னும் சிறப்பா மாத்தறதுக்கு என்னைத் தூண்டிக்கிட்டே இருந்தார்.
பாடகி சக்தி கோபாலனை இசை அமைப்பாளரா அறிமுகப்படுத்தறீங்க…
அவங்களை எனக்கு ரொம்ப வருஷமா தெரியும். அவங்களும் ஆர்கிடெக்ட்தான். அவங்களுக்கு நான் புரபஷராவும் இருந்திருக்கேன். அவங்க பாடகியா சில படங்கள்ல வேலை பார்த்தாலும் அவங்க திறமை எனக்கு தெரியும். எனக்கு பாடல்களை விட பின்னணி இசை ரொம்ப முக்கியம். ஸ்கிரிப்ட் எழுத ஆரம்பிச்சதுல இருந்தே இந்த படத்துல அவங்க, கூட இருக்காங்க. அவங்களோட சிறப்பான இசையை இதுல பார்க்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment