Published : 09 Mar 2025 07:17 PM
Last Updated : 09 Mar 2025 07:17 PM
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வேலை வெட்டி இல்லாமல் பொழுதைக் கழிக்கிறார்கள் வேலனும் (விமல்) அவர் நண்பர் உரப்பும் (சூரி). மது போதையில், ஊர்க்காரர்களுக்கு எவ்வளவு டார்ச்சர் கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுக்கிறார்கள். அவர்களின் கொடுமை தாங்காமல் ஊர் கூடி மொய்பிரித்து, வேலனை மட்டும் மலேசியாவுக்கு அனுப்பி வைக்கிறது. அவர் இல்லாமல் ஊர் நிம்மதியாக இருக்கும் போது, திடீரென்று வந்து இறங்குகிறார் அவர். ஊரில் அவருக்கு ராஜ மரியாதை நடக்கிறது.
வேலனுக்கு அப்படியொரு மரியாதை கிடைக்கக் காரணம் என்ன? ஊர் திரும்பிய அவர், பழைய வேலனாகவே இருந்தாரா? இல்லை ஊரை மாற்றினரா? என்பது கதை. முதல் பாதி ஜாலி கேலி, இரண்டாம் பாதியில் சமூகத்துக்கான மெசேஜ் என்கிற பார்முலா கதைகளின் பாணியில் வந்திக்கிறது ‘படவா’. விமல், சூரி ‘காம்பினேஷன்’ காமெடி சில இடங்களில் நன்றாக ஒர்க் அவுட் ஆகின்றன.
பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு கிட்டிப்புல், பம்பரம் விளையாடச் சொல்லித்தருவது, சொந்த அக்காவிடம் திருடி, மாமாவிடம் விற்பது, ஊர் தூங்கும்போது பட்டாசு வெடித்து தொல்லை கொடுப்பது, டாஸ்மாக் செலவுக்கு சுடுகாட்டுக் கூரையை திருடுவது என நகைச்சுவைக்காக எழுதப்பட்டிருக்கும் திரைக்கதையில் எந்த லாஜிக்கும் இல்லை. மலேசிய ரிட்டர்ன் மாப்பிள்ளைக்காக அக்கா, மாமா, அக்கா மகள் என குடும்பமே நண்பன் சூரியிடம் பேரம் பேசும் இடங்களில் ஆரோக்கியமான வசனங்களை வைத்திருக்கலாம்.
கருவேல மரங்களால், விவசாய நிலங்களின் பாதிப்பு பற்றியும் விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றியும் பேசும் இடங்களில் கவனிக்க வைக்கிறார், இயக்குநர் கே.வி.நந்தா. ஹீரோ ஆவதற்கு முன், சூரி நடித்த படம் என்பதால் சில காட்சிகளில் வரும் ‘கன்டினியூட்டி மிஸ்சிங்’ பெரும் குறையாகத் தெரியவில்லை.
இதே போன்ற கதைகளில் விமலும் சூரியும் ஏற்கெனவே நடித்திருந்தாலும் இதிலும் சிறந்த நடிப்பைத் தந்திருக்கிறார்கள். இருவரின் உடல்மொழியும் வசன உச்சரிப்பும் அவர்களின் முந்தைய படங்களை ஞாபகப்படுத்துகின்றன. கதாநாயகி ஸ்ரீரிட்டா ராவ் கால்நடை மருத்துவராக வந்து ஹீரோவை காதலிக்கும் வேலையைச் செய்கிறார்.
செங்கல் சூளை அதிபராக வரும் ராமச்சந்திர ராஜு தோற்றத்திலேயே வில்லத்தனத்தைக் காண்பிக்கிறார். ஹீரோவின் சகோதரியாக வரும் தேவதர்ஷினி அனுபவ நடிப்பை வழங்கி இருக்கிறார். மலேசிய நண்பனாக வரும் ராமர் உட்பட சில காட்சிகளில் வருபவர்களும் கதைக்குத் துணை புரிந்திருக்கிறார்கள்.
ஜான் பீட்டர் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையும் கதையை இழுத்துச் செல்ல உதவி இருக்கிறது. ராமலிங்கத்தின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகள் கலர்புல்லாக இருக்கின்றன. ‘சிறுத்தை’ கணேஷின் ஆக்ஷன் காட்சிகளில் வியப்பு. கதையில் லாஜிக் ஏதுமில்லை என்றாலும் கருவேல மர மெசேஜுக்காக படவாவை ரசிக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...