Published : 04 Mar 2025 02:43 PM
Last Updated : 04 Mar 2025 02:43 PM

ஜார்ஜ் மரியன்: உறுதுணை நடிப்பில் உருக வைக்கும் நிகழ்த்துக் கலைஞன்!

செல்லுலாய்ட் தொடங்கி டிஜிட்டல் வரை தமிழ் சினிமாவில் அம்மா சென்டிமென்ட், தங்கச்சி சென்டிமென்ட் படங்களுக்கு பஞ்சமே இருக்காது. அவ்வப்போது அப்பாவை மையப்படுத்தி வரும் படங்களும் தலைக்காட்டும். சினிமாவில் வரும் பெரும்பாலான காட்சிகள் நிஜ வாழ்க்கையில் பொருந்திப் போவதில்லை என்றாலும் குடும்பம் சார்ந்து வரக்கூடிய காட்சிகளும் வசனங்களும் பெரும்பாலும் பொருந்தக் கூடியதாக இருக்கும். எனவேதான் அதுபோன்ற சினிமாக்களைப் பார்க்கும்போது ரசிகர்கள் தங்களை எளிதாக அதில் கனெக்ட் செய்து கொள்கின்றனர். உறவுகள் சார்ந்து வரும் அத்தகைய கதாப்பாத்திரங்களில் வரும் நடிகர்களும் ரசிகர்களின் மனதில் நிலைத்து விடுகின்றனர்.

அந்த வகையில் 'தவமாய் தவமிருந்து' ராஜ்கிரண், '7ஜி ரெயின்போ காலனி' விஜயன், 'கனா' சத்யராஜ், 'சந்தோஷ் சுப்ரமணியம்' பிரகாஷ் ராஜ், 'யாரடி நீ மோகினி' ரகுவரன், 'பிசாசு' ராதாரவி, 'வேலையில்லா பட்டதாரி' சமுத்திரக்கனி என அப்பா கதாப்பாத்திரங்கள் பேசப்பட்ட திரைப்படங்கள் ஏராளம். இந்த வரிசையில் அண்மையில் இணைந்திருக்கும் படம்தான் 'டிராகன்'. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனின் தந்தை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ஜார்ஜ் மரியன் மீண்டும் ஒருமுறை ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருக்கிறார்.

ஜார்ஜ் மரியன் கடந்த 1989 துவங்கி 2002 வரை கூத்துப்பட்டறையில் பட்டைத் தீட்டப்பட்ட நடிகர். மிகச்சிறந்த நிகழ்த்துக் கலை அனுபவம் கொண்ட அவர், இயக்குநர் தங்கர்பச்சனின் 'அழகி' படத்தின் மூலம்தான் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார். அப்படத்தில் கலகலப்பான பள்ளிக்கூட காட்சிகளில் கணக்கு வாத்தியாராக வந்திருப்பார். அவரது வட்டார வழக்கும், உடல்மொழியும் அவரை முதல் படத்திலேயே உற்றுநோக்க வைத்தது. அதேபோல் இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் 'சைவம்' திரைப்படத்தில் ராஜா என்ற வீட்டு வேலைக்காரர் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். முகபாவனைகள், நகைச்சுவை என அந்த கதாப்பாத்திரத்துக்கு மிகசிறந்த தேர்வு ஜார்ஜ் மரியன் என்று ஊடகங்கள் வெகுவாக அவரைப் பாராட்டியிருந்தன. இயக்குநர் சுந்தர் சி-யின் கலகலப்பு படத்தில் நடித்திருப்பார்.

அந்தப் படத்தில் விமல், மிர்ச்சி சிவா, அஞ்சலி, ஓவியா, சந்தானம், மனோபாலா, இளவரசு, கருணாகரன், ஜான் விஜய், யோகி பாபு என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே இருக்கும். அதில் கான்ஸ்டபிள் பச்சை பெருமாள் என்ற கதாப்பாத்திரத்தில் வரும் ஜார்ஜ் மரியன் வரும் நகைச்சுவை காட்சிகளில் தனியாக ஸ்கோர் செய்திருப்பார். தொடர்ந்து தெய்வத்திருமகள், மதராசப்பட்டினம், வேலாயுதம், மவுனகுரு, பிகில், ஸ்பைடர், விஸ்வாசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த வந்த ஜார்ஜ் மரியனுக்கு மிகப் பெரிய திருப்பத்தைக் கொடுத்த படம் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் 'கைதி' தான்.

அந்தப் படத்தில் கான்ஸ்டபிள் நெப்போலியனாக பணியில் சேர வரும் ஜார்ஜ் மரியன் தனது தேர்ந்த நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருப்பார். நகைச்சுவைத் தாண்டி குணச்சித்திரப் பாத்திரங்களிலும் தன்னால் நடிக்க முடியும் என்று நிரூபித்திருப்பார். அந்த டார்க் ஆக்சன் கதைக்களத்துக்கு அவரது பங்களிப்பு அத்தனை யதார்த்தமாகப் பொருந்திப் போயிருக்கும். அதன் விளைவு லோகேஷின் எல்சியு- வான 'லியோ' திரைப்படத்தில் கான்ஸ்டபிள் நெப்போலியனாக வந்திருப்பார். தனது தரப்பு நியாயத்தை விளக்கி விஜய்யிடம் மன்னிப்புக் கேட்கும் காட்சியில் கவனிக்க வைத்திருப்பார் ஜார்ஜ் மரியன்.

அதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தவருக்கு மற்றொரு கவனிக்கத்தக்க படமாக அமைந்தது குணா குகையை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்ட மலையாளத் திரைப்படமான 'மஞ்ஞுமெல் பாய்ஸ்'. குணா குகைக்கு செல்லும் பாதையில் கடை வைத்திருக்கும் ஆறுமுகம் கதாப்பாத்திரத்தில் வரும் ஜார்ஜ் மரியன், ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவும் மனப்பான்மைக் கொண்டவராக சிறப்பாக நடித்திருப்பார். சாத்தானின் சமையலறைக்குள் விழுந்தவர்களை மீட்க செல்லும் எளிய மனிதர்களின் நம்பிக்கையை வெளிப்படுத்தும் அந்த பாத்திரத்தில் ஜார்ஜ் மரியன் தனது மிகையற்ற நடிப்பால் ஈர்த்திருப்பார்.

இவையெல்லாம் ஓகே. தமிழ் சினிமா கதாப்பாத்திரங்களில் மிக முக்கிய பாத்திரப் படைப்புகளில் ஒன்று ஹீரோவின் தந்தை கதாப்பாத்திரம். தமிழ் சினிமாவில் அப்பாக்களுக்கான ரெஃபரன்ஸ்கள் ஏராளம். இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து நினைத்திருந்தால் அத்தகைய ரெஃபரன்ஸ் அப்பாக்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து இருக்கலாம். ஆனால் அவர் சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த ஜார்ஜ் மரியனை தனது கதைக்கு சரியாக இருப்பார் என்ற அவரது தேர்வு வீண்போகவில்லை.

'அநீதி' படத்தில் வரும் "தங்கப்புள்ள" வசனத்துக்கு இணையாக சமூக வலைதளங்களை தற்போது ஆக்கிரமித்திருப்பது 'டிராகன்' படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் வரும் வசனம்தான். "எல்லாம் போச்சேனு வருத்தப்படாத கண்ணு, திரும்ப எழுந்து ஓடு, அப்பா நான் இருக்கேன் பாத்துக்கலாம்" என்று பிரதீப் ரங்கநாதனிடம் ஜார்ஜ் மரியன் பேசும் வசனம்தான், பலரையும் அவர்களது தந்தையின் நினைவுகளை கிளறி அழ வைத்துக் கொண்டிருக்கிறது. முகநூல் முழுக்க 'டிராகன்' படத்தின் இந்த காட்சியைக் குறிப்பிட்டு ஏராளமான பதிவுகளை நாள்தோறும் காணமுடிகிறது.

இதுபோன்ற காட்சிகளில் பேசப்படும் வசனங்களைத் தாண்டி அதை பேசும் நபரும் மிக நெருக்கமானவராக மாறிவிடுவர். அந்தவகையில் தனது யதார்த்தமான நடிப்பால் அந்த இடத்தை கச்சிதமாக தனதாக்கிக் கொண்டு நம்பிக்கையூட்டும் தந்தையாக வாழ்ந்து காட்டியிருக்கிறார் ஜார்ஜ் மரியன். தனது மகன் எது சொன்னாலும் அதிலிருக்கும் நல்லதை மட்டும் எடுத்துக்கொண்டு அவனை மீண்டும் மீண்டும் ஓட வைத்த அப்பாக்களின் தியாகம்தான், பிரதீப் ரங்கநாதன் போன்ற எண்ணற்ற மகன்களை கண்ணீர் சிந்த செய்திருக்கிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவின் அப்பா சென்டிமென்ட் படங்களின் பட்டியலில் இந்த 'டிராகன்' திரைப்படமும், ஜார்ஜ் மரியனின் கதாப்பாத்திரமும் நிலையான இடத்தை நிச்சயம் பிடிக்கும் .

உயரம், நிறம், தோற்றம் என கோலிவுட் சினிமாத்தனங்களின் டெம்ப்ளேட்களில் பொருந்தக்கூடியவர் அல்ல ஜார்ஜ் மரியன். ஆனால், தோற்றுக் கொண்டே இருக்கும் தன் மகனை தொடர்ந்து ஓடுவதற்கு ஊக்கப்படுத்தும் தனபால் என்ற ஜார்ஜ் மரியனின் தந்தை கதாப்பாத்திரம், படம் பார்ப்பவர்களை ஏதோ செய்கிறது. இத்தனைக்கும் இறுதிக் காட்சியில் ஜார்ஜ் மரியன் வசனங்கள்தான் பேசியிருப்பார். அதுவே காண்போரை உருக வைத்திருக்கிறது. 2கே கிட்ஸ்களின் ரசனைக்கு கொஞ்சமும் குறையில்லாத இத்தகைய படங்களில் தரப்படும் முக்கியத்துவமே ஜார்ஜ் மரியன் போன்ற உறுதுணைப் பாத்திரத்தில் நடிக்கும் கலைஞர்களின் தொடர் ஓட்டத்துக்கு உந்துதலைக் கொடுக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x
News Hub
Icon