Published : 27 Feb 2025 11:43 AM
Last Updated : 27 Feb 2025 11:43 AM
மாடர்ன் தியேட்டர்ஸின் கதை இலாகாவில் அப்போது இருந்தார், இயக்குநரும் நடிகருமான ஏ.பி.நாகராஜன். அவரும் நடிகர் வி.கே.ராமசாமியும் சிறு வயது நண்பர்கள். கலையுலக இரட்டையர் என்று அழைக்கப்பட்டவர்கள். அந்த நட்பின் அடிப்படையில் ஏ.பி.நாகராஜன், ‘நாம ஏன் சொந்தமாகப் படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கக் கூடாது?’ என்று கேட்டார், வி.கே.ராமசாமியிடம்.
சில பல யோசனைகளுக்குப் பிறகு, ஸ்ரீலட்சுமி பிக்சர்ஸ் என்று பெயரில் இருவரும் தொடங்கினார்கள், தயாரிப்பு நிறுவனத்தை. திடீரென்று ஒரு நாள், ஏ.பி. நாகராஜன், “இது உங்களின் சொந்த நிறுவனமாக இருக்கட்டும். நான் பார்ட்னராவதற்கு என்னிடம் அவ்வளவு பணம் இல்லை, சேர்ந்து உழைப்போம்” என்று சொல்ல, அதை ஏற்கவில்லை வி.கே.ராமசாமி. “பணம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, சேர்ந்தே ஆரம்பிப்போம்" என்று கூறி, அவரையும் இணைத்துக்கொண்ட வி.கே.ராமசாமி, ஸ்ரீலட்சுமி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்த முதல் படம், ‘மக்களைப் பெற்ற மகராசி’.
இதில் சிவாஜி, பானுமதி, நம்பியார், சாரங்கபாணி, வி.கே.ராமசாமி, சகாதேவன், எம்.என்.ராஜம், கண்ணாம்பா, டி.பி.முத்துலட்சுமி என பலர் நடித்தனர். கே.சோமு இயக்கிய இந்தப் படத்துக்கு கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். பாடல்களை, மருதகாசி, தஞ்சை ராமையா தாஸ், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதினர்.
பண்ணையார் சங்கிலியப்பனுக்கும் அவர் தங்கை அங்கம்மாளின் மகன் செங்கோடன் குடும்பத்துக்கும் தீராத பகை. இதற்கு நேர் மாறாகப் பண்ணையார் மகன் கண்ணனுக்கும் செங்கோடன் தங்கை தங்கத்துக்கும் காதல். பிறகு எப்படி பகை மறந்து, குடும்பமும் காதலும் ஒன்று சேர்கிறது என்பது கதை. செங்கோடனாக சிவாஜி, அவர் ஜோடி ரங்கம்மாவாக பானுமதி, சகோதரி தங்கமாக எம்.என்.ராஜம், கண்ணனாக நம்பியார் நடித்தனர். வழக்கமாக வில்லன் கதாபாத்திரங்களில் வரும் நம்பியாருக்கு இதில் நல்லவன் வேடம். அதில் சிறப்பாகப் பொருந்தியிருந்தார்.
படத்தில் கொங்கு தமிழ் பேசி நடித்திருப்பார் சிவாஜி. அப்போது அதைப் பெரிதும் ரசித்தார்கள். சிவாஜியின் அறிமுகம், “மணப்பாறை மாடுகட்டி மாயவரம் ஏறு பூட்டி, வயக்காட்டை உழுதுபோடு சின்னக்கண்ணு” என்ற பாடலுடன் தொடங்கும். இந்தப் பாடல் அப்போது பட்டி தொட்டி எங்கும் ஒலித்த பாடல்.
சிவாஜிக்கும் பானுமதிக்கும் மோதலில் தொடங்கும் காதல், பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள நினைக்கும் நம்பியார்- எம்.என்.ராஜம் ஜோடி, சிவாஜிக்கும் வி.கே.ராமசாமிக்குமான மோதல், பாடல்களின் ‘பிளேஸ்மென்ட்’ என தெளிவானத் திரைக்கதையும் முக்கிய கதாபாத்திரங்களின் நடிப்பும் இந்த நவீன காலத்திலும் ரசிக்க வைக்கிறது, இந்தப் படத்தை!
இதில் இடம்பெற்ற ‘ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?’ என்ற சூப்பர் ஹிட் காதல் பாடலில் நம்பியாரும் எம்.என்.ராஜமும் நடித்திருப்பார்கள். கோட் சூட் அணிந்து ஸ்டைலாக வரும் நம்பியார் மிகவும் அழகாக இருப்பார். ‘அடி தாராபுரம் தாம்பரம் உன் தலையில கனகாம்பரம்...’, ‘சீமைக்குப் போயி படிச்சவரு’, ‘போறாவளே போறாவளே பொன்னுரங்கம்...’, ‘மல்லியக்கா மல்லியக்கா எங்கடி போற..?’, பானுமதி பாடிய ‘சொன்ன பேச்ச கேட்கணும்...’, ‘வந்தது யாருனு உனக்குத் தெரியுமா..?’ ஆகிய பாடல்கள் வரவேற்பைப் பெற்றன.
சிவாஜி பிலிம்ஸ் இந்தப் படத்தை விநியோகம் செய்தது. 1957-ம் ஆண்டு இதே பிப்ரவரி 27-ம் தேதியில் வெளியாகி வெற்றி பெற்ற இந்தப் படம், கன்னடத்தில் ‘அண்ணா தங்கை’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. ராஜ்குமாரும் சரோஜாதேவியும் நடித்தனர்.
> முந்தைய பகுதி: சிவாஜி வில்லனாக நடித்த ‘பெண்ணின் பெருமை’ | அரி(றி)ய சினிமா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment