Published : 24 Feb 2025 06:39 AM
Last Updated : 24 Feb 2025 06:39 AM
ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடித்து மார்ச் 7-ல் வெளியாக இருக்கும் படம், ‘கிங்ஸ்டன்’. இதை, ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தனது பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்தும் இருக்கிறார், அவர். அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் திவ்யபாரதி, சேத்தன், அழகம் பெருமாள், இளங்கோ குமரவேல் என பலர் நடித்திருக்கிறார்கள்.
படம் பற்றி என்ன சொல்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்?
“இது வழக்கமா பார்க்கிற சினிமா இல்லை. ஒரு பெரிய 'சினிமாடிக் எக்ஸ்பீரியன்ஸை' கொடுக்கிற படம். ஹாலிவுட்ல வந்திருக்கிற ‘ஹாரிபாட்டர்’ மாதிரி, ‘பைரேட்ஸ் ஆஃப் த கரீபியன்ஸ்’ மாதிரியான படம் இது. அவங்க பெரிய பட்ஜெட்ல பிரம்மாண்டமா பண்ணியிருந்தாலும் எங்களுக்கு கிடைச்சிருக்கிற பட்ஜெட்ல இதுல நாங்க ஒரு புது உலகத்தை உருவாக்கி இருக்கிறோம். படத்துல நிறைய சர்பிரைஸ் இருக்கும்.
என்ன மாதிரியான சர்பிரைஸ்?
இந்தப் படம் மூலமா இந்தியாவுக்கே ஒரு புது ஜானரை அறிமுகப்படுத்து றோம். கடல்ல நடக்கிற ஹாரர் கதை. இது மாதிரி இந்திய சினிமாவுல வேற படம் வரலை. அதுல நாங்க ஃபேன்டஸி அட்வெஞ்சர் விஷயத்தையும் மாயாஜால விஷயங்களையும் வச்சிருக்கோம். இந்தப் படத்துல வர்ற மாதிரி ஒரு விஷுவலை இந்திய படங்கள்ல இதுக்கு முன்னாடி பார்த்திருக்க மாட்டீங்க. கண்டிப்பா புது திரை அனுபவத்தைக் கொடுக்கும்னு உறுதியா சொல்றேன்.
கடலுக்குள்ள நடக்கிற கதைன்னா எப்படி?
இது நம்ம ஊரு கதை. தூத்துக்குடியில தொடங்கும். சபிக்கப்பட்ட கடல்னு அங்கு ஒரு பகுதி இருக்கும். அங்க மீன் பிடிக்கவே முடியாது. அதை ஏன் சபிக்கப்பட்ட கடல்னு சொல்றாங்கன்னா, அதுக்கு ஒரு பழங்கதை இருக்கு. அங்கயிருந்து ஆரம்பிச்சு எங்க போயி முடியுதுன்னு படம் போகும். அங்க இருக்கிற ஒரு இளைஞன், கிராமத்து நம்பிக்கையை மீறி அந்தக் கடலுக்கு மீன் பிடிக்க போறான். அப்பஎன்ன நடக்குதுன்னு திரைக்கதை இருக்கும். தூத்துக்குடி பகுதி ‘நேட்டிவிட்டி’யை பயன்படுத்தி இருக்கோம். கதை , நிலத்துலயும் கடல்லயும் நடக்கும். இதுக்கிடையில ஒரு மேஜிக் உலகமும் இருக்கு.
இதோட அடுத்தடுத்த பாகங்கள் உருவாக போகுதுன்னு சொன்னாங்களே...
இது ஒரு சினிமாடிக் வேர்ல்டு. இதை பார்வையாளர்கள் ஏத்துக்கிட்டாங்கன்னா அடுத்தடுத்த பாகங்கள் உருவாகும். இது மாதிரி படங்களுக்கு கிராபிக்ஸ் ரொம்ப முக்கியம். நிஜம்னு நம்பற மாதிரி பல காட்சிகளை உருவாக்கி இருக்கோம். சாதாரண படத்துக்கு ஆகுற செலவைவிட நாலு மடங்கு பட்ஜெட் இதுக்கு ஆகியிருக்கு.
நடிகர், இசையமைப்பாளர் அப்படிங்கறதைத் தாண்டி இந்தப் படத்தை தயாரிக்கவும் செஞ்சிருக்கீங்க...
ஆமா. பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ்ங்கற தயாரிப்பு நிறுவனத்தை நான் தொடங்கும்போதே, இப்படியொரு பிரம்மாண்ட படத்துல இருந்து ஆரம்பிக்கலாம்னு நினைச்சேன். இந்த படத்தோட ஜானர்ல இருந்து நிறைய விஷயங்கள் புதுசா இருந்தது. நானே தயாரிக்கும்போது இந்தக் கதைக்கு வேண்டியதை சுதந்திரமா பண்ணலாம்னு நினைச்சேன். இயக்குநருக்கு என்ன தேவையோ அதை கொடுத்தோம். ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா ஒரு ஏரியாவை பண்ணிக் கொடுத்தார். அப்புறம் கோகுல் பினோய் ஒளிப்பதிவாளரா வந்தார். படத்துல அந்த ரிச்னஸ் தெரியும். நம்ம ஊர் கதை, மற்ற மொழிகளுக்கு போகட்டும்னு தமிழ் மட்டுமில்லாம தெலுங்கு, இந்தியிலயும் வெளியிடறோம்.
கடல்ல ஷூட் பண்ணறது கஷ்டமாச்சே?
கடலூர்ல சில காட்சிகளை கடல்ல எடுத்தோம். கஷ்டம்தான். நாங்க ஒரு படகுல இருந்தா இன்னொரு படகுல கேமரா இருக்கும். அங்க லைட் முக்கியம். எல்லாம் சரியா இருக்குன்னு நினைச்சா, வேறொரு பிரச்சினை வந்து நிற்கும். அதை தாண்டிதான் முடிச்சிருக்கோம். ‘அண்டர்வாட்டர்’ காட்சிகளும் படத்துல இருக்கு. மூனு நிமிஷம் தண்ணிக்குள்ள மூச்சை பிடிச்சுட்டு இருக்கிறதுக்கு பயிற்சி எடுத்தோம். மும்பையில இருந்து ஒரு டீம் எங்களுக்கு பயிற்சி கொடுத்தாங்க. அது பெரிய சவால்தான். இசை அமைக்கிறதுலயும் இந்தப் படம் சவாலாகத்தான் இருந்தது. 4 பாடல்கள் இருக்கு. அடுத்தடுத்து வெளியாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...