Published : 23 Feb 2025 08:53 AM
Last Updated : 23 Feb 2025 08:53 AM

டிராகன்: திரை விமர்சனம்

பொறியியல் கல்லூரியில் ‘பிரஷ்சர்களை’ வரவேற்கும் கல்லூரி முதல்வர் மயில்வாகனன் (மிஷ்கின்), இப்படியொரு மாணவனைப் போல நீங்கள் ஆகிவிடக்கூடாது என்று முன்னாள் மாணவரான டிராகன் என்கிற ராகவனை (பிரதீப் ரங்கநாதன்) உதரணமாகக் காண்பிக்கிறார். அவர் அப்படிச் சொல்ல என்ன காரணம்? 48 அரியர்களை வைத்திருந்த அந்த டிராகன், அப்படி வேறு என்ன செய்தார்? இப்போது அவர் என்னவாக இருக்கிறார்? என்பதுதான் கதை.

கெத்தான கல்லூரி வாழ்க்கை, அங்கு அவளே உலகமென இருக்கும் காதல், பேராசிரியர்களை மதிக்காத தெனாவட்டு, அரியருடன் வெளியேறி, பெற்றோரை ஏமாற்றும் பிழைப்பு, குறுக்கு வழி முன்னேற்றத்துக்காகச் செய்யும் ஒரு ஃபிராடுதனம், அதுவே ஒருநாள், வாழ்வின் மொத்த சுகத்துக்கும் எமனாக வந்து நிற்கும் துயரம் என ஓர் இளைஞனின் வாழ்வியலை, இயல்பாகப் படமாக்கி இருக்கிறார். இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து.

முதல் பாதியில் எழும் பிரச்சினைகள், இரண்டாம் பாதியில் இன்னும் எழுந்து சிக்கலுக்குள் சிக்கிக்கொள்ள, அதைக் கடைசியில் உடைக்கும் விதமான திரைக்கதை கொஞ்சம் டல்லடித்தாலும் நெஞ்சில் பெல் அடிக்கிறது.

ஒரு கேரக்டரை கெட்டவனாகக் காட்ட, சிகரெட், மது உள்ளிட்ட விஷயங்களை விட்டுவிட்டு நம் இயக்குநர்கள் வேறு ஏதாவது யோசித்தால் நன்றாக இருக்கும். ஹீரோ அடிக்கடிப் பிடிக்கும் சிகரெட்டுகளில் நம் நாசிக்குள்ளும் பாய்கிறது நிக்கோடின் நாற்றம்.

முதல்பாதி வழக்கமான டெம்பிளேட் என்றாலும் குட்டி குட்டி சுவாரஸ்யங்களால் அது மறக்கடிக்கப்படுகிறது. எதிர்பார்த்த வேலை, கோடியில் வீடு, ஆடி கார் என வாழ்க்கையில் பறக்கத் தொடங்கும்போது வந்து மறிக்கும் வில்லங்கச் சிக்கலுடன் முடியும் இடைவேளை, 'ஹார்ட் பீட்'டை எகிற வைக்கிறது. ஆனால், அதே கல்லூரியில் குட்டி டிராகன் செய்யும் சேட்டைகள், அடிக்கடி வரும் கெட்டவார்த்தைகள் ரசிக்க வைப்பதற்குப் பதிலாக எரிச்சலையே தருகின்றன.

ஏமாற்றி முன்னேறுபவனுக்கும் உண்மையாய் உழைத்துத் தோற்கிறவனுக்குமான வித்தியாசத்தை உணர வைக்கும் இடத்தில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து நிமிர்ந்து நிற்கிறார். ‘ஒரு தப்பு பண்ணிட்டு ஈசியா கடந்து போயிடறோம், அது நம்மள நிம்மதியா இருக்க விடாம வாழ்க்கை பூரா துரத்திக்கிட்டே இருக்கில்ல’ என்று காதலி பேசுகிற வசனம் ஹீரோவின் வாழ்க்கைக்கும் பொருந்துவது, போலியாக வாங்கிய டிகிரியை உண்மையாக வாங்கக் கல்லூரி பேராசிரியர் தரும் வாய்ப்பு, முன்னாள் காதலியே விரிவுரையாளராக வருவது, அவரே அவனுக்கு உதவுவது என்பது உட்பட பல காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

தனது நடிப்பில் பல்வேறு முகபாவங்களை வெளிக்காட்ட பிரதீப் ரங்கநாதனுக்கு இந்தப் படம் அருமையான வாய்ப்பு, அதைச் சரியாகவே பயன்படுத்தி இருக்கிறார். பிரின்சிபலை முறைத்தபடி கல்லூரியை விட்டு வெளியேறுவது, காதலி யதார்த்தம் உணர்த்திச் செல்லும் போது குமுறுவது, உண்மை அறிந்து வந்து நிற்கும் பிரின்சிபலின் காலில் விழுந்து கதறுவது என நடிப்பில் இன்னொரு உயரம் தொடுகிறார் பிரதீப் ரங்கநாதன்.

காதலியாகவும் முன்னாள் காதலியாகவும் வரும் அனுபமா பரமேஸ்வரன், மற்றொரு நாயகியாக வரும் கயாடு லோஹர் இருவருமே நடிப்பில் அள்ளுகிறார்கள், அதிக லைக்ஸ். இதுவரை பார்த்திராத வேடத்தில் மிஷ்கின் ஆச்சரியப்படுத்துகிறார். ஐடி நிறுவன அதிகாரி, கவுதம் வாசுதேவ்மேனன், கதாநாயகனின் தந்தையாக வரும் ஜார்ஜ் மரியான், தொழிலதிபர் கே.எஸ்.ரவிகுமார் என அனைவரும் சரியான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்.

ஆனால் இரண்டாம் பாதியின் நீளமும் பாடல்களும் படத்தின் வேகத்துக்குத் தடையாக அமைந்துவிடுகின்றன. படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ ராகவ், அதில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு காட்சிகளோடு ஒன்ற வைக்கிறது. லியோன் ஜேம்ஸ் இசையில் சில பாடல்களும் பின்னணி இசையும் ரசிக்க வைக்கின்றன. சில குறைகள் இருந்தாலும் கவர்கிறான் இந்த ‘டிராகன்’.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x