Last Updated : 24 Jan, 2025 02:46 PM

 

Published : 24 Jan 2025 02:46 PM
Last Updated : 24 Jan 2025 02:46 PM

குடும்பஸ்தன் Review: மணிகண்டனின் மற்றொரு ரகளையான ‘சிக்ஸர்’!

தனியார் நிறுவனம் ஒன்றில் கிராபிக்ஸ் டிசைனராக பணிபுரியும் நவீன் (மணிகண்டன்) மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணான வெண்ணிலாவை (சான்வே மேகன்னா) அவசர அவசரமாக இரு குடும்ப எதிர்ப்பையும் மீறி பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார். கர்ப்பமாக இருக்கும் மனைவி, பழைய பூர்வீக வீட்டை புதுப்பிக்க விரும்பும் அப்பா (ஆர்.சுந்தர்ராஜன்), ஏரியா பெண்களுடன் ஆன்மிக சுற்றுலா செல்ல விரும்பும் அம்மா ஆகியோர் அடங்கிய லோயர் மிடில் கிளாஸ் குடும்பத்தை தனது வருமானத்தின் மூலம் காப்பாற்றுகிறார் நவீன். இன்னொரு புறம் எந்நேரமும் தன்னுடைய அந்தஸ்தை வைத்து ஹீரோ குடும்பத்தை குத்திக் காட்டிக் கொண்டே இருக்கும் ஹீரோவின் அக்கா கணவர் (குரு சோமசுந்தரம்).

பெரியளவில் சிக்கல் எதுவுமின்றி நேர்க்கோட்டில் சென்றுகொண்டிருக்கும் ஹீரோவின் வாழ்க்கையில் தனது அலுவலகத்தின் க்ளையன்ட் ஆக வரும் நகைக்கடைக்காரரால் புயல் வீசத் தொடங்குகிறார். அவருடனான ஒரு பிரச்சினையால் ஹீரோ வேலையை விட்டு துரத்தப்படுகிறார். வேலை போன விஷயத்தை வீட்டில் சொல்ல பயந்து ஏராளமான கடன் வாங்குகிறார். வட்டி குட்டி போட்டு பல்கிப் பெருகி கழுத்தை நெறிக்க இறுதியில் அதிலிருந்து எப்படி மீண்டார் என்பதே ‘குடும்பஸ்தன்’ சொல்லும் கதை.

மேலே சொன்ன கதையை படிக்கும்போது ‘துலாபாரம்’ பாணியிலான நெஞ்சைப் பிழியும் சோகக் கதையாக இருக்கலாம் என்று தோன்றக்கூடும். ஆனால் இப்படி ஒரு சீரியசான கதைக்களத்தை எடுத்துக் கொண்டு அதை எந்த அளவுக்கு ஜாலியாக ரசிக்கும்படி சொல்லமுடியுமோ அந்த அளவுக்கு சொல்லி ஜெயித்திருக்கிறார் இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி. யூடியூபில் நகைச்சுவையான, அதே நேரம் சமூக கருத்துகள் கொண்ட வீடியோக்கள் மூலம் பிரபலமான ‘நக்கலைட்ஸ்’ குழுவினரின் முதல் படம். ஆனால் எந்த இடத்திலும் முதல் படம் என்று தெரியாத வகையில் ஒரு முழுமையாக பேக்கஜை கொடுத்து அசத்தியிருக்கிறார்கள்.

படத்தில் ஹீரோ எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நாமோ அல்லது நம்மை சுற்றி இருப்பவர்களோ வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் எதிர்கொண்டிருக்கக் கூடும். படம் முழுக்க அப்படியான பிரச்சினைகளைக் கொண்டே காட்சிகளை நகர்த்தி பார்வையாளர்கள் எளிதில் ‘கனெக்ட்’ செய்து கொள்ளும்படி திரைக்கதை எழுதியிருப்பதே படக்குழுவின் வெற்றி. கோவையில் நடக்கும் கதை என்பதால் வட்டார மொழியில் வரும் நகைச்சுவை வசனங்கள் ஒவ்வொன்றுக்கும் அரங்கமே விழுந்து விழுந்து சிரிக்கிறது. ஒரு சீரியசான காட்சியைக் கூட நெஞ்சை பிழியாமல், சோகத்தை திணிக்காமல் மிகவும் ஜாலியாகவும் அடுத்து என்ன நடக்கும் என்று கணிக்க முடியாத வகையிலும் காட்சிப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது.

மணிகண்டனின் கதை தேர்வுகள் வியக்கவைக்கின்றன. ’குட் நைட்’, ‘லவ்வர்’ இப்போது ‘குடும்பஸ்தன்’ என அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிக் கொண்டிருக்கிறார். முந்தைய படங்களை போலவே இதிலும் ஒற்றை ஆளாக ஸ்கோர் செய்து ரசிக்க வைக்கிறார். காமெடி மட்டுமின்றி வயிற்றில் இருக்கும் குழந்தையிடம் பேசுவது, தேக்கி வைத்த விரக்தி அனைத்தையும் கடைசியாக குடும்பத்தினர் முன்னிலையில் கொட்டி குமுறுவது என எமோஷனல் காட்சிகளிலும் அசத்தியுள்ளார். நாயகியாக புதுமுகம் சான்வே மேகன்னா முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு சிறப்பான நடிப்பு. மணிகண்டனுக்குப் பிறகு படம் முழுக்க அப்ளாஸ் பெறுபவர் குரு சோமசுந்தரம் தான். குடும்பம், ஆபீஸ் என எல்லா இடங்களிலும் தனக்கென ஒரு ‘கோடு’ போட்டு வாழும் காமெடி கலந்து ஸ்ட்ரிக் ஆபீசர் கதாபாத்திரத்தில் நிறைவான நடிப்பை வழங்கியுள்ளார். ஆர்.சுந்தர்ராஜன், அம்மாவாக வரும் கனகம், நிவேதிதா ஆகியோர் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.

படம் முழுக்க குடிகாரர்களாக வரும் ‘நக்கலைட்ஸ்’ பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர் கூட்டணி ரகளை செய்திருக்கிறது. குறிப்பாக க்ளைமாக்ஸில் பாட்டில் மூடியை விழுங்கிவிட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் காட்சிகள் சிரிப்பு சரவெடி.

வைசாக்கின் பின்னணி இசையில் குறையில்லை. படத்துக்கு தேவையானதை வழங்கி இருக்கிறார். பாடல்கள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. சுஜித்தின் ஒளிப்பதிவு நிறைவு.

படத்தின் குறையென்று பார்த்தால் இரண்டாம் பாதியில் ஹீரோவுக்கு ஒரே மாதிரியான பிரச்சினைகள் திரும்ப திரும்ப வருவதும், அதுவரை மோசமானவர்களாக காட்டப்பட்ட கடன்காரர்கள் திடீரென சாதுவானவர்களாக மாறுவதும் ஏற்கும்படி இல்லை. ஹீரோ பேக்கரி வைப்பதும், அதனை தொடர்ந்து வரும் காட்சிகளும் மீண்டும் மீண்டும் ரிப்பீட் ஆவதை போன்ற உணர்வு ஏற்படுகிறது.

மொத்தத்தில் நம் வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளை எந்தவித சீரியஸ்தன்மையும் இன்றி முழுக்க முழுக்க ரகளையான விதத்தில் ஜாலியாக சொல்லப்பட்ட இந்த ‘குடும்பஸ்தனை’ தாராளமாக கவலைகளை மறந்து குடும்பத்தோடு கண்டு ரசிக்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x