Published : 18 Jan 2025 06:54 AM
Last Updated : 18 Jan 2025 06:54 AM
அஜித்தின் ‘விடாமுயற்சி’க்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. பொங்கலுக்கு வெளியாக வேண்டிய படம் பிப். 6-ம் தேதிக்கு தள்ளிப் போயிருக்கிறது. அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் என பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தின் டிரெய்லர், வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், இயக்குநர் மகிழ் திருமேனியிடம் பேசினோம்.
எப்படி கிடைத்தது இந்த வாய்ப்பு?
அஜித் சார் மானேஜர் சுரேஷ் சந்திராவை ரொம்ப வருஷமா தெரியும். எனக்கு அவர் சகோதரர் மாதிரி. ஆனா, அஜித் சார்கிட்டகதை சொல்லணும்னு வாய்ப்புக் கேட்டதில்லை. அவர்கிட்ட கதைசொல்ற அளவுக்கு என் தகுதியை வளர்த்துக்கணும்னு நினைச்சேன். ‘மீகாமன்’ படம் பண்ணும்போது, அஜித் சாரோட படம் பண்ணுற வாய்ப்பு தொடர்பா ஒரு உரையாடல் நடந்துச்சு. பிறகு அது தொடரலை. ரோகாந்த் இயக்கிய ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்துல நடிக்கறதுக்காக, நான் பழனிக்கு போயிருந்தேன். அப்ப சுரேஷ் சந்திரா, ‘அஜித் சாருக்கு கதை வச்சிருக்கீங்களா? இந்த மாதிரி வேணும்’னு ஒரு ஐடியா சொன்னார்.
நான் பேசினேன். பிறகு ‘கலகத்தலைவன்’ படம் முடிஞ்சு 2 வாரம் கழிச்சி சுரேஷ் சந்திரா, அஜித் சார் உங்ககிட்ட பேசுவார்னு சொன்னார். அந்த தருணத்தை என்னால மறக்கவே முடியாது. அஜித் சார் சொன்ன முதல் வார்த்தை, “என்னை கண்மூடித்தனமா நம்புங்க மகிழ்’! சரின்னு சொன்னேன் நான்.
உங்க கதைதானா அது? வழக்கமா பெரிய ஹீரோ படம்னா மாஸ் என்டர்டெயினராகத்தானே இருக்கும்?
இல்லை. இதன் மூலக் கதை என்னுடையது இல்லை. நான் அஜித் சார் நடிப்பில் பண்ண நினைச்சது, ஒரு ஆக் ஷன் த்ரில்லர். இந்தப் படத்தோட கதையை அஜித் சார்தான் சொன்னார். அவரோட இமேஜுக்கும் இந்தப் படத்துல அவர் பண்ணியிருக்கிற கேரக்டருக்கும் தொடர்பே இல்லை. இது ஒரு மாஸ் என்டர்டெயினர் படம் இல்லை. ரசிகர்கள் அதை எதிர்பார்த்து வரவேண்டாம். அஜித் சார் இப்படி படம் பண்ணணும்னு ஆசைப்பட்டார்.
அவருக்கு இப்ப இருக்கிற பிம்பத்துக்கு முற்றிலும் முரண்பாடா இந்தப் படம் இருக்கும். இதுல ஒரு சூப்பர் ஹீரோவை எதிர்பார்த்து வந்தீங்கன்னா, இது அப்படிப்பட்ட படமா இருக்காது. நம்மள்ல ஒருத்தன் ஹீரோவா இருந்தா எப்படியிருக்குமோ அதுதான் படம். நான் ஆக் ஷன் டைரக்டரா அறியப்பட்டிருக்கேன். இப்படியொரு கதைக்களத்தை எங்கிட்ட ஏன் கொடுக்கிறீங்கன்னு அவர்கிட்ட கேட்க நினைச்சிருந்தேன். ஆனா, அந்த வாய்ப்பை எனக்குக் கொடுக்காம, அவரே எனக்குச் சொன்னார், “மகிழ், நீங்களும் சரி, நானும் சரி, நம்மளோட ‘கம்ஃபோர்ட் ஸோன்’ல இருந்து வெளிய வரணும். அப்படியொரு படமா இது இருக்கணும்“னு சொன்னார். அவர் கொடுத்த கதையில அந்த மீட்டருக்குள்ள என்னால என்ன பண்ண முடியுமோ, அதை பண்ணியிருக்கேன். முன் முடிவுகளை கழற்றி வச்சுட்டு இந்தப் படத்தை பார்த்தால், நிச்சயமா சுவாரஸ்யமான படமா இருக்கு.
ஹாலிவுட் பட ரீமேக்குன்னு சொல்றாங்களே?
அதுபற்றி நான் இப்ப சொல்ல முடியாது. ஆனா, இது என் கதை இல்லைன்னு சொல்ல முடியும். இது ஒரு பயணம் தொடர்பான கதை. கணவன் - மனைவியோட பயணம். அதுக்கு இடையில நடக்கிற சம்பவங்கள்தான் படம். இதுக்குள்ள ஆக் ஷன், கார் சேஸிங், சஸ்பென்ஸ், த்ரில்லிங் விஷயங்கள் எல்லாமே இருக்கும். ஆனா, எதார்த்தத்துக்கு நெருக்கமா இருக்கும். அஜித் சார் மனைவியா த்ரிஷா நடிச்சிருக்காங்க.
படப்பிடிப்புக்கு அஜர்பைஜான் ஏன்?
இந்தக் கதைக்கு பெரிய திறந்தவெளி வேணும். நீண்ட தூர, ஆளரவமற்ற சாலைகள் வேணும். அஜித் சார் நடிச்ச கடந்த இரண்டு மூணு படங்களை ஸ்டூடியோவுக்குள்ளதான் எடுத்தாங்க. அதனால பிரம்மாண்டமான ஒரு‘லேண்ட்ஸ்கேப்’பை காட்டுற கதைக்களம் அமையணும்னு ஆசைப்பட்டார் அவர். அதுக்கு பொருத்தமா அவர் தேர்வு செஞ்சதுதான், அஜர்பைஜான். நான் எழுதும்போது அபுதாபியை மனசுல வச்சுதான் எழுதினேன். அங்க எங்களுக்கு சில சிக்கல்கள் இருந்தது. அதனால தயாரிப்பு தரப்புல இருந்து, அஜர்பைஜான் போகலாம்னு சொன்னாங்க. இந்தக் கதைக்கு ரொம்ப பொருத்தமான லொகேஷனா அது இருந்தது.
அஜித்தும் ‘ஆக் ஷன் கிங்’ அர்ஜுனும் ஏற்கெனவே ‘மங்காத்தா’ல மிரட்டியிருப்பாங்க. திரும்பவும் அந்த காம்பினேஷன் எப்படி இருக்கும்?
இரண்டு பேருமே சந்தேகமே இல்லாம சிறந்த நடிகர்கள். அவங்களுக்குள்ள நடக்கிற உரையாடல்கள், மோதிக்கிற தருணங்கள்னு எல்லாமே பார்வையாளர்களை உட்கார வைக்கும். அதுக்கு அவங்களோட நடிப்புதான் காரணமா இருக்கும். இந்தப் படத்துல நல்ல கதை இருக்கு. குடும்பத்தோட ரசிக்கக் கூடிய கதை. பெண்களுக்கு ரொம்ப பிடிக்கும்.
இந்த பட ஷூட்டிங்ல அஜித்துக்கு நடந்த ஆக்ஸிடென்ட் வீடியோ அதிர்ச்சியா இருந்துச்சே?
கண்டிப்பா. எங்களுக்கு மூச்சே நின்னு போச்சு. அன்னைக்கு ஒரு டேக் எடுத்தோம். எனக்கு ஓகேதான். நீரவ் ஷா ஒளிப்பதிவு பண்ணிட்டு இருந்தார். அவர், ‘கன்வின்ஸ்' ஆகலை. இன்னொரு டேக் போனா நல்லாருக்கும்னு சொன்னார். அதுக்கான காரணம் நியாயமா இருந்துச்சு. அதனால அஜித் சார் ஓகே சொன்னார். இன்னொரு டேக் எடுத்தோம். ரொம்ப ஸ்பீடா அஜித் சார் காரை ஓட்டிட்டுப் போறார், ஒரு இடத்துல கார் திரும்புச்சு. அந்த வித்தியாசம் எல்லோருக்குமே தெரிஞ்சுது. ஏன் அப்படின்னு யோசிச்சு முடிக்கிறதுக்குள்ள அந்த கார் உருண்டு, தலைக்குப்புற கிடந்தது. எல்லோரும் எல்லாத்தையும் அப்படியே போட்டுட்டு ஸ்பாட்டுக்கு ஓட ஆரம்பிச்சோம். ஆனா அஜித் சார் கார்ல இருந்து எதுவும் நடக்காத மாதிரி அப்படியே வெளியே வந்தார். அதுக்கு பிறகுதான் எங்களுக்கு நிம்மதி பெருமூச்சே வந்தது. அவருக்கும் ஆரவ்வுக்கும் சின்ன சின்ன சிராய்ப்புகள்தான். பெரிய காயம் ஏதுமில்லை.
அஜித் ரொம்ப உடம்பை குறைச்சிருக்காரே?
படத்தோட கதை தற்போது நடக்கிற மாதிரியும் 12 வருஷத்துக்கு முன்னால நடக்கிற மாதிரியும் இருக்கு. ஒரு காட்சிக்கு வித்தியாசத்தை காட்டணுங்கறதுக்காக, ரொம்ப மெனக்கெட்டு, உடலைக் குறைச்சார். அவர் உடல் இளைக்க, இளைக்க இன்னும் அழகாயிட்டே இருந்தார். ஒரு கட்டத்துல ‘இது போதும் சார், இன்னும் குறைக்க வேண்டாம்’னு சொல்ல நினைச்சோம். அந்த அளவுக்கு அந்த கேரக்டருக்கு ரொம்ப ‘ஃபிட்’டா இருக்கார். படத்துல அந்த காட்சிகள் ரசிகர்களுக்கு ரொம்ப பிடிக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment