Published : 16 Jan 2025 05:16 AM
Last Updated : 16 Jan 2025 05:16 AM

திரை விமர்சனம்: காதலிக்க நேரமில்லை

சென்னையில் வசிக்கும் ஷ்ரேயா (நித்யா மேனன்), ஆண் துணையில்லாமல், செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறார். பெங்களூருவில் வசிக்கும் சித்தார்த் (ரவி மோகன்) நிச்சயதார்த்தம் அன்று விரும்பிய பெண் வராமல் போனதால் திருமணம், குழந்தை என்றாலே வெறுப்புடன் இருக்கிறார். வெவ்வேறு ஊரிலிருந்தாலும் இருவரும் நண்பர்களாகிறார்கள். முரண்பட்ட எண்ணங்களைக் கொண்ட இவர்கள் வாழ்க்கையில் எப்படி இணைகிறார்கள் என்பது கதை.

ஆண் துணையின்றி குழந்தைப் பெற்றுக் கொள்ள விரும்பும் பெண், திருமணம் செய்து கொண்டாலும் குழந்தை தேவையில்லை என்று நினைக்கும் ஆண், அவருக்குப் பால் புதுமையினர் நண்பராக இருப்பது என இன்றைய 'இசட் ஜென்' தலைமுறையினரிடையே துளிர்விடும் கலாச் சாரத்தைக் கதைக் களமாக்கி, இயக்கி இருக்கிறார் கிருத்திகா உதயநிதி. சிக்கலான கதைக் களம் என்றாலும் முடிந்தவரை சுவாரஸியமாகத் தர முயன்றிருக்கிறார். ஆனால், ஆங்காங்கே வெளிப்படும் ஆழமில்லாத காட்சிகளால் படம் தடுமாறுகிறது.

'நான் கன்னித்தன்மையோடுதான் இருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா?’ என்று பெற்றோரிடமே நாயகி, நேரிடையாகக் கேட்கும் கேள்வி அதிர்ச்சிகரமாக இருந்தாலும் கதை அங்கிருந்துதான் தொடங்குகிறது. காதலனால் ஏமாற்றப்படும் நாயகி துணிந்து எடுக்கும் முடிவு, தர்க்க ரீதியாகக் கதையோடு ஒத்துப் போகிறது. ஆனால், அவருக்கு ஏற்படும் ஏமாற்றம் ஊகிக்க முடிகிறது. திருமணப் பந்தம், குழந்தை தேவையில்லை என்று நாயகன் சொல்வதற்கு நியாயமான காரணங்கள் இல்லை. நிச்சயத்துக்கு வராமல் ஏமாற்றும் பெண்ணால் வெறுத்துப் போகும் நாயகன், பிளே பாயாக மாறும் காட்சிகள் ஒட்டவில்லை.

‘ஸ்பெர்ம் டோனர்’ மூலமாகக் குழந்தைப் பெற்றுக் கொள்ளும் பெண், தன் குழந்தைக்குத் தந்தை யாராக இருக்கும் என்று நினைத்துக் குழம்புவதை யதார்த்தமாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். முதல் பாதிக்குப் பிறகு ஸ்பீடு பிரேக் போட்டது போல காட்சிகள் நகர்வது இன்னொரு குறை. என்றாலும் 'சிங்கிள் பேரன்டிங்', 'பால் புதுமையினர் பேரன்டிங்' என துணிந்து காட்சிகள் வைத்திருப்பதைப் பாராட்டாமல் இருக்க முடியாது. படம் நெடுகிலும் மதுவை அத்தியாவசியம் போல வைத்திருக்கும் காட்சிகளைக் குறைத்திருக்கலாம்.

நாயகனாக ரவி மோகன் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்திருக்கிறார். நித்யா மேனனுக்கு நாயகனைவிட‌ அழுத்தமான கதாபாத்திரம். அதைஅழகாகப் பயன்படுத்தி நடித்திருக்கிறார். பால்புதுமையினராக வினய் ராய், துணிந்து நடித்திருக்கிறார். நகைச்சுவைக்கு யோகிபாபு. சிரிக்க வைக்க முடியாமல் தடுமாறுகிறார். லால், லட்சுமிராமகிருஷ்ணன், மனோ, வினோதினி வைத்தியநாதன், அந்தக் குழந்தை நட்சத்திரம் உள்ளிட்டவர்கள் போதுமான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஏற்கெனவே சில பாடல்கள் ஹிட். பின்னணி இசையும் கதையின் ஓட்டத்துக்கு கை கொடுத்திருக்கிறது. கேவ்மிக் யு. ஆரியின் ஒளிப்பதிவும், லாரன்ஸ் கிஷோரின் படத்தொகுப்பும் படத்துக்குப் பக்கப்பலம். தமிழுக்கு இதுபோன்ற கதைக்களம் புதிது. இன்னும் சுவாரஸியமாகப் படமாக்கியிருந்தால் 'காதலிக்க நேரமில்லை'யை ரசித்திருக்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x