Published : 27 Dec 2024 05:48 PM
Last Updated : 27 Dec 2024 05:48 PM
‘கேம் சேஞ்சர்’ பாடல்களுக்கு மட்டுமே பல கோடிகளை ஷங்கர் செலவழித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், எஸ்.ஜே.சூர்யா, கைரா அத்வானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கேம் சேஞ்சர்’. உலகமெங்கும் ஜனவரி 10-ம் தேதி வெளியாகவுள்ளது. இதனை பல்வேறு வழிகளில் விளம்பரப்படுத்தும் பணிகளை படக்குழு தொடங்கியிருக்கிறது. சமீபத்தில் அமெரிக்காவில் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்துக் கொண்ட விழா ஒன்று நடைபெற்றது.
இதனிடையே, ‘கேம் சேஞ்சர்’ படத்தின் பாடல்களுக்கு மட்டுமே பல கோடிகளை படக்குழு செலவழித்திருப்பதாக தெரிகிறது. இணையத்தில் 5 பாடல்களுக்கு மட்டும் 90 கோடி வரை ஷங்கர் செலவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இப்படத்தில் இடம்பெற்றுள்ள காதல் பாடலுக்கு புதிய கேமரா தொழில்நுட்பம் ஒன்றை படக்குழு பயன்படுத்தி இருக்கிறது. இது குறித்து இயக்குநர் ஷங்கர், “இதுவரை ஆயிரக்கணக்கான காதல் பாடல்கள் வந்துவிட்டது. காதலில் இருப்பவர்களுக்கு உலகமே கனவு உலகமாக இருக்கும்.
ஆகையால், ஏன் நாம் அப்பாடலை INFRA RED கேமராவில் படமாக்க கூடாது என எண்ணினேன். இதுவரை யாரும் INFRA RED கேமராவில் படப்பிடிப்பு நடத்தியதில்லை. அந்த கேமராவில் உள்ள ஸ்பெஷல் என்னவென்றால், கலர்கள் அனைத்தையும் வித்தியாசப்படுத்தி காட்டும். அதில் ஒரு மேஜிக் இருக்கும் என்பதால் ஒளிப்பதிவாளர் திருவிடம் கூறினேன்.
இப்படம் தொடங்கும் முன்பே இந்த முடிவினை எடுத்துவிட்டோம். அப்பாடலை படமாக்கிய போது, தளத்தில் உள்ள கலர்களும் படமாக்கப்பட்ட கலர்களும் வித்தியாசமாக இருந்தது. அது மக்களை கவரும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT