Published : 25 Dec 2024 11:26 PM
Last Updated : 25 Dec 2024 11:26 PM
கோழிக்கோடு: மலையாள எழுத்தாளரும், சினிமா இயக்குநருமான எம்.டி.வாசுதேவன் நாயர் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 91.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கடும் நெஞ்சு வலி காரணமாக கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாசுதேவன் நாயருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது, எனினும் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்துவந்த நிலையில், புதன்கிழமை (டிச.25) வாசுதேவன் நாயர் சிகிச்சை பலனின்றி காலமானார்.
வியாழக்கிழமை மாலை அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். வாசுதேவன் நாயர் முன்பே தெரிவித்து விட்டதால் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டதுள்ளது.
எம்.டி.வாசுதேவன் நாயர் மலையாளத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர். அவரது பல்வேறு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு அண்மையில் ‘மனோரதங்கள்’ என்ற பெயரில் ஆந்தாலஜியாக வெளியானது. மலையாள இலக்கியம் மற்றும் திரையுலகில் அழியாத முத்திரை பதித்த எம்.டி.வாசுதேவன் நாயர் பத்ம பூஷண் விருது பெற்றவர். இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீடம் விருது கடந்த 1996-ம் ஆண்டு அவருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் சிறந்த திரைக்கதைக்காக 4 தேசிய விருதுகளை வென்றுள்ளார்.
மொத்தம் 54 படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ள அவர் 7 படங்களை இயக்கியுள்ளார். பல்வேறு விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளனர். வாசுதேவன் நாயரின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT