Published : 22 Dec 2024 08:57 AM
Last Updated : 22 Dec 2024 08:57 AM
தியேட்டர்களுக்கு படம் பார்க்கச் சென்றால், படம் பிடிக்கவில்லை என்றால் கூட முழுப் படத்தையும் பார்த்துவிட்டு வருகிறோம். இனி அப்படி அவஸ்தைப்பட வேண்டாம். எவ்வளவு நேரம் பார்க்கிறோமோ, அதற்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும். அதாவது ஒரு படத்திலிருந்து பாதியில் வெளியேறினால் 50 சதவிகித டிக்கெட் கட்டணமும் 25 முதல் 50 சதவிகித படம் மீதி இருந்தால் 30 சதவிகித கட்டணமும் 50 சதவிகிதத்துக்கு மேல் படம் இருந்தால், 60 சதவிகிதத் தொகையும் திருப்பி தரப்படும்.
சில காரணங்களால், படத்தின் ஆரம்பத்தில் 30 நிமிடக் காட்சிகளைத் தவற விட்டால் அதற்கான கட்டணம் செலுத்த வேண்டாம். குறிப்பிட்ட 30 நிமிடம் மட்டுமே பார்க்க வேண்டும் என்று நினைத்தால், அதற்கான கட்டணம் செலுத்தினால் போதும். இப்படி யொரு திட்டத்தை பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் ‘ஃபிளக்ஸி ஷோ’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது.
டெல்லி என்சிஆர் மற்றும் குருகிராமில் உள்ள சில தியேட்டர்களில் மட்டும் பரிசோதனை முயற்சியாக இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது வெற்றி பெற்றால் மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
இதுபற்றி இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரெனாட் பாலியர் ஆங்கில ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “தியேட்டரில் எந்த இருக்கையில் யார் இருக்கிறார்கள் என்பதை அறிய ஏஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் வீடியோவை பயன்படுத்த இருக்கிறோம். புக் செய்யும் டிக்கெட், அவர்களின் இருக்கையுடன் இணைக்கப்படும். இதன் மூலம் யார் உள்ளே இருக்கிறார்? ஒருவர் எப்போது வருகிறார், எப்போது செல்கிறார் என்று கண்காணித்து அதற்கேற்ப டிக்கெட் கட்டணம் கணக்கிடப்படும். இதற்காக வழக்கமான கட்டணத்தை விட கூடுதலாக 10 சதவிகிதம் கொடுத்து டிக்கெட் ரிசர்வ் செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT