Published : 21 Dec 2024 02:40 PM
Last Updated : 21 Dec 2024 02:40 PM

விவாகரத்து வழக்கு: சமரச தீர்வு மையத்தில் ஜெயம் ரவி - ஆர்த்தி பேச்சுவார்த்தை

கோப்புப்படம்

சென்னை: விவாகரத்து கோரிய வழக்கில், குடும்ப நல நீதிமன்ற உத்தரவின்படி, நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி, சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சினிமா எடிட்டர் மோகனின் இளைய மகன் நடிகர் ரவி. இவர் ‘ஜெயம்’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானதால் ‘ஜெயம் ரவி’ என்ற புனைப்பெயருடன் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். இவரது மூத்த சகோதரர் ராஜா திரைப்பட இயக்குநராக உள்ளார். நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009-ம் ஆண்டு சுஜாதா விஜயகுமார் என்ற திரைப்பட தயாரிப்பாளரின் மகளான ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், தனது மனைவியுடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக நடிகர் ஜெயம் ரவி அறிவித்தார். இந்நிலையில், மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், “எனது மனைவியிடம் இருந்து எனக்கு விவாகரத்து வழங்க வேண்டும். 2009-ம் ஆண்டு நடைபெற்ற எங்களது திருமணம் செல்லாது என அறிவித்து அந்த பதிவை ரத்து செய்ய வேண்டும்.” எனக் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்றம், சமரச தீர்வு மையத்தில் பேச்சு வார்த்தை நடத்த உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு குடும்ப நல நீதிமன்றம் நீதிபதி தேன்மொழி முன் சனிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி நேரில் ஆஜராகினர். அப்போது, மத்தியஸ்தர் நேரில் ஆஜராகி, “இன்னும் சமரச பேச்சு வார்த்தை முடியவில்லை” என தெரிவித்தார். இதையடுத்து, சமரச தீர்வு மையத்தில் மனம் விட்டு பேசும்படி ஜெயம்ரவி மற்றும் ஆர்த்திக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜனவரி 18-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். இந்த உத்தரவை அடுத்து, வழக்கு மீண்டும் சமரச தீர்வு மையத்துக்கு வந்தபோது, ஜெயம்ரவி மற்றும் ஆர்த்தி நேரில் ஆஜராகி சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேச்சு வார்த்தை நடத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x