Published : 18 Dec 2024 04:50 PM
Last Updated : 18 Dec 2024 04:50 PM
தெலங்கானா: அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ படத்தின் ப்ரீமியர் திரையிடலின்போது, கூட்ட நெரிசலில் சிக்கிய சிறுவன் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஹைதராபாத் காவல்துறை ஆணையர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், “கூட்ட நெரிசலில் சிக்கிய சிறுவனின் மூளைக்கு தேவையான ஆக்சிஜன் செல்லாததால், அவரது மூளை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு சரியாக நீண்ட நாட்கள் எடுக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுவன் தற்போது வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து அவர் சிகிச்சையில் இருப்பார்” என தெரிவித்துள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட திரையரங்கின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என கூறி, திரையரங்குக்கு ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பின்னணி: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம் கடந்த டிசம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அதற்கு முந்தைய நாள் இரவு ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் நடந்த சிறப்புக் காட்சியைப் பார்க்கச் சென்ற ரேவதி (39) என்ற ரசிகை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவருடைய மகன் தேஜ் படுகாயம் அடைந்தார்.
நடிகர் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வந்ததால்தான் நெரிசல் ஏற்பட்டது என்பதால், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. உயிரிழந்த ரேவதி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்குவதாக அல்லு அர்ஜுன் அறிவித்தார். இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அல்லு அர்ஜுன் 24 மணி நேரத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT