Published : 18 Dec 2024 09:02 AM
Last Updated : 18 Dec 2024 09:02 AM
பிரபல இந்தி நடிகை ஷர்மிளா தாகூர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘குல்மொஹர்’ என்ற இந்திப் படத்தில் நடித்திருந்தார். அடுத்து பெங்காலி படம் ஒன்றில் நடித்து வருகிறார். இன்றைய காலகட்டத்தில் நடிகர், நடிகைகள் அதிகமாகச் சம்பளம் வாங்குகிறார்கள் என்றும் படப்பிடிப்பில் அவர்களுக்கான பிற செலவுகள் குறித்தும் கவலை தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், “அதிக சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள் தங்களுடன் சமையல்காரர்கள், மசாஜ் செய்பவர்கள் என முழு பரிவாரங்களுடன் படப்பிடிப்புகளுக்கு வருவது கவலையளிக்கிறது. சமீபத்தில் விளம்பர படம் ஒன்றுக்காக எனக்கு ஒப்பனை செய்தவர், ‘நடிகர், நடிகைகள், தங்களுக்கான ‘வேனிட்டி வேனி’ன் அளவுக்காக சண்டையிடுகிறார்கள்’ என்று சொன்ன தகவல் ஆச்சரியப்படுத்தியது.
‘வேனிட்டி வேன்’கள் உடை மாற்றுவதற்கு வசதியான இடம். இப்போது அதில் சந்திப்பு அறையும் ஓய்வு அறையும் வந்துவிட்டன. இவை அனைத்தும் நடிகர்களை, நிஜத்தில் இருந்து விலக்கிவிடுகின்றன. பணம் சம்பாதிப்பது முக்கியம்தான். ஆனால் யதார்த்தத்தில் இருந்து விலகிச் சென்றால், பார்வையாளர்களையும் அவர்களின் கருத்துகளையும் எப்படி அறிந்துகொள்ள முடியும்?
‘ஆராதனா’ படத்துக்காக நான் விருது வாங்கியபோது, நடிகைகள் நர்கிஸ், வஹீதா ரஹ்மான் பார்வையாளர்களாக இருந்தனர். பாடகர் கிஷோர் குமார் மேடையில் பாடினார். அது சகோதரத்துவத்தின் கொண்டாட்டமாக இருந்தது. ஆனால் இப்போது, பல விருது நிகழ்ச்சிகளில் சிலர் தாமதமாக வருகிறார்கள்.
முதல் வரிசையில் புதிய வரிசை சேர்க்கப்பட்டு, ஏ-லிஸ்ட் நடிகர்களை அதில் அமர வைக்கிறார்கள். குறிப்பாக யாரும் யாருடனும் பேசுவதில்லை” என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT