Published : 15 Dec 2024 10:17 AM
Last Updated : 15 Dec 2024 10:17 AM

திரை விமர்சனம்: மிஸ் யூ

சினிமாவில் இயக்குநர் ஆவதற்கான முயற்சியில் இருக்கும் வாசுவை (சித்தார்த்), அரசியல்வாதி சிங்கராயரின் (சரத் லோகித்சவா) ஆட்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் வெளியூர் செல்ல நினைக்கும் அவருக்கு வழியில் அறிமுகமாகிறார், பெங்களூரில் காபி ஷாப் வைத்திருக்கும் பாபி (கருணாகரன்), அவருடன் பெங்களூரு செல்கிறார்.

அங்கே நாயகி சுப்புலட்சுமியை (ஆஷிகா ரங்கநாத்) கண்டதும் காதல் வருகிறது வாசுவுக்கு. திருமணம் செய்துகொள்ளலாமா? என்று கேட்க, மறுக்கிறார் அவர். ஒருவேளை பெற்றோர் பேசினால் சரியாக இருக்கும் என நினைத்து, வீட்டில் பெண்ணின் புகைப்படத்தைக் காட்டுகிறார் வாசு, அதிர்ச்சி அடையும் அவர்கள் அந்த பெண், வேண்டவே வேண்டாம் என்கிறார்கள். அதற்கு என்ன காரணம்? அரசியல்வாதியின் ஆட்கள் ஏன் வாசுவைத் தேடுகிறார்கள் என்பது மீதி கதை.

வழிய வழிய காதல், உதவும் நண்பர்கள், கல்யாணம், அது தொடர்பான கலாட்டா என்கிற வழக்கமான ‘ரொமான்டிக் டிராமா’ படங்களிலிருந்து கொஞ்சம் வித்தியாசத்தைத் தருகிறது, ‘மிஸ் யூ’. அதற்கேற்ப சஸ்பென்ஸ், திருப்பங்கள் என ஆச்சரியங்களுடன் செல்கிறது அறிமுகக் காட்சிகள். படத்தில் வாசு குறிப்பிடும் அந்த ‘பெல்லா காஃபி’யின் சுவை போல, இயக்குநர் என்.ராஜசேகரின் திரைக்கதை, சில இடங்களில் சுவாரஸ்யமாகவும் எதிர்பார்ப்போடும் நகர்கிறது.

வாசுவுக்கும் சுப்புலட்சுமிக்குமான சிக்கல்கள், அதன் வழி அவர்கள் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என இவர்கள் கதாபாத்திரங்கள் எழுதப்பட்ட விதம் சிறப்பாக இருக்கின்றன. குறிப்பாக, ‘லேடீஸ் சீட் கிடைக்கலை’ என்று ஒவ்வொருவருக்கும் சுப்பு லட்சுமி போனில் சொல்லும் காட்சி, ரசிக்கும் படியாக இருக்கிறது. இருவருக்குமான கெமிஸ்ட்ரியும் சிறப்பு. ‘போட்டோவுக்குள் போட்டோ’ என ‘பிளாஷ்பேக்குக்குள் பிளாஷ் பேக்’ உட்பட இன்னும் சில ரசனைக் காட்சி கள் இருந்தாலும் அதன் வழி பார்வையாளர்களுக்குக் கிடைக்கக் கூடிய எமோஷன் மிஸ் ஆவதால், ‘அப்புறம் என்ன?’ என்கிற மனநிலை வந்துவிடுவது படத்தின் மைனஸ்.

கதையை நகர்த்த ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் ‘ஃபில்லர்’களையும் புதிதாக யோசித்திருக்கலாம். வேகமாகச் செல்லும் முதல்பாதியின் ஆர்வத்தை இரண்டாம் பாதி திரைக்கதை தடுத்துவிடுகிறது.

வருங்கால இயக்குநராகவும் ‘தப்பை தட்டிக் கேட்கணும்’ என்கிற கொள்கையுடனும் இருக்கும் சித்தார்த், சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவரது தோற்றமும் கதாபாத்திரத்துக்கு வலு சேர்க்கிறது. ஆஷிகா ரங்கநாத், காதலியாகவும் மனைவியாகவும் தன் இயல்பிலிருந்து பின் வாங்காதவராகவும் அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நண்பர்களாக வரும் மாறன், பாலசரவணன், கருணாகரன், சஸ்டிகா ஆகியோர் சில இடங்களில் புன்னகைக்க வைக்கிறார்கள். ஆடுகளம் நரேன், ஜெயப்பிரகாஷ், அனுபமா, சரத் லோகித்சவா கொடுத்ததை செய்திருக்கிறார்கள்.

அசோக்கின் வசனங்கள் பல இடங்களில் கவனிக்க வைக்கின்றன. ஜிப்ரானின் இசையில் சில பாடல்கள் ரசிக்க வைத்தாலும் பின்னணி இசை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அடுக்கடுக்காக நிற்கிற அபார்ட்மென்ட்களும் பாடல் காட்சிகளும் கே.ஜி. வெங்கடேஷின் ஒளிப்பதிவில் கவித்துவ மாகக் காட்சி அளிக்கின்றன. தினேஷ் பொன்ராஜின் படத் தொகுப்பு, முன் பின்னாக நகரும் கதைக்கு உதவியிருந்தாலும் இன்னும் கூர்மைப்படுத்தி இருந்தால், மிஸ் பண்ணக் கூடாத படமாக இருந்திருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x