Published : 07 Dec 2024 06:12 AM
Last Updated : 07 Dec 2024 06:12 AM

திரை விமர்சனம்: ஃபேமிலி படம்

அப்பா தவகுமார் (சந்தோஷ்), அம்மா விஜி (ஸ்ரீஜா ரவி), அண்ணன்கள் சரத்குமார் (விவேக் பிரசன்னா), பார்த்தி (பார்த்திபன் குமார்), தாத்தா ஏழுமலை (மோகனசுந்தரம்) ஆகியோருடன் வசித்து வரும் தமிழ் (உதய் கார்த்திக்), திரைப்பட இயக்குநராகும் ஆசையில் இருக்கிறார்.

அதற்கான முயற்சிகள் தொடர்ந்து தோல்வியில் முடிய, ஒருவர் தயாரிக்க முன் வருகிறார். ஹீரோவாக நடிக்கத் தயாரிப்பாளரின் தம்பி கால்ஷீட் கிடைக்கிறது. அதற்கான ஒப்பந்தந்தில் கையெழுத்திடுகிறார், தமிழ். ஆனால் ஹீரோவுக்கு, கதைப் பிடித்திருக்கிறது, இயக்குநரைப் பிடிக்கவில்லை. அதனால் கதையை கொடுத்துவிடச் சொல்கிறார் தயாரிப்பாளர். இதையடுத்து தம்பியின் ஆசைக்காகக் குடும்பமே சேர்ந்து படம் தயாரிக்கக் களத்தில் இறங்குகிறது. அவர்கள் முயற்சி வெற்றி பெற்றதா, இல்லையா என்பதைக் கலகலப்பாகவும் கொஞ்சம் நெகிழ்ச்சியாகவும் சொல்கிறது மீதிக் கதை.

சினிமாவில் உதவி இயக்குநர்கள் பற்றிய கதைகளை ஏற்கெனவே பார்த்திருந்தாலும் தம்பியின் சினிமா கனவை நனவாக்க ஒரு குடும்பமே முயலும் கதை புதிதுதான். அதற்காக ஏற்கெனவே பார்த்து சலித்த காட்சிகள் எதுவும் இல்லாமல் சுவாரஸ்யமான கதை சொல்லலில் கவர்கிறது, இயக்குநர் செல்வகுமார் திருமாறனின் ‘ஃபேமிலி படம்’.

முதலில் எழுந்திருப்பவர்கள் தான், வீட்டில் அனைவருக்கும் டீ போட வண்டும் என்கிற குடும்ப ‘ரூல்’, அண்ணன் தம்பிகளுக்கு இடையே நிலவும் சின்னச் சின்னச் சண்டைகள், தம்பியின் லட்சியத்துக்காக ஒன்று சேரும் பாசம், மற்றவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டு கொடுக்கும் மரியாதை, இன்ஸ்டா நட்பில் தொடங்கும் யதார்த்தமான காதல் என இப்படியொரு குடும்பம் நமக்கும் கிடைக்காதா? என ஏங்க வைத்து விடுகிறார், இயக்குநர்.

இதுவே சில இடங்களில் ஓவர் டோஸாகி கொஞ்சம் ஏமாற்றத்தையும் அளிக்கிறது. ஆனாலும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் சரியாக இணைத்துப் பின்னப்பட்ட திரைக்கதை, எந்த இடத்திலும் போராடிக்காமல் பார்த்துக்கொள்வது படத்தின் சிறப்பு.

காதல் காட்சிகளைக் கூட திணிப்பாக இல்லாமல் கதையை நகர்த்த பயன்படுத்தி இருப்பது அழகு. இரண்டாம் பாதியில் பல இடங்களில் இயல்பாக எழும் சிரிப்பலை, படத்தின் பலம். குறிப்பாக அந்த போலீஸ் ஸ்டேஷன் காட்சி, ரணகளம்.

ஒர் உதவி இயக்குநரின் வலியையும் ஏமாற்றத்தையும் சரியாக வெளிப்படுத்துகிறார், உதய் கார்த்திக். மூத்த அண்ணன் என்ற அளவில் தம்பிக்கு நம்பிக்கை அளிக்கிற விவேக் பிரசன்னாவும் இன்னொரு சகோதரனாக வரும் பார்த்திபன் குமாரும் நடிப்பில் கவர்கிறார்கள். மூவருக்குமான கெமிஸ்ட்ரியும் அருமையாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. காதலி யமுனாவாக சுபிக்‌ஷா, அம்மாவாக வரும் ஸ்ரீஜா ரவியின் நடிப்பில் அத்தனை இயல்பு. தன் பங்குக்குத் தாத்தா மோகனசுந்தரமும் அவ்வப்போது இந்த கூட்டுக் குடும்பப் பேரன்பை ரசிக்க வைக்கிறார்.

மெய்யேந்திரனின் ஒளிப்பதிவும் அனிவீயின் பின்னணி இசையும் கதையை அழகாக நகர்த்த உதவியிருக்கின்றன. சுதர்சனின் படத்தொகுப்பு ‘ஷார்ப்’பாக இருக்கிறது.

மகனின் சினிமாவுக்காக அப்பா, தான் நடத்தி வந்த ஜிம்மையும் நிலத்தையும் விற்பது, காதலி தனது நகைகளைத் தருவது என சில காட்சிகள் ‘டிராமா’வாக இருந்தாலும் ரத்தம், வெட்டுக்குத்து வன்முறை என ஏதுமின்றி சுகமான சினிமா அனுபவத்தைத் தரும் இந்த ‘ஃபேமிலி பட’த்தை ஃபேமிலியோடு வரவேற்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x