Published : 06 Dec 2024 06:19 PM
Last Updated : 06 Dec 2024 06:19 PM
புதுச்சேரி: ஆவணப்படங்கள், குறும்படங்கள் திரையிடுவது கடினமாகியுள்ளது என்று இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தன் தெரிவித்தார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் மின்னணு ஊடகம் மற்றும் வெகுஜன தொடர்பியல் துறை, இந்திய தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம், தமிழக முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் புதுச்சேரி திரைப்பட இயக்கம் இணைந்து புதுச்சேரியில் மூன்று நாட்கள் நடக்கும் 12-வது சர்வதேச ஆவணப்பட குறும்படத் திருவிழா வெள்ளிக்கிழமை (டிச.6) துவங்கியது.
தொடக்க நிகழ்வில் இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தன் பேசுகையில், “ஆவணப்படங்கள், குறும்படங்கள் அரசை விமர்சிப்பதால் தற்போது திரையிடல் எளிதாக இல்லை. கடந்த பத்து ஆண்டுகளை விட திரையிடல் கடினமாகியுள்ளது. முன்பு திரைப்பட விழாக்களில் திரையிட சென்சார் தேவையில்லை. ஆனால், இந்திய படங்களுக்கு தற்போது சென்சார் தேவை. அதே நேரத்தில் வெளிநாட்டு படங்களுக்கு தேவையில்லை. ஆவணப்படம், குறும்படம் எடுப்பது கடினம். அதை விட திரையிடுவது மிக கடினம்” என்று குறிப்பிட்டார்.
அமைச்சர் லட்சுமி நாராயணன் பேசுகையில், “திரைப்படங்களுக்கான விமர்சனங்கள் தற்போது அதிகரித்துள்ளன. படம் எடுப்போரின் எண்ணங்களுக்கு இணையாக ரசிகர்களும் உள்ளன. உண்மையில் ஆவணப்படங்கள், குறும்படங்கள் நம் மனதை பண்படுத்துகின்றனர். நல்லப்படங்களை தேர்வு செய்து விருதளித்து புதுச்சேரி அரசு கவுரவித்து வருகிறது. தற்போது கமர்சியல் படங்கள் அதிகளவில் வன்முறையைதான் காட்டுகின்றனர். யதார்த்ததுக்கு தொடர்பில்லாமல்தான் அத்திரைப்படங்கள்வுள்ளன” என்றார்.
இந்நிகழ்வில் பல்கலைக்கழக துணைவேந்தர் தரணிகரசு, எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, விழா ஒருங்கிணைப்பாளர் ரவிசந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனந்த் பட்வர்த்தனின் ‘த வேர்ல்ட் இஸ் பேமிலி’ திரைப்படம் மதியம் திரையிடப்பட்டு கலந்துரையாடலும் நடந்தது. பல நாடுகளைச் சேர்ந்த 35 குறும்படங்கள், ஆவணப்படங்கள் 3 நாட்களில் திரையிடப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT