Published : 05 Dec 2024 06:51 AM
Last Updated : 05 Dec 2024 06:51 AM
தமிழ், தெலுங்கில் முதல் பேசும் படமான ‘காளிதாஸை’ இயக்கிய ஹனுமப்பா முனியப்பா ரெட்டி என்ற ஹெச்.எம்.ரெட்டி, நடிகை கண்ணாம்பா மற்றும் பி.என்.ரெட்டியுடன் இணைந்து ரோகிணி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வந்தார். இந்த நிறுவனம் மூலம் தயாரித்த படங்களில் பல புதுமுகங்களை அறிமுகம் செய்திருக்கிறார். ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த காந்தாராவை, ‘வஞ்சம்’ படம் மூலம் ஹீரோவாக்கியவரும் அவரே! வஞ்சம் படத்தை தெலுங்கில் 'பிரதிக்னா' (Pratigna) என்ற பெயரில் உருவாக்கினார்கள்.
அந்தக் கால படங்களில் எம்.ஜி.ஆரைப் போலவே வாள் சண்டைக் காட்சிகளில் கலக்கியவர் காந்தா ராவ். அவர், தமிழில் ‘மாய மோதிரம்’ உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார். விட்டலாச்சாரியாவின் பெரும்பாலான படங்களில் இவரை பார்த்திருக்க முடியும்.
இவர் ஹீரோவாக அறிமுகமான 'வஞ்சம்’ படத்தை ஒய்.ஆர்.சுவாமி இயக்கினார். அவருக்கும் இயக்குநராக இதுதான் அறிமுகப் படம். ஹெச்.எம்.ரெட்டியின் நெருங்கிய உறவினரான இவர், தென்னிந்திய மொழிகளில் 35 படங்களை இயக்கியுள்ளார். ராஜ்குமார் நடிப்பில் மட்டும் 17 கன்னடப் படங்களை இயக்கி இருக்கிறார்.
'வஞ்சம்' படத்தில் சாவித்திரி, ராஜனாலா, கும்மாடி வெங்கடேஸ்வர ராவ், சுதர்சனம், மாஸ்டர் மது, சாவித்திரி, கிரிஜா, டி.வி.ரமண ரெட்டி, சாரங்கபாணி, ஜெயலட்சுமி உட்பட பலர் நடித்தனர். சாவித்திரி கிராமத்துப் பெண்ணாக நடித்தார்.
இதில் நடித்த ராஜனாலா, நெல்லூரில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றிக் கொண்டிருந்தவர். நடிப்பு ஆசையால் சென்னை வந்த அவருக்கு இதுதான் முதல் படம். பின்னர் காந்தாராவும் ராஜனாலாவும் பல தெலுங்கு படங்களில் ஹீரோ- வில்லனாக நடித்தனர்.
டி.ஏ.கல்யாணம் இசை அமைத்த இதன் பாடல்களைக் கவிஞர் குகன் எழுதினார். ஏ.பி. கோமளா பாடிய 'வரப்போறார்...’, டி.எஸ்.பகவதி பாடிய 'ஆனந்தமேன் இவ்வானந்தம்...’, ஏ.எம்.ராஜா பாடிய 'துள்ளியே ஒடுமே வாழ்வுமே', ரோகிணி பாடிய 'மனமே நீ கலங்கிடாதே', 'ஓ தளுக்கு மாமா' உட்பட பாடல்கள் அனைத்தும் வரவேற்பைப் பெற்றன.
1953-ம் ஆண்டு நவ.27-ல் தெலுங்கில் வெளியான இந்தப் படம் தமிழில் (டிச. 5) இதே தேதியில் ரிலீஸ் ஆனது. பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் ஆந்திராவில் சில திரையரங்குகளில் நூறு நாள் ஓடியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT