Published : 23 Nov 2024 05:23 PM
Last Updated : 23 Nov 2024 05:23 PM
கோவா: “ஒவ்வொரு முறையும் முதல் படத்தை இயக்குவது போன்ற உணர்வுடன்தான் படப்பிடிப்புக்குச் செல்கிறேன்” என இயக்குநர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.
இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு நாளும் நடிகர்கள், இயக்குநர்களின் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெறும். அந்த வகையில் இன்று இயக்குநர்கள் மணிரத்னம் - கவுதம் வாசுதேவ் மேனன் இடையிலான உரையாடல் நிகழ்வு நடைபெற்றது. இதில் கவுதம் மேனன் கேள்விகளுக்கு மணிரத்னம் பதிலளித்தார். அப்போது சினிமாவை குறித்த தனது பார்வையை பகிர்ந்துகொண்ட மணிரத்னம், “நான் முதல் படத்தை இயக்கும்போது, எல்லாவற்றையும் கற்றுக் கொண்டு மாஸ்டர் ஆக வேண்டும் என நினைத்தேன்.
ஆனால், ஒவ்வொரு முறையும், படத்தை எப்படி எடுக்கப் போகிறோம் என்பதை பற்றி தெரியாமல் ஏதோ ஒரு தேடலுடன் முதல் படம் போன்ற உணர்வுடன் படப்பிடிப்புக்கு செல்கிறேன். உங்களுக்குள் இருக்கும் ஒன்றை பகிர்வது தான் சினிமா என்று நினைக்கிறேன்” என்றார். ‘பொன்னியின் செல்வன்’ படம் குறித்து பேசிய அவர், “க்ளாசிக் என சொல்லப்படும் அனைத்தையும் திரைப்படமாக்க வேண்டும்.
இந்தப் படத்தை எப்படி எடுக்கப் போகிறோம் என்பதை பற்றிய பயம் எனக்குள் இருந்தது. இந்த கதையை லட்சக்கணக்கான மக்கள் வாசித்துள்ளனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் கதாபாத்திரங்கள் குறித்த தனித்தனி பிம்பங்கள் உண்டு. எனக்கு அந்த கதையை திரைப்படமாக்குவது மட்டும் சவாலாக இல்லை; மாறாக பார்வையாளர்களின் கற்பனையை திருப்தி படுத்த வேண்டும் என்ற சவாலும் இருந்தது. அந்த வகையில் நானும் ஒரு வாசகன் என்பதால், எனக்கு தோன்றியதை திரையில் வெளிக்கொண்டு வந்தேன்” என்றார்.
“இலக்கிய படைப்பு ஒன்றை எங்கேஜிங்கான திரைப்படமாக எப்படி மாற்றுவது” என்ற கவுதம் மேனின் கேள்விக்கு, “மிகப் பெரிய காவியத்தை திரைக்கு கொண்டு வருவது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது. எனவே இதில் நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. நீங்கள் ஒன்றை தேர்ந்தெடுக்கும்போதே அது எங்கேஜிங்காக இருக்கும் என்பதை உங்களால் உணர முடியும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் படைப்புக்கு நீங்கள் எடுப்பது தான் இறுதி முடிவு” என்றார்.
தொடர்ந்து, “பொன்னியின் செல்வன் காவியத்தை படைத்த எழுத்தாளர் கல்கி, அதனை முழுக்க முழுக்க பார்வையாளர்களின் கற்பனைக்கே விட்டுவிட்டார். உதாரணமாக நந்தினி கதாபாத்திரம் கொலையாளியா இல்லையா என பதிலளிக்கப்படாத நிறைய கேள்விகள் அதில் இருக்கும். ஆனால் இதை திரைப்படமாக்கும்போது நீங்கள் தான் அந்த கற்பனைக்கு உருவம் கொடுக்க வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT