Published : 23 Nov 2024 07:08 AM
Last Updated : 23 Nov 2024 07:08 AM
கோவாவில் 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, கடந்த 20-ம் தேதி தொடங்கியுள்ளது. வரும் 28-ம் தேதி வரை நடக்கும் இந்த விழாவின் ஒரு பகுதியாக, சினிமாவில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. பாலிவுட் இயக்குநர் இம்தியாஸ் அலி, நடிகைகள் பூமி பட்னேகர், சுகாசினி மணிரத்னம், வாணி திரிபாதி ஆகியோருடன் குஷ்புவும் கலந்து கொண்டார். திரைத்துறையில் பெண்கள் சந்திக்கும் சவால்கள் குறித்து குஷ்புவிடம் கேட்கப்பட்டது.
அவர் கூறும்போது, “திரைத்துறை மட்டுமல்ல, அனைத்து இடங்களிலும் பெண்கள் சவாலைச் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், யாரோ ஒருவர் தங்களைத் தவறாக நடத்துவதாக உணரும்போது, அதைப் பற்றி வெளிப்படையாக அவர்கள் பேச முன்வர வேண்டும். நான் சினிமாவில் அறிமுகமான கால கட்டத்தில், படப்பிடிப்பின்போது ஒரு ஹீரோ என்னிடம் தவறான நோக்கத்துடன் ‘யாருக்கும் தெரியாமல் எனக்கொரு வாய்ப்பு தருவீர்களா?’ என்று கேட்டார்.
நான் என் செருப்பை உயர்த்தி, ‘இங்கு வைத்து அறையவா? பட யூனிட் முன்பு அறையட்டுமா?’ என்று கேட்டேன். பிறகு என்னிடம் பேச அவருக்குத் தைரியம் வரவில்லை. நான் புதியவள் என அப்போது நினைக்க வில்லை. எல்லாவற்றையும் விட சுயமரியாதை எனக்கு முக்கியம். நீங்கள் உங்களை மதிக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் உங்களை மதிப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT