Published : 20 Nov 2024 02:33 PM
Last Updated : 20 Nov 2024 02:33 PM

‘‘விமர்சனம் என்ற பெயரில் தனிமனித தாக்குதல்’’ - யூடியூப் சேனல்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம்

சென்னை: “திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், கதாநாயகன் மீது தனிமனித தாக்குதல்கள் மற்றும் அவர்கள் மீதான வன்மத்தை பொதுவெளியில் கக்க ஒரு கருவியாக, திரைப்பட விமர்சனத்தை சில ஊடகங்கள் சமீப காலங்களில் பயன்படுத்தி வருவதை வன்மையாக கண்டிக்கிறோம். அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் ரசிகர்களின் பேட்டியை தங்கள் வளாகங்கள் மற்றும் வளாகத்தின் அருகில் எந்த யூடியூப் சேனல்களும் எடுக்க தடை விதித்து, இந்த FDFS பப்ளிக் ரெவியு நடைமுறையை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற ஒத்துழைப்பு தர வேண்டும்,” தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அச்சங்கம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “திரைப்படங்களின் நிறை குறைகளை விமர்சிக்க அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் உரிமை உள்ளது. அது திரைப்படத்தை பற்றி மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், கதாநாயகன் மீது தனிமனித தாக்குதல்கள் மற்றும் அவர்கள் மீது இருக்கும் வன்மத்தை பொதுவெளியில் கக்க ஒரு கருவியாக, திரைப்பட விமர்சனத்தை சில ஊடகங்கள் சமீப காலங்களில் பயன்படுத்தி வருகின்றன. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

திரைத்துறை விமர்சகர்கள் தராசு போல ஒரு திரைப்படத்தின் நிறை குறைகளை சொல்லி, மொத்தத்தில் தங்களின் அபிப்பிராயத்தை சொல்லலாமே தவிர, அதை ஒட்டுமொத்தமாக ஒழிக்கும் விதத்தில் கடுமையாக விமர்சனம் செய்து, தனிமனித தாக்குதல்களும் செய்வது, திரைப்பட துறையை மொத்தமாக அழிக்கும் செயல். அவ்வாறு செய்து வரும் ஊடகவியலாளர்களுக்கு எங்களது கண்டனங்கள்.

ஒரு திரைப்படத்தை பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட கருத்து இருக்கும். விமர்சகர்கள் தங்களின் கருத்துக்களை அனைவரின் கருத்தாக மக்களிடம் கொண்டு செல்வது தவிர்க்கப்பட வேண்டும். ஒரு படம் ஏமாற்றி விட்டதாக இந்தளவுக்கு கொந்தளித்து பேசி வரும் பலர், நம்மைச் சுற்றி நடக்கும் எத்தனையோ அநீதிகளை, அத்துமீறல்களை, மோசடிகளை கண்டும் காணாமல் கடப்பதையும் நாம் பார்த்து வருகிறோம். ஒரு திரைப்படத்தை மூன்று மணி நேரம் பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே பார்க்காமல், அது ஏதோ மொத்த சமுதாயத்துக்கும் அநீதி விளைவித்தது போல பலர் பேசி வருவது அநீதியான செயல்.

விமர்சகர்களுக்கு திரைப்படங்களை விமர்சனம் செய்ய அனைத்து உரிமையும் உள்ளது. ஆனால் தனிப்பட்ட காழ்புணர்ச்சியின் காரணமாக ஒரு திரைப்படத்தை பற்றிய வெறுப்பை ஊடங்களில் விதைக்க கூடாது என்பதை அனைத்து ஊடகவியலாளர்களும் மனதில் வைத்து திரைப்பட விமர்சனங்கள் செய்ய வேண்டும். அதே சமயம், திரையரங்குகளுக்கு வெளியே, திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன், பார்வையாளர்களின் கருத்துக்களை பதிவு செய்து வரும் பல யூடியூப் சேனல்கள், எல்லை மீறி கருத்துக்களை சொல்லும் பார்வையாளர்களை ஊக்குவித்து, அதை தொடர்ந்து வெளியிட்டு, அதிக அளவில் அத்தகைய கருத்துக்களை, ஏதோ அனைத்து பார்வையாளர்களின் ஒட்டுமொத்த கருத்தாக உலக அளவில் அதை எடுத்து செல்வது மிகவும் கண்டிக்க தக்கது.

சமீபத்தில், “கங்குவா” திரைப்படத்துக்கு விமர்சனம் என்ற பெயரில் ஒரு பெரியவர், ஒரு திரையரங்குக்கு வெளியே தனிமனித தாக்குதல்களும், வன்மத்தை கக்கியதும், அனைவரும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அத்தைகைய கருத்துக்களை பதிவு செய்து, மக்களிடம் அதை பெரிய அளவில் கொண்டு சென்ற யூடியூப் சேனல்களை வன்மையாக கண்டிக்கிறோம். சினிமா துறையை ஒட்டுமொத்தமாக அழிக்கும் இந்த செயல்களை உடனே தடுத்து நிறுத்து வேண்டிய கட்டாயம் திரைத்துறையை சார்ந்த அனைவருக்கும் உள்ளது.

திரைப்படங்களை தார்மீக முறையில் விமர்சிக்காமல், தனிமனித தாக்குதல்கள், வன்மத்தை கக்குத்தல் போன்ற செயல்களை ஊடகங்கள் மூலம் செய்யும் நபர்கள் மற்றும் ரசிகர்கள் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க சங்கம் அனைத்து முயற்சிகளையும் எடுக்கவிருக்கிறது. இந்த வருடத்தில் இந்தியன் 2, வேட்டையன் மற்றும் கங்குவா திரைப்படங்களுக்கு பப்ளிக் ரெவியு மூலம் பெருமளவில் பாதிப்பை யூடியூப் சேனல்கள் ஏற்படுத்தியுள்ளன.

அவைகளை இனிமேல் ஊக்குவிக்காமல், திரைத்துறையை சார்ந்த அனைத்து சங்கங்களும் ஒருங்கிணைந்து இந்த முறையை தடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதன் முதல் முயற்சியாக, அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் ரசிகர்களின் பேட்டியை தங்கள் வளாகங்கள் மற்றும் வளாகத்தின் அருகில் எந்த யூடியூப் சேனல்களும் எடுக்க தடை விதித்து, இந்த FDFS பப்ளிக் ரெவியு நடைமுறையை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற ஒத்துழைப்பு தர வேண்டும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x