Published : 18 Nov 2024 10:50 PM
Last Updated : 18 Nov 2024 10:50 PM
சென்னை: இந்த ஆண்டில் மட்டுமே பெரிய படங்களின் வசூல் குறைந்ததுக்கு இந்த யூடியூப் விமர்சகர்கள்தான் காரணம். திரையரங்குகளுக்கு உள்ளேயே சென்று இவர்களே ஆட்களை செட் செய்துவைத்து பேசச் சொல்கிறார்கள் என்று திரையரங்கம் மற்றும் மல்டி பிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஆடியோ செய்தியில் கூறியிருப்பதாவது: “மக்கள் வந்து படம் பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது, நன்றாக இல்லை என்று சொல்வது வேறு. ஆனால் இப்போது ஏராளமான யூடியூப் சேனல்கள் வந்தபிறகு நெகட்டிவ் விமர்சனங்கள் போட்டால்தான் மக்கள் பார்க்கிறார்கள் என்று மோசமாக விமர்சனம் செய்கிறார்கள். ஒருவருக்கு ஒரு படம் பிடிக்கவில்லை என்றால் அது அவருடைய தனிப்பட்ட கருத்து. இளையராஜாவுக்கே முதல் மரியாதை படம் பிடிக்கவில்லை என்று சொன்னதாக நாம் கேள்விப்பட்டிருப்போம். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். ’அன்னக்கிளி’ ‘ஒருதலை ராகம்’, ‘16 வயதினிலே’, ‘சேது’ போன்ற படங்கள் எல்லாம் முதல் வாரம் சரியாக போகாமல் பிறகு வாய்வழியாக பேசப்பட்டு சில்வர் ஜூபிளி கொண்டாடின.
இப்படி 100 உதாரணங்களை சொல்லலாம். ஆனால் இன்று ஒரு படத்தை அதிகாலையிலேயே பார்த்துவிட்டு காதில் ரத்தம் வருகிறது, தலை வலிக்கிறது என்றெல்லாம் மிக மோசமாக பேசுகிறார்கள். இந்த ஆண்டில் மட்டுமே பெரிய படங்களின் வசூல் குறைந்ததுக்கு இந்த யூடியூப் விமர்சகர்கள்தான் காரணம். திரையரங்குகளுக்கு உள்ளேயே சென்று இவர்களே ஆட்களை செட் செய்துவைத்து பேசச் சொல்கிறார்கள். நிறை குறைகளை சேர்த்து சொல்லாமல் ஒட்டுமொத்த படத்தையும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்து சினிமாத் தொழிலையே நாசம் செய்து கொண்டிருக்கிறார்கள். திரையரங்கின் உள்ளே யூடியூப் சேனல்காரர்களை அனுமதிக்கக் கூடாது என்று பலமுறை வலியுறுத்திவிட்டோம். எங்களுடைய படத்தை பொதுவெளியில் 2 வாரங்களுக்கு யாரும் விமர்சனம் செய்யக்கூடாது என்று தயாரிப்பாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும்” இவ்வாறு திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT