Published : 16 Nov 2024 05:54 PM
Last Updated : 16 Nov 2024 05:54 PM

மோகன்லால் நடிகராக அறிமுகமான அதே நாளில் அவர் இயக்கும் படம் ரிலீஸ்

திருவனந்தபுரம்: மோகன்லால் இயக்கியுள்ள ‘பரோஸ்’ மலையாள ஃபேன்டஸி திரைப்படம் வரும் டிசம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் தான் மோகன்லால் நடித்த முதல் படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1980-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி ஃபாசில் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான மலையாள திரைப்படம் ‘மஞ்சிள் விரிஞ்ச பூக்கள்’ (Manjil Virinja Pookkal). மோகன்லால் நடிகராக அறிமுகமான இந்தப் படம் வெளியாகி 44 ஆண்டுகள் கழித்து, டிசம்பர் 25-ம் தேதியான அதே நாளில் அவர் இயக்குநராக அறிமுகமாகும் ‘பரோஸ்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை இயக்குநர் ஃபாசிலைக் கொண்டு அறிவிக்க வைத்துள்ளார் மோகன்லால்.

இது தொடர்பாக இயக்குநர் ஃபாசில் பேசும் வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் மோகன்லால் வெளியிட்டுள்ளார். ஃபாசில் பேசுகையில், “மோகன்லால் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்ததும் நான் ஆச்சரியமடைந்தேன். இந்த தற்செயல் நிகழ்வில் தெய்வத்தின் தலையீடு இருப்பதாக உணர்ந்தேன். அவர் நடிகராக அறிமுகமான அதே நாள் தான் இது என நான் மோகன்லாலிடம் சொன்னபோது அவரும் ஆச்சரியமடைந்தார். தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் உட்பட படக்குழுவினர் அனைவரும் ஆச்சரியமடைந்தனர்” என தெரிவித்துள்ளார்.

பரோஸ்: நடிகர் மோகன்லால் இயக்குநராக அறிமுகமாகும் படம், ‘பரோஸ்’. ஃபேன்டஸி கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் குரு சோமசுந்தரம், மீரா ஜாஸ்மின், ஸ்பானிஷ் நடிகை பாஸ் வேகா , ரபேல் அமர்கோ உட்பட பலர் நடித்துள்ளனர். அந்தோணி பெரும்பாவூர் தயாரிக்கிறார். குழந்தைகளைக் கவரும் விதமாக உருவாகும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லிடியன் நாதஸ்வரம் இசை அமைக்கிறார். 3டி-யில் உருவாகும் இந்தப் படம், பான் இந்தியா முறையில் வெளியாக இருக்கிறது. ஜிஜோ புன்னூஸ் எழுதிய 'பரோஸ்: கார்டியன் ஆஃப் டி'காமா'ஸ் ட்ரெஷர்’ என்ற நாவலின் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.

வாஸ்கோடகாமாவின் மதிப்புமிக்க பொக்கிஷங்களைப் பாதுகாத்த, பாதுகாவலரான பரோஸ் என்பவரின் வாழ்க்கை கதைதான் இந்தப் படம் என்கிறார்கள். இந்தப் படத்தின் ஒரு பகுதி பின்னணி இசை பணிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்துள்ளன. படத்தின் பணிகள் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கின. படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த செப்டம்பர் 12-ம் அறிவிக்கப்பட்டது. பின்னர் அக்டோபருக்கு மாற்றப்பட்டது. தற்போது டிசம்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x