Published : 15 Nov 2024 03:41 PM
Last Updated : 15 Nov 2024 03:41 PM
சென்னை: விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை குடும்ப நல நீதிமன்றம், ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டுள்ளது.
சினிமா எடிட்டர் மோகனின் இளைய மகன் நடிகர் ரவி. இவர் ‘ஜெயம்’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானதால் ‘ஜெயம் ரவி’ என்ற புனைப்பெயருடன் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். இவரது மூத்த சகோதரர் ராஜா திரைப்பட இயக்குநராக உள்ளார். நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009-ம் ஆண்டு சுஜாதா விஜயகுமார் என்ற திரைப்பட தயாரிப்பாளரின் மகளான ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், தனது மனைவியுடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக நடிகர் ஜெயம் ரவி அறிவித்தார். இந்நிலையில், மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், “எனது மனைவியிடம் இருந்து தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும். 2009-ம் ஆண்டு நடைபெற்ற தங்களது திருமணம் செல்லாது என அறிவித்து அந்த பதிவை ரத்து செய்ய வேண்டும்.” எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயம் ரவி நேரில் ஆஜராகி இருந்தார். அவரின் மனைவி ஆர்த்தி காணொலி காட்சி மூலமாக ஆஜராகி இருந்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இருவருக்கும் இடையிலான பிரச்சினை தொடர்பாக குடுநல நீதிமன்றத்தின் சமரச தீர்வு மையத்தின் மூலமாக இன்றே இருவரும் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டார். அங்கு எடுக்கபடும் முடிவு குறித்த விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT