Published : 04 Nov 2024 03:56 PM
Last Updated : 04 Nov 2024 03:56 PM
சென்னை: விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்தில் நடிக்க ‘மம்மி’ பட நடிகர் அர்னால்ட் வோஸ்லூவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு.
‘ஷியாம் சிங்கா ராய்’ இயக்குநர் ராகுல் சங்கரத்தியன் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கவுள்ளார். இதை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் படப்பிடிப்பு 2025-ம் ஆண்டு தொடங்கவுள்ளது. 1850-ம் ஆண்டு நடக்கும் கதையாக இதனை உருவாக்கியுள்ளார் ராகுல் சங்கரத்தியன். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் வோஸ்லூவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள். இவர் உலகளவில் பிரபலமான ‘மம்மி’ படங்களில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சில ஆண்டுகளாக படங்களில் இருந்து விலகி அமெரிக்க டிவி நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வருகிறார். அர்னால்ட் வோஸ்லூவும் கதையைக் கேட்டுவிட்டு நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இது தொடர்பாக படக்குழுவினர் அமைதி காத்து வருகிறார்கள். இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு நிகரான கதாபாத்திரமாக அர்னால்ட் வோஸ்லூவின் கதாபாத்திரம் இருக்கும் என தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT