Published : 01 Nov 2024 06:42 AM
Last Updated : 01 Nov 2024 06:42 AM

“தமிழ் சினிமாவின் பெருமை” - ‘அமரன்’ படத்துக்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பாராட்டு!

சென்னை: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள ’அமரன்’ படத்துக்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது, “மும்பையில் அமரன் படத்தைப் பார்த்தேன், தமிழ் சினிமாவில் ஒரு தயாரிப்பாளராக இருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன. இந்தப் படம் என்னை மிகவும் உணர்ச்சிவசப்படுத்தியது. இந்த அற்புதத்தை கொண்டு வந்த இந்த துறையில் ஒரு பகுதியாக இருப்பதை பாக்கியமாக கருதுகிறேன்.

அசோக் சக்ரா விருது பெற்ற மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை மற்றும் அவரது வீர மரணம், திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் மிகுந்த நம்பகத்தன்மையுடன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியால் திறம்பட திரையில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தப் படம் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாபெரும் வீரனுக்கு ஒரு உண்மையான அர்ப்பணிப்பு. முகுந்தின் வாழ்க்கையை மிகச் சிறப்பாக மறுவடிவமைத்த ராஜ்குமாருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

சிவகார்த்திகேயன் தனது சினிமாப் பயணத்தில் பல படிகள் முன்னேறி, மிகச் சிறப்பாகவும் கச்சிதமாகவும் இந்த பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இது அவரது சினிமா வாழ்க்கையில் மிகச்சிறந்த நடிப்பாக அமையும். அவருக்கு பல விருதுகளையும் அங்கீகாரத்தையும் பெற்றுத்தரும். இந்தப் படத்தின் மூலம் அவர் செய்த சாதனையை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

வாசிக்க > அமரன் Review: சிவகார்த்திகேயனின் ‘புதிய’ பாய்ச்சல் எப்படி?

இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்துக்கு சாய் பல்லவியை தவிர வேறு யாரும் நியாயம் செய்திருக்க முடியாது. படம் முழுவதும் அற்புதமாகவும் துணிச்சலுடன் நடித்திருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சிகளில் பிரமிக்க வைக்கிறார். முகுந்த் வரதராஜனுடன், இந்து ரெபேக்கா வர்கீஸும் ஒரு துணிச்சலான வீராங்கனையாக இருந்ததை படம் சித்தரிக்கிறது.

என் அன்புக்குரிய ஜி.வி. பிரகாஷ் தனது சிறப்பான பின்னணி இசையின் மூலம் படத்தை ஒவ்வொரு காட்சியிலும் தூக்கிப் பிடிக்கிறார். அது படத்தை மிகவும் விறுவிறுப்பானதாகவும், அதே நேரத்தில் பல இடங்களில் மயிர்க்கூச்சரியவும் செய்கிறது. வாழ்த்துகள் ஜி.வி. உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன்.

இந்தப் படத்தை மிகவும் நம்பகத்தன்மையுடன், அதிக பொருட்செலவில் தயாரித்து மேஜர் முகுந்திற்கு உண்மையான அஞ்சலி செலுத்தும் வகையில் படத்தை உருவாக்கிய இந்தியாவின் பெருமைமிகு ஆளுமை கமல்ஹாசன், இணைத் தயாரிப்பாளர் மகேந்திரன் மற்றும் சோனி பிக்சர்ஸ் ஆகியோர் எங்களது வாழ்த்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் உரியவர்கள். இது தமிழ் சினிமாவிம் சிறந்த படங்களில் ஒன்று.

ஒரு எமோஷனலான, விறுவிறுப்பான பயோபிக்கை வழங்கியதற்காக ‘அமரன்’ தமிழ் சினிமாவை மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் பெருமைப்படுத்தும். இது படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் நம் ராணுவ வீரர்களைப் பற்றி பெருமைப்பட வைக்கும்” இவ்வாறு ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x