Published : 15 Oct 2024 03:30 PM
Last Updated : 15 Oct 2024 03:30 PM

இந்திய சைபர் க்ரைம் ஒருங்கிணைப்பு மைய விளம்பர தூதராக ராஷ்மிகா நியமனம் 

மும்பை: இந்திய சைபர் க்ரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் (Indian Cyber Crime Coordination Centre) தேசிய விளம்பர தூதராக நடிகை ராஷ்மிகா மந்தனாவை நியமித்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அண்மையில் ராஷ்மிகாவின் ‘டீப் ஃபேக்’ வீடியோ வெளியானபோது அவர் அதற்கு எதிராக காட்டமாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நியமனம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் ராஷ்மிகா மந்தனா கூறியது: “சைபர் க்ரைம் என்பது உலகம் முழுவதும் உள்ள தனிநபர்கள், வர்த்தர்கள், சமூகங்களை பாதிக்கும் ஆபத்தான மற்றும் பரவலான அச்சுறுத்தலாகும். சைபர் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர் என்ற முறையில், இது தொடர்பான விழிப்புணர்வையும், இணைய குற்றங்களில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகளையும் மக்களிடம் கொண்டு சேர்த்து மாற்றத்தை உருவாக்க அர்பணிப்புடன் செயல்படுவேன்.

இந்த இணைய குற்றங்களை தடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவது மிகவும் முக்கியம். என்னுடைய டீப் ஃபேக் வீடியோ இணையத்தில் வைரலானது ஒரு சைபர் குற்றம் என்பதை அறிந்தேன். அதன்பிறகு, அதற்கு எதிராக போராடவும், இது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் முடிவு செய்தேன். இந்திய அரசாங்கத்திடமிருந்து எனக்கு கிடைத்த ஆதரவுக்கு மகிழ்ச்சி அடைகிறேன். நாம் விழிப்புணர்வுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும்” என்றார்.

இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “ராஷ்மிகாவின் செல்வாக்கு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை சைபர் க்ரைமுக்கு எதிரான தேசிய பிரச்சாரத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கும் என்று உள்துறை அமைச்சகம் நம்பிக்கை கொண்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ இணையத்தில் வைரலானது. இதையடுத்து டெல்லி போலீசார் குற்றவாளியை கைது செய்தனர். அடுத்து ராஷ்மிகா நடிப்பில் ‘புஷ்பா 2’ திரைப்படம் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x