Published : 14 Oct 2024 04:54 PM
Last Updated : 14 Oct 2024 04:54 PM

முன்னாள் மனைவி அளித்த புகாரில் நடிகர் பாலா கைது!

நடிகர் பாலா (கோப்புப் படம்)

கொச்சி: முன்னாள் மனைவி அம்ருதா அளித்த புகாரில் நடிகர் பாலா கொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் பாலா மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழில் ‘அன்பு’, ‘காதல் கிசு கிசு’, ‘கலிங்கா’, அஜித்தின் ‘வீரம்’, ரஜினியின் ‘அண்ணாத்த’ உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் பாலா. இப்போது மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். இவர் இயக்குநர் ‘சிறுத்தை’ சிவாவின் சகோதரர். இவர், பாடகி அம்ருதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 12 வயதில் அவந்திகா என்ற மகள் இருக்கிறார். கருத்து வேறுபாடு காரணமாக பாலாவும் அம்ருதாவும் விவாகரத்து பெற்றனர். அதன் பின் கடந்த 2021-ம் ஆண்டு எலிசபெத் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார் பாலா.

அண்மையில் பாலாவின் மகள் அவந்திகா வெளியிட்ட வீடியோவில், “என் தந்தை என்னை மிகவும் நேசிப்பதாகவும், எனக்கு அதிக பரிசு பொருட்களை வாங்கிக் கொடுத்ததாகவும் கூறி வருகிறார். அது உண்மை இல்லை. என் தந்தையை நேசிக்க எனக்கு சின்ன காரணம் கூட இல்லை. அவர் என்னையும் என் அம்மாவையும் குடித்துவிட்டு டார்ச்சர் செய்தததுதான் கண்முன் வருகிறது. அந்த நேரத்தில் குழந்தை என்பதால் அம்மாவுக்கு என்னால் உதவ முடியவில்லை. என் மீது உண்மையிலேயே பாசமிருந்தால் என் வாழ்க்கையில் குறுக்கீடாதீர்கள்” என்று கூறியிருந்தார்.

இதற்குப் பதிலளித்து பாலா வெளியிட்டுள்ள வீடியோவில், “ மகளே, என்னை அப்பா என்று அழைத்ததற்கு நன்றி. நான் உன்னுடன் வாக்கு வாதம் செய்ய விரும்பவில்லை. ஒருவன் மகளுடன் வாக்குவாதம் செய்தால் அவன் மனிதனே இல்லை. உனக்கு 3 வயதாக இருக்கும்போது நான் பாட்டிலை வீச முயன்றதாகவும் ஐந்து நாட்கள் பட்டினி போட்டதாகவும் கூறியிருக்கிறாய். உன்னுடன் வாக்குவாதம் செய்தால் வெல்லலாம். நீ வெற்றி பெற வேண்டும் என்பதற்காக உன்னிடம் சரணடைகிறேன்” என தெரிவித்தார்.

இந்நிலையில், பாலாவின் முன்னாள் மனைவி அம்ருதா அளித்த புகாரில், “பாலா விவாகரத்து நடைமுறைகளை மீறி எங்களை தொடர்ந்து துன்புறுத்தி வருகிறார். என்னையும், என் 12 வயது மகளையும், பணம் செலுத்தி எடுக்கப்படும் நேர்காணல்கள் மூலமாக தொந்தரவு செய்து வருகிறார்” என குறிப்பிட்டுள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் கொச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த பாலாவை கடவந்தரா காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி பாலா, கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x