Last Updated : 07 Oct, 2024 08:02 AM

1  

Published : 07 Oct 2024 08:02 AM
Last Updated : 07 Oct 2024 08:02 AM

‘பிரதர்’ குடும்பங்கள் கொண்டாடும் படம்! - இயக்குநர் ராஜேஷ்.எம் பேட்டி

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உட்பட சில காதல் காமெடி படங்களை ரசனையோடு தந்தவர் இயக்குநர் ராஜேஷ்.எம். அடுத்து ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா நடித்துள்ள ‘பிரதர்’ படத்தை இயக்கி இருக்கிறார். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. படம் பற்றி அவரிடம் பேசினோம்.

“அழகுராஜா படம் பண்ணும்போது, ஜெயம் ரவியை சந்திச்சு படம் பண்றதுக்கு பேசினேன். அப்ப அவர் ‘ஆதிபகவன்’ பண்ணிட்டிருந்ததால, முடிச்சுட்டு பேசலாம்னு சொன்னார். அப்புறம் ‘மிஸ்டர் லோக்கல்’ பண்ணும்போதும் பேசினேன். அந்த நேரத்துல தொடர்ந்து சில படங்கள்ல கமிட் ஆகியிருந்தார். அதனால அதை முடிச்சுட்டு பண்ணலாம்னு சொன்னார். இடையில சந்திச்சு மூணு ஐடியா சொன்னேன். அதை கேட்டுட்டு, ‘பிரதர்’ கதைக்கு ஓகே சொன்னார். ஏன்னா, அவர் அப்ப கமிட்டான படங்கள் எல்லாமே சீரியஸ் படங்களாக இருந்தது. அதனால குடும்பம் தொடர்பான படம் பண்ணினா நல்லாயிருக்கும்னு சொன்னார். சரின்னு அவருக்கு சொன்ன ஐடியாவை டெவலப் பண்ணி முழுக் கதையா சொன்னேன். பிடிச்சிருந்தது. ஆரம்பிச்சுட்டோம்.

இது அக்கா -தம்பி கதைன்னு சொன்னாங்களே?

ஆமா. ஆனா எல்லோருக்கும் கனெக்ட் ஆகிற மாதிரி காட்சிகள் இருக்கும். ஜெயம் ரவி சாருக்கும் பூமிகாவுக்குமான கெமிஸ்ட்ரியும் ரசிக்கும்படியா இருக்கும். இதுல ஆக்‌ஷன் விஷயங்கள் அதிகம் இருக்காது. ரெண்டுசண்டைக்காட்சிகள்தான். ஃபேமிலி எமோஷன்ஸ், அதுக்குள்ள நடக்கிற சின்ன சின்ன விஷயங்கள்தான் படம். ஊட்டியில நடக்கிற கதை. மொத்தப் படத்தையும் அங்கதான் ஷூட் பண்ணினோம். ஜெயம் ரவி வழக்கறிஞரா வர்றார். பிரியங்கா மோகன், டாக்டர்.

இது மாதிரியான குடும்பக் கதைகளுக்கு ‘காஸ்டிங்’ ரொம்ப முக்கிய மாச்சே?

உண்மைதான். ‘நம்ம வீட்டு பிள்ளை’, ‘கடைக்குட்டி சிங்கம்’ மாதிரியான படம்தான் இதுவும். அந்தப் படங்கள்ல பார்த்தீங்கன்னா, ஒவ்வொரு கதாபாத்திரத்துக்குமான நடிகர்கள் முக்கியமானவங்களா இருந்தாங்க. அதுபோல இதுலயும் வேணும்னு பேசினோம். அப்ப ஒரு கேரக்டருக்கு ராவ் ரமேஷ் சாரை நடிக்க வைக்கலாம்னு முடிவு பண்ணினோம். தெலுங்குல நிறைய படங்கள் பண்ணியிருக்கார். தமிழ்ல ‘ஜெய்பீம்’ல நல்லா பண்ணியிருந்தார். அப்புறம் வழக்கமான அம்மாவா சரண்யா பொன்வண்ணனை நிறைய பார்த்துட்டோம். இதுல அவரை மாடர்ன் அம்மாவா காண்பிச்சிருக்கோம். ஹீரோயினுக்கு கொஞ்சம் சாந்தமான முகம் தேவைப்பட்டதால பிரியங்கா மோகன். ஹீரோவுக்கு அக்காவா பூமிகா. கதை சொல்லும்போது ரொம்ப அவசரத்துல இருந்தாங்க , பூமிகா. 10 நிமிஷம் மட்டும் அவங்க கேரக்டரை கேட்டுட்டு நடிக்கிறேன்னு சொல்லிட்டாங்க. அவங்க கணவரா நட்டி நடிச்சிருக்கார். விடிவி கணேஷ், அச்யுத்குமார், சீதான்னு நிறைய நட்சத்திர பட்டாளம் இருக்கு.

உங்க படங்கள்ல காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும்...இதுல எப்படி?

வழக்கமா என் படங்கள், நட்பு, காதல், ஜாலின்னுதான் இருக்கும். இந்த மாதிரி குடும்ப படங்கள், நான் பண்ணினதே இல்லை. இதுலயும் காமெடி இருக்கு. இப்ப சந்தானம் நடிச்சா, சில காட்சிகளைத் தாண்டி காமெடிக்குன்னு தனியா ஒர்க் அவுட் பண்ணுவோம். ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’யில பார்த்தீங்கன்னா, விமானத்துல போற மாதிரியான காட்சி, காமெடிக்காக ஸ்பாட்ல யோசிச்சதுதான். இந்தப் படத்துல இயல்பா கதையோடு சேர்ந்து ஹியூமர் இருக்கும். ஒட்டுமொத்தமா பார்த்தா இது ஃபேமிலி படம்.

ஜெயம் ரவி, இந்தக் கேரக்டர்ல எப்படி பொருந்தியிருக்கார்?

எல்லா கேரக்டரும் பண்ற ஹீரோக்கள் தமிழ்ல ரொம்ப குறைவாகத்தான் இருக்காங்க. சில ஹீரோக்களுக்கு சில கேரக்டர்கள்தான் சரியா வரும். ஆனா, எல்லாமும் பண்ற நடிகர்கள்ல ஒருத்தரா ஜெயம் ரவி இருக்கார். அவர் நடிச்ச ‘கோமாளி’ பார்த்தீங்கன்னா ஹியூமரா பண்ணியிருப்பார். ‘தனி ஒருவன்’ல மாஸ் ஆக்‌ஷன் பண்ணியிருப்பார். ‘அடங்கமறு’ படத்துல ஃபேமிலி ஆக்‌ஷன். அடுத்து பண்ற ‘ஜீனி’, ‘ஃபேன்டஸி’ ஜானர். இப்படி ஒவ்வொருவிதமா தேர்வு பண்ணி நடிக்கிறதே ஒரு கலைதான். இந்தப் படத்துல அவர் கேரக்டர் பக்காவா பொருந்தியிருக்கு.

ஹாரிஸ் ஜெயராஜ் கூட இரண்டாவது முறையா இணைஞ்சிருக்கீங்க…

ஆமா. ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்துக்குப் பிறகு இதுல இணைஞ்சிருக்கேன். அந்தப் படத்துல பாடல்கள்எல்லாமே ஹிட். ‘வேணாம் மச்சான் வேணாம்’ செம ஹிட்டாச்சு. அதுக்குப்பிறகு சேர்ந்து பண்ண வாய்ப்பு கிடைக்கலை. இந்தப் படத்துக்கு அமைஞ்சது. ரொம்ப முக்கியத்துவம் கொடுத்து இசை அமைச்சிருக்கார். ‘மக்காமிஷி’ பாடல் நல்லா ஹிட்டாகியிருக்கு. எல்லா பாடல்களையும் சிறப்பா கொடுத்திருக்கார். பின்னணி இசையும் மிரட்டலா இருக்கும்.

‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘சிவா மனசுல சக்தி’ படங்களோட அடுத்த பாகம் பண்ணப் போறீங்கன்னு பேச்சு வந்ததே?

‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ பார்ட் 2 பண்ண வாய்ப்பு இல்லை. அதுல ஹீரோவா நடிச்ச உதயநிதி சார் இனி நடிக்கமாட்டார். சந்தானம் ஹீரோவாகிட்டதால இனி அவரும் நண்பனா நடிக்க மாட்டார். அதனால ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ பார்ட் 2-க்கு வாய்ப்பே இல்லை. வேற யாரையும் வச்சு பண்றதுக்கு விருப்பமும் இல்லை. ‘சிவா மனசுல சக்தி’2-ம் பாகம் பண்றதுக்கு வாய்ப்பிருக்கு. அது தொடர்பா பேசிட்டு இருக்கோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x