Published : 02 Oct 2024 04:13 AM
Last Updated : 02 Oct 2024 04:13 AM

இதய ரத்தக் குழாயில் வீக்கம்; ரஜினிகாந்துக்கு ‘ஸ்டென்ட்’ பொருத்தி சிகிச்சை: என்ன நடந்தது?

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் இதய ரத்தக் குழாயில் ஏற்பட்ட வீக்கத்துக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் ‘ஸ்டென்ட்’ பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை சீராகவும், நலமாகவும் உள்ளது. 2 நாட்களில் வீடு திரும்புவார் என்று சென்னை அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதற்கிடையே, ரத்தக் குழாயில் வீக்கம் இருந்ததால், ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி, சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் இரவு சிகிச்சைக்காக அனுமதியானார். நேற்று காலை அவருக்கு ரத்தக் குழாயில் ‘ஸ்டென்ட்’ பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் ஆர்.கே.வெங்கடாசலம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அப்போலோ மருத்துவமனையில் ரஜினிகாந்த் கடந்த 30-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். இதயத்தில் இருந்து ரத்தத்தை உடலின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் மகாதமனியில் (அயோட்டா) வீக்கம் இருந்தது. அறுவை சிகிச்சை இல்லாமல், இடையீட்டு சிகிச்சை மூலம் அதை சரிசெய்ய திட்டமிடப்பட்டது.

முதுநிலை இதய இடையீட்டு சிகிச்சை நிபுணர் சாய் சதீஷ், மகாதமனி வீக்கத்தை சரிசெய்யும் வகையில் அந்த இடத்தில் ‘ஸ்டென்ட்’ கருவியை பொருத்தினார். இது ஒரு ரத்த நாள சீரமைப்பு சிகிச்சை ஆகும். திட்டமிட்டபடி, சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. தற்போது ரஜினிகாந்தின் உடல்நிலை சீராகவும், நலமாகவும் உள்ளது. 2 நாட்களில் அவர் வீடு திரும்புவார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நலம் பெற தலைவர்கள் வாழ்த்து: முதல்வர் ஸ்டாலின் தனது வலைதள பதிவில், ‘மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நண்பர் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற விழைகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர் உதயநிதி, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தவெக தலைவர் விஜய், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சசிகலா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினரும் ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x