Last Updated : 28 Sep, 2024 05:34 PM

1  

Published : 28 Sep 2024 05:34 PM
Last Updated : 28 Sep 2024 05:34 PM

“விஜயகாந்த் மக்கள் சொத்து, எனவே...” - ‘லப்பர் பந்து’ பார்த்த பின் பிரேமலதா நெகிழ்ச்சி 

சென்னை: “லப்பர் பந்து படத்தில் விஜயகாந்த் நேரடியாக இல்லையென்றாலும், அவரை பாடல், ஓவியம் மூலமாக கொண்டு வந்துள்ளார்கள். அதனை மக்கள் கொண்டாடுகிறார்கள். விஜயகாந்த் எங்கள் குடும்ப சொத்து அல்ல, அவர் மக்கள் சொத்து. அவருடைய நினைவுகளை கொண்டாடுவதை வரவேற்கிறோம்” என பிரேமலதா விஜயகாந்த் நெகிழ்ச்சி பட தெரிவித்துள்ளார்.

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளியான படம் ‘லப்பர் பந்து’. தினேஷ், ஹரிஷ் கல்யாண், சுவாசிகா உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் ‘பொட்டு வச்ச தங்கக்குடம்’ என்ற விஜயகாந்த் பட பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் படத்தினை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு, ‘லப்பர் பந்து’ படக்குழுவினர் விஜயகாந்த் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள். அப்போது ‘லப்பர் பந்து’ படத்தினைப் பார்க்க கோரிக்கை விடுத்தார்கள். இதனை ஏற்று விஜயகாந்த் குடும்பத்தினர் நேற்று (செப்.27) ‘லப்பர் பந்து’ படத்தைப் பார்த்தார்கள்.

அதனைத் தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், “பலரும் ’லப்பர் பந்து’ படத்தை பார்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்கள். இன்று தான் எங்களின் குடும்பம், கட்சி சார்பாக இந்தப் படத்தைப் பார்த்தோம். அனைவருக்குமே மகிழ்ச்சி. ஒவ்வொரு காட்சியிலுமே விஜயகாந்த்தின் தாக்கம் இருந்தது. இந்தப் படம் பெரும் வெற்றியடைந்திருப்பதில் மகிழ்ச்சி. தேர்தல் களத்தில் பேசி முடித்தவுடன் ’பொட்டு வச்ச தங்கக் குடம்’ பாடல் தான் போடுவோம். எங்களுடைய வாகனத்தில் இந்தப் பாடல் தான் ஒலிக்கும். எங்கள் கட்சியின் மிக முக்கியமான ஒரு பாடல் இது. அதனை இயக்குநர் சரியான முறையில் உபயோகித்திருக்கிறார். அதற்கு பாராட்டுகள். இதே போன்று சண்முக பாண்டியன் நடிக்கும் படங்களிலும் பாடல்கள் பயன்படுத்தப்படுவதை எதிர்பார்க்கலாம்” என்று தெரிவித்தார்.

‘கோட்’ படத்தில் விஜயகாந்த்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தியது குறித்து பிரேமலதா, “‘கோட்’ படத்தினை நான் பார்க்கவில்லை. மகன்கள் பார்த்துவிட்டு ஏஐ தொழில்நுட்பம் மூலமாக உபயோகத்திருப்பதாக சொன்னார்கள். படத்தின் தொடக்கத்திலேயே வந்துவிடுவதாகவும் கூறினார்கள். விஜயகாந்த் நடித்த ‘ராஜதுரை’ படம் பார்த்த மாதிரியே இருந்ததாக பலரும் சொன்னார்கள். படம் வெற்றியடைந்துவிட்டது, இனி அதைப் பற்றி கருத்து சொல்ல ஒன்றுமில்லை.

‘கோட்’ படத்தில் விஜயகாந்த்தை உபயோகிப்பதற்கு பலமுறை என்னை சந்தித்து பேசி அனுமதி பெற்று தான் உபயோகித்தார்கள். அது முறையான விஷயம். இந்தப் படத்தில் விஜயகாந்த் நேரடியாக இல்லையென்றாலும், அவரை பாடல், ஓவியம் மூலமாக கொண்டு வந்துள்ளார்கள். அதனை மக்கள் கொண்டாடுகிறார்கள். விஜயகாந்த் எங்கள் குடும்ப சொத்து அல்ல, அவர் மக்கள் சொத்து. அவருடைய நினைவுகளை கொண்டாடுவதை வரவேற்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். விஜயகாந்த் வாழ்க்கையை படமாக பண்ணுவது குறித்த கேள்விக்கு, “விஜயகாந்த் வாழ்க்கை வரலாற்றை படமாக பண்ணுவது குறித்த எண்ணம் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x