Published : 22 Sep 2024 10:48 AM
Last Updated : 22 Sep 2024 10:48 AM
புதுக்கோட்டை அருகேயுள்ள வணங்கான்குடி ஊராட்சி மன்றத் தலைவராகத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த கோப்புலிங்கம் (பாலாஜி சக்திவேல்). இந்நிலையில் அந்த ஊராட்சி மன்றத்தை, பட்டியலின மக்கள் மட்டுமே போட்டியிடும் தனி தொகுதியாக அரசு அறிவிக்கிறது. இதனால் தன்னிடம் வேலை செய்யும் அம்பேத்குமாரை (சசிகுமார்) பெயருக்குத் தலைவராக்கிவிட்டு அதிகாரத்தைத் தானே வைத்துக்கொள்கிறார். தாமொரு ரப்பர் ஸ்டாம்ப் என்பதையும் தனக்கும் தனது மக்களுக்கும் அதிகாரத்தின் பயன்கிடைக்கப்போவதில்லை என்பதையும் அறியும்போது, அம்பேத்குமாரும் அவரைச் சேர்ந்தவர்களும் என்ன செய்கிறார்கள் என்பது கதை.
பொதுவாகக் கிராமப் பஞ்சாயத்துகளுக்கு சொந்தமான குளங்கள், புளியந்தோப்புகள், தென்னந் தோப்புகள் ஏலம் விடப்படுவது வழக்கம். ஆனால், பல இடங்களில் ஊராட்சிப் பதவியும் அப்படியொரு நிலையில் இருக்கும் கசப்பான உண்மையைச் சொல்லும் தொடக்கக் காட்சியில் ஆரம்பித்து, பட்டியலின மக்கள் உள்ளாட்சி அதிகாரத்தில் தலையெடுக்க முடியாதபடி அவர்களது வாழ்க்கையின் மீது விழும் அடிகள் தரும் அதிர்ச்சி, கடைசிவரை தொடர்கிறது.
கோயில் மண்டபத்தின் வெளியே விடப்பட்டிருக்கும் விதவிதமான காலணிகள் மீது கேமரா தாவிச் செல்லும் காட்சி, இளக மறுக்கும் சாதிச் செருக்கின் மீது மவுனமாக - ஆனால் - மிக பலமாக - அறைகிறது.
தேர்தல் அறிவிக்கப்பட்டதும் கோப்புலிங்கத்துக்கு வரும் நெருக்கடியும் தொடர்ந்து வரும் காட்சிகளும் முதல் பாதியை விறுவிறுப்பாக நகர்த்துகின்றன. சொந்தச் சாதிக்காரனை அவமானப்படுத்த, தனக்காகக் காலமெல்லாம் உழைக்கும் ஒருவனைப் பயன்படுத்தும் ஆதிக்கச் சாதி மனோபாவம், ‘கூழ்பானை’ என இழிபெயர் சூட்டி அழைக்கிறது. தங்களைச் சார்ந்து பிழைக்கும் பட்டியலின மக்களை எவ்வாறெல்லாம் அடக்குமுறைக்கு ஆளாக்குகிறார்கள், எதிர்ப்பவர்களை என்ன செய்வார்கள் என்பதை உண்மைக்கு நெருக்கமாகச் சித்தரித்திருக்கும் இயக்குநர் சரவணன் பாராட்டுக்குரியவர்.
மெல்ல மெல்ல எதிர்ப்பைக் காட்டியிருக்க வேண்டிய அம்பேத்குமார் கதாபாத்திரம், தனது மக்களின் பாதுகாப்புக் கருதியோ, அல்லது தனதுகுணாதிசயத்தின் விளைவாகவோ மன ரீதியாக எழுச்சி கொள்ளாமல் தேங்கிவிடுவது குறை.
படம் நெடுகிலும் வெள்ளந்தி மனிதனாக சசிகுமார் கவர்கிறார். ஒரு பஞ்சாயத்துத் தலைவராக, சுதந்திர தினத்துக்குப் பள்ளியில் கொடியேற்றும் கனவோடு முதல்நாளே ஒத்திகை பார்க்கும் காட்சியிலும் மறுநாள் யதார்த்தம் வேறாக இருக்க உறைந்து போகும் காட்சியிலும் உருக வைக்கிறார். கோப்புலிங்கமாக வரும் பாலாஜி சக்திவேல் நடிப்பில் மிளிர்கிறார். வட்டார வளர்ச்சி அதிகாரி சமுத்திரக்கனி, சசிகுமார் மனைவி ஸ்ருதி பெரியசாமி, மகனாக வரும் சிறுவன், கோப்புலிங்கத்தின் தந்தை ஜி.எம்.குமார், பாட்டியாக வரும் பெண், இருதரப்பு ஊர் மக்கள் என ஒவ்வொருவரும் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
ஆர்.வி.சரணின் ஒளிப்பதிவு புதுக்கோட்டை வட்டாரத்தை நெருக்கமாகக் காட்டும் அளவுக்கு ஜிப்ரானின் இசை இணையவில்லை.
சாதி ரீதியாகப் பட்டியலின மக்கள் அனுபவித்து வரும் வலிகளைப் பேசும் தலித்தியப் படங்களின் வரிசையில், இதுவரை பேசப்படாத சிக்கலைத் தீவிரமாகவும் ஆரவாரம் இல்லாமலும் - முக்கியமாகப் பிரசார தொனியில் ஆதரவுதேடாமலும் - அழுத்தமான ஆதாரங்களுடன் பேசியிருக்கும் இந்தநந்தன் அரவணைப்புக்கு உரியவன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT