Published : 14 Sep 2024 05:16 PM
Last Updated : 14 Sep 2024 05:16 PM

“திரைத் துறையில் பாதுகாப்பாக உணர்கிறேன், ஆனால்...” - ஷ்ரத்தா ஸ்ரீநாத் பகிர்வு

சென்னை: “அதிர்ஷ்டவசமாக திரைத் துறையில் நான் எந்தவித பாலியல் துன்புறுத்தல்களையும் சந்திக்கவில்லை. அதற்காக மற்றவர்களும் என்னைப் போல எந்தவித துன்புறுத்தல்களையும் எதிர்கொள்ளவில்லை என்று என்னால் சொல்ல முடியாது” என நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அண்மையில் அளித்த பேட்டியில், “நான் திரைத் துறையில் பாதுகாப்பாக உணர்கிறேன். நான் வேலை செய்யும் இடத்துக்கு வெளியில் தான் பாதுகாப்பற்ற சூழலை உணர்கிறேன். ஒரு பார்ட்டியை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்லும்போது டிரைவர் எங்கே பார்க்கிறார் என்பது போல பாதுகாப்பற்ற நிலையை சந்திக்கிறேன். இது போன்ற பிரச்சினையை நான் என்னுடைய 8 வயதிலிருந்தே சந்திக்கிறேன். அதிர்ஷ்டவசமாக திரைத் துறையில் நான் எந்தவித பாலியல் துன்புறுத்தல்களையும் சந்திக்கவில்லை. அதற்காக மற்றவர்களும் என்னைப் போல எந்தவித துன்புறுத்தல்களையும் எதிர்கொள்ளவில்லை என்று என்னால் சொல்ல முடியாது” என்றார்.

படப்பிடிப்பு தளங்களில் பெண்களுக்கான கழிப்பறை வசதி உள்ளிட்ட விஷயங்கள் குறித்து கூறுகையில், “இதுபோன்ற பிரச்சினைகளை நீங்கள் எதிர்கொள்ளும் போது அதனை யாரிடம் சொல்வது என்று கூட தெரியாது. சிலசமயங்கள் நீங்கள் அதனை காலதாமதமாக சொல்லியிருப்பீர்கள். அதனால் பயன் இருக்காது. பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட விஷயங்களை கண்காணிக்க முறையான கட்டமைப்பு தேவை. சிறிய மாற்றங்கள் கூட நமக்கு உதவிகரமாக இருக்கும். நடிகர்களைத் தாண்டி, சிகை அலங்காரம் செய்பவர்கள், ஹேர் ஸ்டைலிஷ், போன்ற தொழிலாளர்களுக்கு முறையான கழிப்பறை வசதிகள் படப்பிடிப்பு தளங்களில் இருக்காது. இதுபோன்ற சிறிய விஷயங்களில் நிகழ்த்தப்படும் மாற்றங்களும் பெரிய அளவில் கைகொடுக்கும். இந்த பிரச்சினைகளுக்கு அனைவரும் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x