Published : 13 Sep 2024 04:23 PM
Last Updated : 13 Sep 2024 04:23 PM
சென்னை: “பெரிய பட்ஜெட்டில் எடுக்கும் படமோ, உச்சத்தில் இருக்கும் நடிகர் நடிக்கும் படமோ, பாக்ஸ் ஆஃபீஸ் வசூலை குவிக்கும் படமோ நல்ல படம் கிடையாது. ஒரு மனிதரை சிறந்த மனிதராக மாற்றக் கூடிய, அல்லது மாற்ற முயற்சிக்க கூடிய படம் தான் சிறந்த படம்” என இயக்குநர் ஹெச்.வினோத் தெரிவித்துள்ளார்.
சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள ‘நந்தன்’ திரைப்படம் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் இயக்குநர் ஹெச்.வினோத். நிகழ்வில் அவர் மேடையில் பேசியது: “இந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்று படத்தின் இயக்குநர் சரவணன் 6 மாதமாக தொடர்ந்து என்னிடம் கேட்டுக் கொண்டே இருந்தார். நான் எஸ்கேப் ஆகிக் கொண்டே இருந்தேன். ஏற்கனவே சசிகுமார் - சரவணன் இணைந்த ‘உடன்பிறப்பே’ திரைப்படம் பயங்கரமான பாச மழையாக இருக்கும். இதிலிருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தேன். ஒருநாள் நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து பார்க்கலாம் என்று முடிவு செய்து பார்த்தோம்.
படத்தில் சசிகுமாரின் தோற்றம் சிறப்பாக இருந்தது. நானும் கிராமத்திலிருந்து வந்தவன் என்றாலும், இந்தப் படத்தில் நடக்கும் விஷயங்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. என்னை பொறுத்தவரை எது நல்ல படம் என்றால், ஒரு பெரிய பட்ஜெட்டில் எடுக்கும் படமோ, உச்சத்தில் இருக்கும் நடிகர் நடிக்கும் படமோ, பாக்ஸ் ஆஃபீஸை குவிக்கும் படமோ நல்ல படம் கிடையாது. ஒரு மனிதரை சிறந்த மனிதராக மாற்றக் கூடிய, அல்லது மாற்ற முயற்சிக்க கூடிய படம் தான் சிறந்த படம் என நான் சொல்வேன். ‘நந்தன்’ நம்மை சிறந்த மனிதராக மாற்ற முயல்கிறது. இந்தப் படம் நல்ல படம். ஆதரவு கொடுங்கள்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT