Last Updated : 07 Sep, 2024 12:36 PM

 

Published : 07 Sep 2024 12:36 PM
Last Updated : 07 Sep 2024 12:36 PM

‘நவ.1 முதல் படப்பிடிப்பு ரத்து என்ற உத்தரவை மறுபரிசீலனை செய்க’ - நடிகர் சங்கம் வலியுறுத்தல்

கோப்புப் படம்

சென்னை: நவம்பர் 1-ம் தேதி முதல் படப்பிடிப்பு ரத்து என்ற தயாரிப்பாளர் சங்க உத்தரவினை மறுபரிசீலனை செய்ய நடிகர் சங்கம் வலியுறுத்தி இருக்கிறது.

நடிகர்கள் சம்பள உயர்வு, ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமம் விற்பனையில் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பேசித் தீர்க்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்தது. இதனை முன்னிட்டு நவம்பர் 1-ம் தேதி முதல் எந்தவொரு படப்பிடிப்பும் நடைபெறாது எனவும், புதிய படங்களுக்கு பூஜை போடப்படாது என தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்தது. இதனால் மீண்டுமொரு வேலைநிறுத்தம் ஏற்படக்கூடிய சூழல் ஏற்பட்டது. இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தி இருக்கிறது.

இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நேற்று (06.09.2024) துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் தலைமையில் ஹேமச்சந்திரன், பிரேம், தாசரதி ஆகியோர் அடங்கிய தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகக்குழு மற்றும் முரளி ராமசாமி தலைமையிலான தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாக குழுவின் இடையே சந்திப்பு நிகழ்ந்தது. கடந்த 18.08.2024 அன்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் நிர்வாகிகள் இடையே நடந்த கலந்தாலோசனைக் கூட்டத்தில், நடிகர்கள்-தயாரிப்பாளர்கள் இடையிலான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான 11 பரிந்துரைகள், தயாரிப்பாளர்கள் சார்பாக வழங்கப்பட்டது.

அதன் மீது தீவிர கலந்தாலோசனைக்கு பின்னர், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக, இரு தரப்பிற்கும் சாதகமான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான 37 பரிந்துரைகளும், தனுஷ் சம்பந்தப்பட்ட சுமூகமான பரஸ்பர தீர்வு அடங்கிய ஆவணங்களும் நேற்றைய சந்திப்பில், தயாரிப்பாளர்கள் சங்க தலைவரான முரளி ராமசாமியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. செப்டம்பர் மாத இறுதிக்குள் பரிந்துரைகளை அளிக்க ஒப்புக்கொண்ட நிலையில், தமிழ்த் திரைத்துறை சார்ந்த தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் அனைத்து தொழிலாளர்களின் பொது நலனை கருத்தில் கொண்டு, இது தொடர்பாக 15 தினங்களிலேயே தென்னிந்திய நடிகர் சங்கம் தங்கள் தரப்பு பரிந்துரைகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக விரைவில் தயாரிப்பாளர்கள்-நடிகர்கள் இடையே ஒரு தீர்மானம் எட்டப்பட்டு, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு இடையிலான ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கிறோம். மேலும் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான பேச்சு வார்த்தைகள் துவங்கி, அதில் கணிசமான முன்னேற்றமும் உள்ளதால், புதிய படங்களுக்கு தற்போது பூஜையிட்டு துவக்கக் கூடாது என்றும், நவம்பர் 1-ஆம் தேதி முதல் எந்த படப்பிடிப்பும் நடக்காது என்றும் வெளியிட்ட அறிவிப்பை உடனடியாக மறுபரிசீலனை செய்து, திரைத்துறை தொழிலாளிகள் எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தொடர்ந்து பணிகள் சுமுகமாக நடைபெற, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வழிவகுக்கும் எனவும் நம்புகிறோம். இவ்வாறு தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x