Published : 04 Sep 2024 07:19 PM
Last Updated : 04 Sep 2024 07:19 PM
சென்னை: நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’ படத்தின் கதைக்கு சொந்தம் கொண்டாடி தொடரப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கில் இயக்குநர் அட்லி, படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படத்தின் கதை தன்னுடையது எனக் கூறி அதற்கு சொந்தம் கொண்டாடி அம்ஜத் மீரான் என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது கூடுதல் ஆதாரங்களை தாக்கல் செய்ய அனுமதி கோரி அம்ஜத் மீரான் கடந்த 2023-ல் மூன்று மனுக்களை தாக்கல் செய்தார்.
இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, ‘பிகில்’ படத்தின் இயக்குநர் அட்லி, ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் அதன் செயல் இயக்குநர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோருக்கு தலா ரூ. 1 லட்சத்தை வழக்கு செலவாக வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் கூடுதல் ஆதாரங்களை சமர்ப்பிக்க மனுதாரருக்கு அனுமதியளித்து இருந்தார். அதன்படி வழக்கு செலவுத்தொகை வழங்கப்படாததால் அந்த வழக்கை தள்ளுபடி செய்து தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து அம்ஜத் மீரான் தரப்பில் உரிய கால அவகாசத்தை தாண்டி 73 நாட்கள் காலதாமதமாக மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக ‘பிகில்’ படத்தின் இயக்குநர் அட்லி, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT