Published : 28 Aug 2024 03:24 PM
Last Updated : 28 Aug 2024 03:24 PM

“பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பெண்கள் நிச்சயம் பேச வேண்டும்” - குஷ்பு கருத்து

குஷ்பு (கோப்புப் படம்)

சென்னை: “பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து இன்று பேசுகிறீர்களோ, நாளை பேசுகிறீர்களோ என்பது முக்கியமல்ல. பேச வேண்டும் அது தான் முக்கியம். உடனடியாக பேசுவது தான், உங்களை அதிலிருந்து மீட்டு, உரிய விசாரணைக்கு வித்திடும்” என நடிகையும் பாஜகவைச் சேர்ந்தவருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

மலையாள திரையுலகில் வெடித்துள்ள பாலியல் புகார்கள் குறித்து குஷ்பு தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “இந்த துறையில் நிலவும் ‘மீடூ’ சூழல் வருத்தமளிக்கிறது. உறுதியாக நின்று வெற்றி பெற்றுள்ள பெண்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். பாலியல் துன்புறுத்தலை வெளிக்கொண்டு வர ஹேமா கமிட்டி தேவையாக இருந்தது. ஆனால் அதனை கமிட்டி முழுமையாக செய்யுமா?. ஒரு துறையில் நிலைத்து நிற்கவும், அடுத்த கட்டங்களுக்கு செல்லவும் பெண்கள் பாலியல் ரீதியாக சமரசம் செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை? ஆண்களும் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள் என்றாலும், ஒப்பீட்டளவில் பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

24 மற்றும் 21 வயதான எனது இரண்டு மகள்களுடனும் இது தொடர்பாக நீண்ட நேரம் உரையாடினேன். அவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் நிலையை புரிந்துகொண்டு அவர்கள் பக்கம் உறுதியாக நிற்கிறார்கள். இன்று பேசுகிறீர்களோ, நாளை பேசுகிறீர்களோ என்பது முக்கியமல்ல. பேச வேண்டும் அது தான் முக்கியம். உடனடியாக பேசுவது தான், உங்களை அதிலிருந்து மீட்டு, உரிய விசாரணைக்கு வித்திடும்.

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களையே குற்றம் சாட்டுவது மேலும் பாதிப்பை அதிகப்படுத்தும். அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்டு, அவர்களுக்கு எமோஷனலான ஆதரவை கொடுப்பது மிகவும் முக்கியம். இந்த பிரச்சினை குறித்து அந்த பெண் ஏன் முன்பே பேசவில்லை என கேட்பதற்கு முன் சூழல்களைப் பற்றி யோசிக்க வேண்டும். எல்லோருக்கும் சரியான சூழல் அமைந்துவிடுவதில்லை. பெண்ணாக, தாயாக இருப்பவர்களுக்கு இதுபோன்ற வன்முறையால் ஏற்படும் காயம் உடல் அளவில் மட்டுமல்ல மனதளவிலும் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்” என்றார்.

மேலும், “என்னுடைய தந்தை கொடுத்த பாலியல் துன்புறுத்தல் குறித்து பேச ஏன் இத்தனை தாமதம் என பலரும் என்னிடம் கேட்டார்கள். முன்கூட்டியே பேசியிருக்க வேண்டும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். என்னுடைய கரியரை வளர்ப்பதற்காக நான் ஒன்றும் அமைதியாக இருக்கவில்லை. மாறாக நான் தடுக்கி விழும்போது என்னை தாங்கி பிடிப்பேன் என்று சொன்னவரால் பாதிக்கப்பட்டேன் என்பது தான் காரணம். தயவு செய்து அனைத்து ஆண்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக துணை நிற்க வேண்டும் என மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். உங்களை மனிதர்களாக வளர்த்தெடுப்பதில், தாய், தங்கை, ஆசிரியர், நண்பர் என பல பெண்கள் பங்கு வகிக்கிறார்கள். வன்முறைக்கு எதிரான போராட்டத்தில் உங்கள் குரல் ஒலிக்கட்டும்” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x