Published : 26 Aug 2024 07:15 PM
Last Updated : 26 Aug 2024 07:15 PM

பாலியல் சர்ச்சை: மலையாள திரைப் பிரபலங்கள் மீது நடிகை மினு முனீர் பரபரப்பு குற்றச்சாட்டு

நடிகை மினு முனீர்

கொச்சி: மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ், மணியன்பிள்ளை ராஜு உள்ளிட்டோர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக நடிகை மினு முனீர் குற்றம் சாட்டியுள்ளார். ஹேமா கமிட்டி அறிக்கைக்குப் பின் நடிகைகள் பலரும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் குறித்து பொதுவெளியில் பகிர்ந்து வருகின்றனர்.

மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி 60-க்கும் மேற்பட்ட நடிகைகள், பெண் கலைஞர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கை ஒன்றைத் தயாரித்தது. அதை, கடந்த 2019-ம் ஆண்டு கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் தாக்கல் செய்தது. 4 ஆண்டுகளாக வெளியிடப்படாமல் இருந்த இந்த அறிக்கை, தகவல் உரிமை ஆணையத்தின் தலையீட்டின் பேரில் சில தினங்களுக்கு முன் வெளியானது. அது வெளியான பின் பல நடிகைகள், தங்களுக்கும் பல்வேறு பாலியல் துன்புறுத்தல்கள் நடந்ததாக தற்போது கூறி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை மினு முனீர் தனது சமூக வலைதளத்தில், “நடிகர் ஜெயசூர்யா, முகேஷ், மணியன்பிள்ளை ராஜு, இடைவேல பாபு (Idavela Babu), சந்திரசேகரன், புரொடக்ஷன் கன்ரோலைச் சேர்ந்த நோபிள் மற்றும் விச்சு ஆகியோர் என்னை பாலியல் ரீதியாகவும், வார்த்தைகள் ரீதியாகவும் துன்புறுத்தினார்கள். 2013-ம் ஆண்டில் ஒரு படத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, இந்த நபர்களால் நான் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளானேன். நான் பொறுத்துப்பார்தேன். என்னால் முடியவில்லை.

அதனால், மலையாள திரையுலகத்திலிருந்து வெளியேறி, சென்னைக்கு குடியேறிவிட்டேன். இது தொடர்பாக மலையாளத்தில் வெளியான பத்திரிகையில் எனது குற்றச்சாட்டு தொடர்பான கட்டுரையும் வெளியானது. ‘அட்ஜெஸ்ட்மென்டுக்கு ஒத்துழைக்க மறுத்த மினு மலையாள சினிமாவிலிருந்து வெளியேறினார்’ என்று அந்த கட்டுரைக்கு தலைப்பிடப்பட்டிருந்தது. நான் அனுபவித்த துன்பங்களுக்கு இப்போது நீதி கேட்டு தற்போது இதனை அனைவரின் கவனத்துக்கும் கொண்டு வந்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, வங்க மொழி நடிகை ஸ்ரீலேகா மித்ரா, பிரபல டைரக்டரும், மலையாள சினிமா அகாடமி தலைவருமான ரஞ்சித் மீது பரபரப்பு புகார் கூறினார். இதை அவர் மறுத்திருந்தார். இருந்தும் சினிமா அகாடமி தலைவர் பொறுப்பிலிருந்து ரஞ்சித் விலகினார். இதேபோல ரேவதி சம்பத் என்ற நடிகை, நடிகர் சங்க பொதுச் செயலாளர் சித்திக் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார். சினிமாவில் வாய்ப்பு தருவதாகக் கூறி பலாத்காரம் செய்ததாகக் கூறியிருந்தார்.

இதையடுத்து ‘அம்மா’ சங்க பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து சித்திக் விலகினார். நடிகர் ரியாஸ் கான் மீது நடிகை ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். த்ரிஷ்யம் படத்தில் நடித்த ஹன்சிபா ஹசன், சோனியா மல்ஹர் உட்பட பலர் மலையாள திரைத் துறையினர் மீது அடுத்தடுத்து பாலியல் புகார்களைத் தெரிவித்துள்ளனர். இது அங்கு நெருக்கடியை ஏற்படுத்திஉள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x