Published : 25 Aug 2024 10:37 AM
Last Updated : 25 Aug 2024 10:37 AM

திரை விமர்சனம்: சாலா

சென்னையின் பின்தங்கிய பகுதியொன்றில் நீண்ட காலமாக மூடப்பட்டுக் கிடக்கிறது ‘பார்வதி பார்’. அதை மீண்டும் திறக்க அரசு ஏல அறிவிப்பு செய்கிறது. அதைக் கைப்பற்றுவதில், ஆள்பலம், அரசியல் செல்வாக்குடன் அப்பகுதியில் வலம் வரும் குணா - தங்கதுரை ஆகிய இரண்டு தாதாக்கள் குழு கடுமையாக மோதிக் கொள்கிறது.

இதற்கிடையில் பள்ளி ஆசிரியரான புனிதா, மாணவர்கள், பெற்றோர்கள் ஆதரவுடன் அந்த மதுக்கூடத்துக்கு எதிராகத் தெருவில் இறங்கிப் போராடுகிறார். குணாவின் தம்பியான சாலா (தீரன்), ரத்தக் களரிகளுக்கு நடுவே, பார்வதி பாரை ஏலம் எடுக்கிறார். அவரால் அதை நடத்த முடிந்ததா, இல்லையா என்பது கதை.

வழக்கமான கேங்ஸ்டர் கதா பாத்திரங்களின் துணைகொண்டு, மது விற்பனையின் பின்னால் இருக்கும் அதிகார அரசியல், குற்றவுலகம் ஆகியவற்றின் வலைப் பின்னல் தொடர்பைத் துணிச்சலாக விரித்து வைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் எஸ்.டி.மணி பால். மிக முக்கியமாக, அரசே மது விற்பனை செய்வதைப் புனிதா கதாபாத்திரம் வழியாகக் கேள்வி கேட்டிருக்கும் விதம் அபாரம்! ‘நல்ல சாராயத்துக்கு எதிரா போராடுகிறதை விட கள்ளச் சாராயத்துக்கு எதிரா போராட லாம்ல?’ என்று தாதா குணாவின் தம்பி கேட்கும்போது, அதற்கு புனிதா சொல்லும் பதில் நச்! ‘மதுவால் வருமானம் நாட்டுக்கு அவமானம்’ என்பதைச் சொல்வதோடு நின்றுவிடாமல், குணா எதிரியால் கொல்லப்படப் போகிறார் என்று பார்வையாளர்கள் பதைபதைப்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது, அவருக்கு எமன் எங்கிருந்து, எந்த வடிவில் வருகிறான் என்பதை சித்தரித்திருக்கும் காட்சி அதிர்ச்சியளிக்கும் யதார்த்தம்.

மதுவால் குடும்பங்கள் எப்படி அழிகின்றன என்பதை வெறும் புள்ளி விவரங்களை அடுக்கிப் போரடிக்காமல், கதாபாத்திரங்களின் வாழ்க்கை வழியாகவும், புரட்டிப் போடும் கிளைமாக்ஸ் காட்சி வழியாகவும் பொட்டில் அறைந்து கூறியிருப்பது உண்மை நிகழ்வுகளின் பிரதிபலிப்பு. கிளைமாக்ஸ் காட்சியைப் படமாக்கிய விதத்துக்காக இயக்குநர், ஒளிப்பதிவாளர் ரவிந்திரநாத் குரு, கலை இயக்குநர் வைரபாலன் ஆகியோரை நிறையவே பாராட்டலாம்.

‘சாலா’வாக வரும் தீரன், புனிதாவாக வரும் ரேஷ்மா வெங்கடேஷ் தொடங்கி படத்தில் வரும் அனைவரும் இயக்குநர் கோரிய நடிப்புப் பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள்.

அதிகாரத்தில் மாறி மாறி அமரும் கட்சிகளைச் சேர்ந்தவர்களே மது ஆலைகளை நடத்துவது, போலி மது, மதுவால் மாணவர்கள் சீரழிவது என மது அரக்கனுக்கு எதிராக அக்கறையுடன் விவாதிக்கிறது படம். அதோடு நின்றுவிடாமல், மதுவின் பாதிப்பு சமூகத்தை எவ்வாறு ஊடுருவிச் செல்கிறது என்பதை அழுத்தமாகச் சித்தரித்த வகையில், குடிமகன்கள் அனைவருக்கும் போட்டுக் காட்ட வேண்டிய படம் இது. சாலா, குறைகளை மீறி தன் நிறைகளால் நிமிர்ந்து நிற்பவன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x